Published : 17 Dec 2016 11:25 AM
Last Updated : 17 Dec 2016 11:25 AM
என்ன சார், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிவிட்டீர்களா? பலரிடம் அப்பணம் செலவழிக்கப்படாமல் வீட்டிலேயே தூங்கிக்கொண்டிருந்து வெளியில் எங்குமே `செல்லாத’ நோட்டுகளாக இருந்தன. அதனால்தான் அதை ‘செல்லாத’ நோட்டுகள் என்றார்களோ என்னவோ. இப்பொழுது அது வங்கிக்கு எடுத்துச்செல்லப்பட்டு ‘செல்லும்’ நோட்டுகள் ஆகியிருக்கிறது.
அதை விடுங்கள். இந்த வார மேட்டருக்கு வருவோம். செல்லாத நோட்டை மாற்றினீர்களே, அப்படியே உங்கள் பிசினஸில் செல்லாத உத்திகள் ஒன்றிரண்டு இருக்குமே. அதை எப்பொழுது மாற்றலாம் என்றிருக்கிறீர்கள்? பண மதிப்பு நீக்க (டீமானிடைசேஷன்) பிரச்சினையில் கடை வியாபாரம் குறைந்து, பிசினஸ் டல்லடித்து, தொழிலுக்கு பாதிப்பு என்று பலர் கூறுவது கேட்கிறது. என்ன புலம்பியும் பிரயோஜனமில்லை. முடிவெடுக்கப்பட்டது எடுக்கப்பட்டதுதான். இன்னும் சொல்லப் போனால் இது முடிவு அல்ல. நல்ல மாற்றங்களின் ஆரம்பம் என்று நினைத்து இதை எப்படி சமாளித்து விற்பனையைக் கூட்டுவது என்று சிந்திப்பதே புத்திசாலித்தனம். அதற்கான சில ஐடியாக்களைத்தான் அலசப்போகிறோம்.
சில்லறை தட்டுப்பாட்டினால் வியாபாரம் குறைந்துவிட்டது என்று புலம்பும் கடைகள் இன்னமும் கிரெடிட் கார்டை ஒப்புக் கொள்வ தில்லை. சின்ன கடை, சிறிய பிசினஸ் என்று சால்ஜாப்பு சொல்கிறார்கள். கிரெடிட் கார்டை ஒப்புக்கொண்டாலும் 2% எக்ஸ்ட்ரா, 3% அதிகம் வசூலிக்கிறார்கள். கிரெடிட் கார்டும், டிஜிட்டல் பேமெண்ட் முறைகளும்தான் இனி சாசுவதம் என்பதை அனைவரும் உணரவேண்டும். பழ வியாபாரி முதல் பழைய பேப்பர் கடைக்காரர் வரை ஏதாவது சால்ஜாப்பு கூறி கிரெடிட் கார்டை ஒப்புக்கொள்ளாமல் இருந்தால் ரேஷன் கார்டு கூட இனி கிடைக்காது என்பதை உணர்ந்தால் உசிதம்.
உங்கள் தொழிலுக்கு வெப்சைட் இல்லை என்றால் அதைச் செய்யுங்கள். வெளியில் சொல்ல முடியாத விஷயங்களுக்கே பல்லாயிரம் வெப்சைட் இருக்கும் இக்காலத்தில் தொழில்கள் இணையதளம் இல்லாமல் இருப்பது பஞ்ச மாபாதகம். இணையதளம் உருவாக்குவதோடு அதில் ஈ-காமர்ஸ் வசதி செய்து மக்களை உங்கள் வெப்சைட்டிலிருந்தே வாங்கச் செய்யும் வழியை தேடுங்கள். மார்க்கெட் போகாமல் வீட்டில் மல்லாக்க படுத்து ஷாப்பிங் செய்ய மக்கள் பழகி வருகிறார்கள். போதாததற்கு பொருளாதாரமே டிஜிட்டல் மயமாகி வருகிறது. இனியும் ஈ-காமர்ஸ் வசதி செய்யாத தொழில்கள் ஈ, காகா இல்லாத காமர்ஸ்தான் செய்யவேண்டியிருக்கும்!
டீமானிடைசேஷனிற்கு பிறகு ஜவுளி கடை போன்றவற்றில் பணம் கொடுத்து வாங்குபவர்கள் குறைந்து கிரெடிட் கார்டுகள் மூலம் வாங்குபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆனால் இன்னமும் பலர் கிரெடிட் கார்டை சும்மா பந்தாவிற்கு வாங்கி ஸ்டைலாக பர்ஸில் வைத்து உபயோகிக்காமல் பணம் தந்தே பொருள் வாங்கி வருகிறார்கள். அவர்களும் டீமானிடைசேஷனிற்குப் பிறகு கடைக்கு சென்று பொருள் வாங்குவதை குறைத்துவிட்டனர்.
அவர்களை கடைக்குள் கவர்ந்திழுத்து பொருள் வாங்க வைக்க கிரெடிட் கார்டில் வாங்கு பவர்களுக்கு சிறப்புத் தள்ளுபடி அளியுங்கள். கிரெடிட் கார்டில் வாங்கினால் வாங்கும் அளவிற்கேற்ப ஆச்சரியமான பரிசுகள் என்று அறிவித்து பாருங்கள். ஆசை யாரை விட்டது. கணவர் மனம் கரையவில்லை என்றாலும் அவர் மனைவியும் குழந்தைகளும் அவரை குண்டுக்கட்டாய் கடைக்கு இழுத்து வந்து வாங்க வைக்கும் சாத்தியக்கூறு இருக்கிறதே!
நல்லெண்ணெய் போன்ற பொருள்களின் விற்பனை குறைந்திருக்கிறது. அதிக விலை என்பதால் நல்லெண்ணெயை விட விலை குறைந்த ரீஃபைண்ட் ஆயில், பாமாயில் வகையறாக்களுக்கு மக்கள் மாறுவதை பார்க்கமுடிகிறது. இது போன்ற பிராண்டுகள் விற்பனையை மேம்படுத்த விளம்பரத்தை மட்டுமே நாடுவதை விட சிறந்த வழி உண்டு. விலை அதிகமான நல்லெண்ணெய் கம்பெனிகள் தங்கள் பிராண்டின் சின்ன சைஸ் பேக்குகளை அறிமுகம் செய்யலாம். பணத் தட்டுப்பாட்டால் செலவை குறைக்கவே பலர் இந்த பிராண்டுகளை விட்டு விலை குறைந்த பிராண்டுகளை நாடுகின்றனர். அவர்களை மீண்டும் கவர்ந்திழுக்கவும் விலை குறைந்த பிராண்டுகளுக்கு மாறாமல் தடுக்கவும் கம்பெனிகள் தங்கள் பிராண்டுகளை சின்ன சைஸ் பேக்கை சிறிய விலையில் விற்கலாம். இருநூறு ரூபாய் கொடுத்து ஒரு லிட்டர் வாங்க யோசிப்பவர்கள் கால் லிட்டர் பேக், அல்லது அதற்கும் குறைவான சைஸ் பேக்குகளை வாங்கலாமே. இதை ‘லோ பிக் அப் ப்ரைஸ்’ உத்தி என்பார்கள்.
ஃபர்னிச்சர் போன்ற பொருள்களை விற்கும் கடைகளிலும் விற்பனை குறைந்திருக்கிறது. ஐந்து ரூபாய் ஃபினாயில் வாங்கவே ஐந்து நிமிடம் யோசிக்கும் குடிமகனா சில்லரை தட்டுப்பாடு நிலவும் நேரத்தில் ஐயாயிரம் ரூபாய்க்கு ஃபர்னிச்சர் வாங்குவார்? பணம் எடுக்க முடியவில்லையே என்ற விரக்தியில் வராத தூக்கத்திற்கு எதற்கு புதிய கட்டிலை வாங்கிக்கொண்டு என்று விட்டுவிடுகிறார். இல்லாத பணம் வைக்க எதற்கு புதிய கப்போர்டு என்று கண்டுகொள்ளாமல் இருக்கிறார். இது போன்ற கடைகள் ஃபைனான்ஸ் கம்பெனிகளோடு ஒப்பந்தம் செய்து தங்கள் பொருள்களை தவணை முறையில் விற்கும் வழியைத் தேடலாம்.
ஏடிஎம்களில் தான் பணம் இல்லையே தவிர வங்கிகளில் பணம் கொட்டி கிடக்கிறது. இதனால் விரைவில் வட்டி விகிதம் குறையும் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள். இதனால் கட்டவேண்டிய இஎம்ஐ குறைவதால் தவணை முறையில் வாங்குவது எளிதாகிறது. விற்பனை கூடவும் வழி பிறக்கிறது.
சில்லரை தட்டுப்பாட்டினால் மக்கள் கடைகளுக்கு வருவது குறைந்திருக்கிறது என்பது சரிதான். அவர்கள் கடைகளுக்கு வராவிட்டால் என்ன, நீங்கள் அவர்கள் வீடு தேடி சென்று உங்கள் பொருள்களை விற்க முடியுமா என்று பாருங்களேன். இது போன்ற நேரடி விற்பனை முறை கடந்த ஐந்து வருடத்தில் 20% அதிகரித்திருக்கிறது என்று ‘ஃபிக்கி-கேபிம்ஜி’ அறிக்கை கூறுகிறது. முயற்சி செய்து பாருங்களேன்.
டீமானிடைசேஷன் பற்றி தான் ஊரே பேசிக்கொண்டிருக்கிறது. அந்த பேச்சை பிராண்டோடு கோர்த்து விளம்பரம் செய்ய முடியுமா என்று சிந்தியுங்கள். ‘கர்ல் ஆன்’ என்ற தலையணை பிராண்ட் தன்னுடைய பத்திரிகை விளம்பரத்தில் ஒருவர் நிம்மதியாய் கர்ல் ஆன் தலையணையில் தலைவைத்து தூங்குவது போல் காண்பித்து ‘பணம் பாங்கில் இருக்கவேண்டும், தலையனை அடியில் அல்ல’ என்று விளம்பரம் செய்தது. மக்கள் கண்ணில் பட்டென்று பட்டு சட்டென்று ஒட்டிக்கொண்டிருக்கிறது. உங்கள் பிராண்டை அப்படி விளம்பரப்படுத்த முடியுமா என்று கிரியேடிவாய் சிந்தியுங்களேன்.
கொல்கத்தாவில் ஒரு பேக்கரி எல்லாவற்றை யும் விட ஒரு படி மேலே போய்விட்டது. டீமானிடைசேஷன் அறிவிக்கப்பட்ட நவம்பர் எட்டாம் தேதிக்கு அடுத்த நாள் முதல் தன் பேக்கரியில் பழைய 500, 1000 நோட்டுக்களைப் போலவே டார்க் சாக்லேட் கேக்குகளை அழகாக வடிவமைத்து விற்கத் துவங்கியது. ஒரு கேக்கின் விலை நூறு ரூபாய். வங்கியில்தான் பணத்தை மாற்ற முடியவில்லை, அட்லீஸ்ட் வீட்டிற்கு போகும் வழியில் இந்த கேக்கையாவது வாங்கிக்கொண்டு போவோம் என்று அந்த பேக்கரியில் கூட்டம் அலை மோதுகிறாம். சமயோஜிதமாய் சிந்தித்து சப்ஜாடாய் சம்பாதிக்கிறது பேக்கரி!
இங்கு நாம் அலசிய ஐடியாக்கள் உங்கள் பிராண்டுக்கு பயனில்லாமல் இருக்கலாம். விஷயம் அதுவல்ல. டீமானிடைசேஷனால் விளைந்திருக்கும் குறைந்த கால கஷ்டங்களை வெறுமனே பழைய பணத்தை போல் எண்ணிக்கொண்டிருக்காமல் அதை மூளை என்ற பாங்கில் தந்து புதிய ஐடியாக்களாக மாற்றி வியாபாரத்தை பெருக்கும் வழிகளை தேடுங்கள். விற்பனையை கூட்ட புதிய வழிகளை நாடுங்கள். கண்டிப்பாய் வெற்றி பெறுவீர்கள். லாபம் அடைவீர்கள். அந்த லாபத்திற்குண்டான வரியை செலுத்தி வங்கி பிதுங்கும் அளவிற்கு செதுக்குங்கள். யார் உங்களை கேட்கப் போகிறார்கள்!
தொடர்புக்கு: satheeshkrishnamurthy@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT