Published : 10 Jul 2014 10:00 AM
Last Updated : 10 Jul 2014 10:00 AM
கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியும் பணவீக்க போக்கும் பற்றி சில நாட்களுக்கு முன்பு பார்த்தோம். இன்று இந்திய விவசாயத்துறையின் வளர்ச்சி பற்றி பார்ப்போம்.
அட்டவணையை பார்க்கும் போது இந்திய விவசாயத்துறை எப்போதுமே நிலையில்லாத வளர்ச்சியுடன்தான் இருக்கிறது என்று தெரிகிறது. மற்ற துறைகளில் உள்ள ஏற்றத்தாழ்வைவிட இத்துறையில் ஏற்றத்தாழ்வு அதிகம். பாசன வசதிகள் பெருகிவிட்டன, உயர்ந்த விதைகள், அதிக உரங்கள், நவீன தொழில்நுட்பம், அதிக ஆதாரவிலைகள் என்று பல கூறப்பட்டாலும், இன்னமும் பருவமழையின் தாக்கத்திலிருந்து விவசாயம் தப்பவில்லை.
இந்த வருடம் எல் நினோ தாக்கத்தால் தென்மேற்கு பருவமழை குறைவாக பொழிந்து விவசாய உற்பத்தியை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் 2002-03, 2008-09 ஆண்டுகளில் எல் நினோ ஏற்பட்டபோது விவசாய வளர்ச்சி முறையே -6.6%, 0.8% என்ற அளவில் இருந்தது.
தொழில் மற்றும் சேவை துறைகளில் வருவாய் நிலையாக இருக்க, விவசாய உற்பத்தி, குறிப்பாக உணவு பொருட்கள் குறையும் போதெல்லாம், பணவீக்கம் கடுமையாகும். மேலும் விவசாயத்தை இன்னும் பெரும்பகுதி மக்கள் சார்ந்திருப்பதால், இத்துறையின் சுணக்கம், விவசாயிகள், விவசாய தொழிலாளர்களின் வருவாயைக் குறைத்து, மற்ற துறை பொருட்களின் தேவையையும் குறைத்துவிடும். எனவே, பணவீக்கத்தை கட்டுப்படுத்த, உணவு பாதுகாப்பை உறுதி செய்ய, மற்ற துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்த விவசாயத்துறையின் பங்களிப்பு பெருக வேண்டும்.
விவசாயமும், அதனுடன் ஒப்பிடக்கூடிய மீன், கால்நடை, போன்ற துறைகளின் அமைப்பை பார்க்கும்போது, பிரச்சினைகளை கையாள்வதில் உள்ள சிக்கல் புரியும். விவசாய உற்பத்தி முழுக்க முழுக்க தனியார் துறை சார்ந்தது.
எனவே இதில் உற்பத்தியை தனி விவசாயி மட்டுமே நிர்ணயிக்க வேண்டும். ஆனால் இத்துறையைச் சுற்றியுள்ள பலவற்றை அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. பாசனவசதி, மின்சாரம், உரமானியம், உணவு தானியங்களின் ஆதார விலைகள், உணவு கையிருப்பு, போன்றவற்றை மத்திய மாநில அரசுகள் செய்யவேண்டும். இந்த அரசுகளின் முடிவுகளின் அடிப்படையில்தான் விவசாயி உற்பத்தி செய்வதை நிர்ணயிக்கிறார்.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக, விவசாயத்துறையில், குறிப்பாக பாசன வசதியை மேம்படுத்துவதில் அரசின் முதலீடு குறைந்துள்ளது. இதனை ஈடு செய்ய தனியார் துறை விவசாயிகள் ஆழ்துளை கிணறுகளிலும் அதற்கான பம்புகளிலும் முதலீடு செய்துள்ளனர். சேமிப்பு கிடங்குகள் உருவாக்குவதில் அரசின் கவனம் இல்லை. தனியார் துறையிலும் இதற்கு போதுமான முதலீடு இல்லை.
எனவே, உற்பத்திக்கு பிறகான மதிப்பு கூட்டல் நடைபெறாமல், விவசாய உற்பத்தி பயனில்லாமல் போகிறது. அதே நேரத்தில், சந்தையை ஒழுங்கு படுத்துவதிலும் பல சிக்கல்கள் உள்ளன. குறிப்பாக காய், கனிகளின் மொத்த வியாபார சந்தைகள் நாட்டின் ஒரு சில இடங்களில் இருக்க, அங்குள்ள வியாபாரிகள் அவற்றை கட்டுப்படுத்த, விவசாயியும் பயனடையவில்லை, நுகர்வோரும் பொருளை பெறவில்லை. புது சிந்தனையுடன், விவசாய பொருட்களின் சந்தைகளை மாற்றிஅமைக்கவேண்டும்.
இது தொடர்பான சட்டங்கள், மத்திய மாநில அரசுகளால் திருத்தப்பட்டு, விவசாயின் நன்மையை மையமாகக்கொண்டு சந்தையை ஒழுங்குபடுத்தவேண்டும். எனவே மத்திய மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து செயல்பட்டால்தான் விவசாயத்துறை பிரச்சினைகளை தீர்க்கமுடியும். குஜராத்தில் விவசாய வளர்ச்சியை உயர்த்தியதாக கூறும் மோடி, மத்திய அரசின் செயல்பாட்டுடன், மாநில அரசுகளின் ஒத்துழைப்பையும் பெற்றால் மட்டுமே இந்திய விவசாயத்துறையை உயர்த்தமுடியும்.
விவசாயத்துறைக்கு அதிக நிதி ஒதுக்குவது என்பது ஆரம்பம்தான், திட்டங்கள் முழு பயனளிக்கவேண்டுமெனில், அது மாநில அரசுகளின் ஒத்துழைப்பினால் மட்டுமே முடியும். மாநிலங்களுக்கிடையே உள்ள நதி நீர் பிரச்சினைகளும் இதில் சேர்ந்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT