Published : 12 Jan 2023 01:51 PM
Last Updated : 12 Jan 2023 01:51 PM
சான்ஃப்ரான்சிஸ்கோ: சிங்கப்பூரில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் ஆசிய - பசிபிக் மண்டலத்துக்கான தலைமை அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் இனி வீட்டிலிருந்து பணி புரியலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஊழியர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. செலவினங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிங்கப்பூரில் கேப்பிட்டா க்ரீன் என்ற பிரம்மாண்டமான கட்டிடத்தில் தான் ட்விட்டரின் ஆசிய - பசிபிக் தலைமை அலுவலகம் இயங்கிவந்தது. இந்நிலையில் இன்று (ஜன.12) முதல் அங்குள்ள அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்து பணி புரியமாறும் அடுத்த தகவல் வரும்வரை அதையே தொடருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் தான் ஆசிய பசிபிக் மண்டலத்துக்கான முக்கிய ஊழியர்களில் ஒருவர் நூர் அசார் பின் அயோப் பணி நீக்கம் செய்யப்பட்டார். அவர் பணியில் சேர்ந்த வெகு குறுகிய காலத்திலேயே பணி இழப்பையும் சந்திக்க நேர்ந்தது.
இத்தகையச் சூழலில் ஆசிய - பசிபிக் பிராந்திய தலைமை அலுவலகமே காலியாகிறது. சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமையக கட்டிடத்திற்கான கடந்த மாத வாடகையை இன்னும் செலுத்தாததால் உரிமையாளர் வழக்கு தொடர்ந்துள்ளார். அதேபோல் சிங்கப்பூர் அலுவலகத்தை காலி செய்வதற்கும் வாடகை செலுத்தாததே காரணம் என்று கூறப்படுகிறது.
அதிக நஷ்டம்; கின்னஸ் சாதனை! - எலான் மஸ்கின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் மட்டும் 182 பில்லியன் டாலர் (ரூ.15 லட்சம் கோடி) சரிந்துள்ளது. 2021 நவம்பரில் எலான் மஸ்கின் சொத்து மதிப்பு 320 பில்லியன் டாலராக (ரூ.26 லட்சம் கோடி) இருந்தது. இது இம்மாதத்தில் 137 பில்லியன் டாலராக (ரூ.11 லட்சம் கோடி) சரிந்துள்ளது. உலக அளவில் மிகக் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய இழப்பை சந்தித்தவர்கள் எவருமில்லை. பெரும் நஷ்டத்தைச் சந்தித்த மனிதர் என்ற வகையில் எலான் மஸ்க் கின்னஸ் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு (ரூ.3.6 லட்சம் கோடி) வாங்க விரும்புவதாக எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் தெரிவித்தார். பல்வேறு சிக்கலுக்குப் பிறகு, இறுதியாக ட்விட்டர் நிறுவனத்தை கடந்த அக்டோபர் மாதம் அவர் கையகப்படுத்தினார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். 3,500 ஊழியர்களுக்கு மேல் அவர் பணிநீக்கம் செய்தார். இந்நிலையில், தற்போது சிங்கப்பூரில் உள்ள ட்விட்டர் நிறுவனத்தின் ஆசிய - பசிபிக் மண்டலத்துக்கான தலைமை அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் இனி வீட்டிலிருந்து பணிபுரியலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT