Published : 18 Jan 2023 04:48 PM
Last Updated : 18 Jan 2023 04:48 PM
வாஷிங்டன்: தகவல் தொழில்நுட்ப துறை ஜாம்பவானான மைக்ரோசாஃப்ட் கார்ப் மிகப் பெரிய ஆட்குறைப்பு நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மற்றும் அக்டோபரில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்திலேயே மீண்டும் ஆட்குறைப்புக்கு அந்நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது.
உலகம் முழுவதும் இந்நிறுவனத்தில் 2 லட்சம் ஊழியர்கள் உள்ள நிலையில், கடந்த ஆண்டு ஆட்குறைப்பால் 1 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு இம்மாதம் திட்டமிடப்பட்டுள்ள ஆட்குறைப்பு கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அலுவலக வட்டாரங்கள் பெயர் தெரிவிக்காமல் சுட்டிக் காட்டியுள்ளன. இந்த முறை மைக்ரோசாஃப்ட் கார்ப்பின் பொறியியல் பிரிவிலேயே அதிக வேலையிழப்புகள் இருக்கும் என்று தெரிகிறது.
அண்மையில், ஆட்குறைப்பில் ஈடுபட்ட அமேசான், மெட்டா ப்ளாட்ஃபார்ம்ஸ், சேல்ஸ்ஃபோர்ஸ் போன்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் பணியாளர்களை நீக்கிய நிலையில் வாஷிங்கடனை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மைக்ரோசாஃப்ட் அந்த அளவுக்கு ஆட்குறைப்பு செய்யாது என்றும், இருப்பினும் இதுவரை இல்லாத அளவிலான ஆட்குறைப்பாக அந்நிறுவனம் மேற்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு மைக்ரோசாஃப்ட் பங்குகள் 23 சதவீதம் சரிந்தது. நேற்று (செவ்வாய்க்கிழமை) நியூயார்க் பங்குச் சந்தையில் மைக்ரோசாஃப்ட் பங்கு மதிப்பு 230.35 டாலராக இருந்தது. இந்த மதிப்பு கடந்த ஆண்டு சரிவில் இருந்து மீண்டதற்கான எந்த அறிகுறியும் காட்டாததால் ஆட்குறைப்பு அவசியமாவது அலுவல தரப்பு கூறுகின்றது. அதேபோல் இந்தாண்டு பணிக்கு புதிதாக ஆள் சேர்ப்பதும் மூன்றில் ஒரு பங்காக குறையும் என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT