Published : 20 Jan 2023 09:08 AM
Last Updated : 20 Jan 2023 09:08 AM
தாவோஸ்: சுவிட்சர்லாந்தில் உள்ள தாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் சர்வதேச அளவில் அரசியல் தலைவர்கள், பொருளாதார நிபுணர்கள், சிந்தனையாளர்கள், பிரபலங்கள் கலந்துகொண்டு விவாதித்து வருகின்றனர். இம்மாநாட்டில் கடந்த புதன்கிழமை அன்று ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோலஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், “இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறேன்” என்று தெரிவித்தார்.
சென்ற ஆண்டு ஜெர்மனி இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதற்கான உரையாடலைத் தொடங்கியது. மேலும், முதலீடு பாதுகாப்புத் தொடர்பாகவும் புவிசார் குறியீடு தொடர்பாகவும் உரையாடலை முன்னெடுத்தது. இந்நிலையில் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை உறுதிசெய்யும் நடவடிக்கையில் ஜெர்மனி தீவிரமாக இறங்கியுள்ளது.
இது குறித்து ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஸ்கோலஸ் கூறுகையில், “கனடா, கொரியா, ஜப்பான்,நியூசிலாந்து, சிலியைத் தொடர்ந்து இந்தியா மற்றும் இந்தோனேசியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள என்னாலான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன்” என்று தெரிவித்தார்.
தடையற்ற வர்த்தகம் என்பது இரு நாடுகளிடையில் ஏற்றுமதி - இறக்குமதி நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கி, தாராள வர்த்தகத்தை மேற்கொள்வதாகும். தற்போது ஐரோப்பிய ஒன்றியம் அந்நாட்டு சிறு நிறுவனங்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் வாய்ப்புகளை இந்தத் தடையற்ற ஒப்பந்தங்கள் மூலம் உருவாக்கி வருகிறது.
இந்த ஆண்டு மாநாட்டில் காலநிலை மாற்றத்தை மையப்படுத்தி விவாதிக்கப்படுகிறது. காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் குறித்து அவர் கூறுகையில், “ஜெர்மனியும் ஏனைய ஐரோப்பிய நாடுகளும் மாற்று எரிசக்தி நோக்கி தீவிரமாக நகர்ந்து வருகின்றன. ரஷ்யா - உக்ரைன் போர் இந்த நகர்வை தீவிரப்படுத்தியுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்தியாவின் மூன்றாவது மிகப் பெரிய வர்த்தக பங்குதாரராக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளது. 2021-ல் இந்தியா, ஐரோப்பிய யூனியனுடன் 88 பில்லியன் யூரோ (ரூ.7.74 லட்சம் கோடி) மதிப்பில் வர்த்தகம் மேற்கொண்டுள்ளது. இது இந்தியாவின் ஒட்டுமொத்த சர்வதேச வர்த்தகத்தில் 11 சதவீதம் ஆகும். அதேபோல், ஐரோப்பிய ஒன்றியத்தின் 10-வது பெரிய வர்த்தக பங்குதாரராக இந்தியா உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT