Published : 23 Jan 2023 03:10 PM
Last Updated : 23 Jan 2023 03:10 PM
புதுடெல்லி: பிரபல உணவு டெலிவரி நிறுவனமான ஜொமாட்டோவின் உணவு டெலிவரி ஊழியர் ஒருவர் வாடிக்கையாளரிடம் “அடுத்த முறை நீங்கள் ஆர்டர் செய்யும் உணவுக்கு ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டாம்; கேஷ் ஆன் டெலிவரி கொடுத்தால் போதும். அதுவும் நீங்கள் கொடுக்க வேண்டிய கட்டணத்தில் பாதியைக் கொடுத்தால் போதும்” என்று கூறியதை சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் அம்பலப்படுத்தியுள்ளார்.
இது குறித்து லிங்க்ட் இன் தளத்தில் வினய சதி என்பவர் எழுதியாவது: ஜொமாட்டோ நிறுவனத்தில் நடப்பதை அறிந்து அதிர்ச்சியில் என் உடல் சிலிர்க்கிறது. நேற்று நான் பர்கர் கிங் பர்கர்களை ஜொமேட்டோ மூலம் ஆர்டர் செய்தேன். அதற்காக நான் உரிய தொகையை ஆன்லைனில் செலுத்தினேன். 30-ல் இருந்து 40 நிமிடங்களில் ஜொமேட்டோ டெலிவரி ஊழியர் வந்தார்.
அவர் என்னிடம் எனக்கான பார்செலைக் கொடுத்துவிட்டு, “சார் அடுத்தமுறை ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டாம்” என்றார். நான் “ஏன் ப்ரதர்?” என்றேன். அடுத்த முறை நீங்கள் 700 ரூபாய் முதல் 800 ரூபாய் மதிப்பிலான உணவை ஆர்டர் செய்துவிட்டு சிஓடி க்ளிக் செய்தீர்கள் என்றால், எனக்கு வெறும் ரூ.200 கொடுத்தால் போதும்” என்றார். மேலும், “ஜொமேட்டோவில் நான் நீங்கள் ஆர்டரை எடுக்க விருப்பமில்லை என்று சொல்லிவிட்டீர்கள் என்று ஃபீட்பேக் கொடுத்துவிடுவேன். 1000 ரூபாய் மதிப்பிலான உணவை நீங்கள் ரூ.200, 300-க்கும் பெற்றால் ருசியும் அனுபவிக்கலாம், விலையும் குறைவுதானே சார் என்றார்.
இப்போது விஷயம் என்னவென்றால், தீபீந்தர் கோயல்... நீங்கள் இதைப் பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது என்று சொன்னால் நீங்கள் ஐஐஎம் முன்னாள் மாணவர் என்று சொல்வதில் எந்த அர்த்தமும் இல்லை.
அந்த இளைஞர் அப்படிச் சொன்னபோது என் முன் இரண்டு வாய்ப்புகள்தான் இருந்தன. ஒன்று நான் அந்த இளைஞர் சொன்னதுபோல் செய்வது. இன்னொன்று இந்த மோசடியை அம்பலப்படுத்துவது. ஒரு தொழில்முனைவோராக எனக்கு இரண்டாவது வாய்ப்பு சரியானதாகப்பட்டது. அதனால் நான் அந்த வாய்ப்பை கையில் எடுத்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதற்குப் பதிலளித்த கோயல், “இந்த மோசடி பற்றி எனக்குத் தெரியும். இதில் உள்ள ஓட்டைகளை சரி செய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்று கூறியுள்ளார். அவருடைய இந்த பதில் அதிர்ச்சியளிப்பதாக நெட்டிசன்கள் பலர் பின்னூட்டம் பதிவிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT