Published : 25 Jan 2023 04:23 AM
Last Updated : 25 Jan 2023 04:23 AM
கரூர்: நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள உணவு விற்பனை நிலையங்களில், உணவுவகைகளின் விலை 15 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்டுள்ளது.
ரயில் பயணிகளின் வசதிக்காக நாட்டில் உள்ள அனைத்து முக்கிய ரயில் நிலையச் சந்திப்புகள் (ஜங்ஷன்) மற்றும் ரயில் நிலையங்களில் உரிமம் பெற்ற தனியார் உணவு விற்பனை நிலையங்கள்(கேட்டரிங் ஸ்டால்கள்) செயல்படுகின்றன. இவற்றில் இட்லி, பரோட்டா, சப்பாத்தி, பொங்கல், தோசை மற்றும் சாம்பார், தயிர், புளி, எலுமிச்சை சாதங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
ரயில் நிலைய விற்பனை நிலையங்கள் மற்றும் ரயில்கள் நிற்கும்போது கையில் ஏந்தி உணவு விற்பனை செய்வோரிடமும் பயணிகள் உணவு வகைகளை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், ரயில் நிலையங்களில் உள்ள உணவு விற்பனைநிலையங்களில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலை 2008-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.10-க்கு விற்பனை செய்யப்படும் டீ, காபி மற்றும் ரூ.15-க்கு விற்பனை செய்யப்படும் குடிநீர் பாட்டில் ஆகியவை நீங்கலாக எஞ்சிய உணவு வகைகளின் விலையை உயர்த்தி ரயில்வே நிர்வாகம் ஜன.16-ம் தேதி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன்படி, சட்னி, சாம்பாருடன் 2 இட்லிகள் ரூ.13-லிருந்து ரூ.20, மசாலா தோசை ரூ.16-லிருந்து ரூ.25, மெது வடை, மசாலா வடை, ரவை உப்புமா, ஆனியன் தோசை, ஊத்தப்பம், வெங்காய பக்கோடா ஆகியவற்றின் விலை ரூ.17-லிருந்து ரூ.30, வெஜிடபுள் சாண்ட்விச் ரூ.19-லிருந்து ரூ.30, தக்காளி சாதம் ரூ.14-லிருந்து ரூ.20, பொங்கல் ரூ.16-லிருந்து ரூ.25, புளி சாதம் ரூ.21-லிருந்து ரூ.35, தயிர் சாதம் ரூ.18-லிருந்தும், எலுமிச்சை சாதம் ரூ.19-லிருந்தும் ரூ.30, தேங்காய் சாதம் ரூ.17-லிருந்து ரூ.25, சாம்பார் சாதம் ரூ.20-லிருந்து ரூ.30, சைவ குருமாவுடன் 2 பரோட்டாக்கள் அல்லது 4 சப்பாத்திகள் ரூ.29-லிருந்து ரூ.45 என விலை உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய விலைப் பட்டியலின்படி, உணவுப் பொருட்கள் அனைத்தும் ரூ.5-ன் மடங்குகளில் முடியும் வகையில் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக கரூர் ரயில் நிலைய முதன்மை வணிக ஆய்வாளர் சிட்டிபாபு கூறும்போது, ‘‘ரயில் நிலைய கேட்டரிங் ஸ்டால்களில் உணவு வகைகளின் விலை 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால், கரூர் ரயில் நிலைய சந்திப்பில் உள்ள 4 கடைகளில் உணவு வகைகளின் விலைப்பட்டியலை மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. விலைப் பட்டியல் மாற்றப்பட்டவுடன், உயர்த்தப்பட்ட புதிய விலையில் உணவு வகைகள் விற்பனை செய்யப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT