Published : 28 Jan 2023 08:23 AM
Last Updated : 28 Jan 2023 08:23 AM

அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையால் 2 நாட்களில் அதானிக்கு ரூ.4.20 லட்சம் கோடி நஷ்டம்

புதுடெல்லி: அதானி குழுமம் நிதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த புதன்கிழமை அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு சரியத் தொடங்கியது. கடந்த 2 நாட்களில் மட்டும் அதானி நிறுவனங்களின் மதிப்பு ரூ.4.20 லட்சம் கோடி சரிந்துள்ளது.

அதானி என்டர்பிரைசஸ், அதானி டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி, அதானி டிரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்பு நேற்றைய வர்த்தகத்தில் 20% அளவில் சரிந்தன. நிலக்கரி, துறைமுகம், விமான நிலையம், மின்சாரம், எரிவாயு, தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு தளங்களில் அதானி குழுமம் செயல்பட்டு வருகிறது. கரோனாவுக்குப் பிறகான 2 ஆண்டுகளில் அவரது நிறுவனங்களின் மதிப்பு 819% அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக அதானி குழுமத்தின் செயல்பாடுகளை ஆராய்ந்து வந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம், “அதானி குழும நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களின் பங்கு மதிப்பு உயர்வைக் காட்டி மிக அதிக அளவில் கடன் பெற்றுள்ளன. மேலும், அந்நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முறைகேடுகள் செய்துள்ளன. அதானி குடும்ப உறுப்பினர்கள் போலி நிறுவனங்களைத் தொடங்கிவரி ஏய்ப்பிலும், பண மோசடியிலும் ஈடுபட்டுள்ளனர்” என்று தெரிவித்தது.

தங்கள் நிறுவனத்தின் மதிப்பை குலைக்கும் உள்நோக்கத்தில் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டுள்ளது என்று குற்றம்சாட்டிய அதானி குழுமம், ஹிண்டன்பர்க் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக தெரிவித்தது. இதற்கு ஹிண்டன்பர்க் நிறுவனம் பதில் அளித்தது. அதில், “அதானி குழுமம் எங்கள் மீது வழக்குத் தொடர்ந்தால், அதை நாங்கள் வரவேற்கிறோம். எங்கள் அறிக்கையில் உறுதியாக இருக்கிறோம். எங்கள் அறிக்கையில் 88 கேள்விகளை முன்வைத்துள்ளோம். ஆனால், ஒன்றுக்குக்குக்
கூட அதானி பதிலளிக்கவில்லை” என்று தெரிவித்தது.

கண்ணை மூடும் மோடி அரசு: இந்நிலையில் அதானி நிறுவனங்கள் மீது ரிசர்வ் வங்கியும் செபியும் விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். “பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி அதானி குழுமத்தில் ரூ.74,000 கோடி முதலீடு செய்துள்ளது. அதானி குழுமத்துக்கு எஸ்பிஐ மட்டும் 40% கடன் வழங்கியுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் அதானியும் நெருக்கமான உறவில் இருக்கின்றனர். கருப்புப் பணத்துக்கு எதிராக பேசும் மோடி அரசு, ஏன் அதானி குழுமத்தின் முறைகேடுகளுக்கு கண்ணை மூடிக்கொண்டுள்ளது” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x