Published : 23 Dec 2016 11:11 AM
Last Updated : 23 Dec 2016 11:11 AM
புகழ்பெற்ற சுய முன்னேற்ற ஆசிரியரான “பிரையன் டிரேசி” அவர்களின் மற்றுமொரு சிறந்த படைப்பே “மாஸ்டர் யுவர் டைம், மாஸ்டர் யுவர் லைப்” என்னும் இந்தப் புத்தகம். நேர மேலாண்மையே, நமது ஒட்டுமொத்த வாழ்க்கையின் மேலாண்மை என்பதே இதன் சாரம்சம். அதாவது நமது வாழ்வின் அதிக முக்கியத்துவம் வாய்ந்த நிலைகளில், நமது நேரத்தை சரியான வழியில் உபயோகப்படுத்தும்போது, நாம் நினைத்ததைவிடவும் அதிகமாக, விரைவாக, எளிதாக வெற்றிகளை நம் வசப்படுத்த முடிகின்றது.
வாழ்க்கையின் தரம்!
நமது வாழ்க்கையின் தரத்தை பெரும்பாலும், நேர மேலாண்மையை நாம் எவ்வாறு கையாளுகிறோம் என்பதே தீர்மானிக்கிறது என்கிறார் டிரேசி. மேலும், நேர மேலாண்மையானது நமது கட்டுப்பாட்டில் இல்லாதபோது, மற்ற செயல்பாடுகளும் நமது கட்டுப்பாட்டில் வருவது கடினமானதாகவே இருக்கும்.
அதிர்ஷ்டவசமாக பணக்காரர் களுக்கும், வெற்றிகரமானவர்களுக்கும் மற்றவர்களைப்போலவே ஒரு நாளுக்கு 24 மணிநேரம் மட்டுமே. இதில் வெற்றிகரமான மனிதர்களுக்கும், மற்றவர்களுக்கும் உள்ள வித்தியாசம், வெற்றியாளர்கள் தங்களுக்கான குறைவான வாய்ப்புகள் மற்றும் குறைந்த திறன் ஆகியவற்றைப் பயன்படுத்தி, மற்றவர்களைவிட அதிகப்படியான வெற்றிகளை தங்கள் வசப்படுத்துகின்றனர். இதற்கு காரணம், அவர்கள் தங்களுடைய நேரத்தை சிறந்த முறையிலும், அதிக பயனுள்ள வழிகளிலும் பயன்படுத்துவதே என்கிறார் ஆசிரியர்.
திட்டமிடல் அவசியம்!
எந்தவொரு செயலிலும் சரியான திட்டமிடல் என்பது தேவையற்ற காலவிரயத்தை தடுக்கும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. வெற்றியாளர்கள் தெளிவான இலக்குகளையும், அதற்கான திட்டங்களையும் கொண்டே ஒவ்வொரு நாளிலும் தங்களது செயல்பாடுகளை மேற்கொள்கின்றனர். அவர்களுக்கு, தாங்கள் யார், தங்களுக்கு என்ன தேவை, எங்கு செல்கிறோம் போன்ற விஷயங்களில் தெளிவான புரிதல் உண்டு. இதனாலேயே சாதாரண மனிதர்களை விட, சராசரியாக பத்து மடங்கு வெற்றிகளை அவர்களால் பெறமுடிகின்றது என்கிறது ஒரு ஆய்வு முடிவு.
வெற்றிச் சூத்திரம்!
பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்களிடம் ஆசிரியரால் கொண்டு சேர்க்கப்பட்ட வெற்றிச் சூத்திரம் இது. இலக்கினை அடைவதற்கான ஏழு நிலைகளைக் கொண்ட இந்த சூத்திரத்தால் எழுபதுக்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர் பயனடைந்துள்ளதாக குறிபிட்டுள்ளார் ஆசிரியர்.
முதலில், நமக்கு என்ன வேண்டும்? என்பதை தெளிவாக வரையறை செய்துக்கொள்ள வேண்டும். பெரும் பாலானோர் இதைச் செய்வதில்லை என்கிறார் ஆசிரியர். இரண்டாவதாக, இலக்கிற்கான திட்டம் மற்றும் அளவீடு வேண்டும். மூன்றாவதாக, இலக்கிற்கான காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும். நீண்டகால இலக்காக இருப்பின், சிறு சிறு செயல்பாடுகளுக்கான வருட, மாத, வார மற்றும் நாட்களுக்கான பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளலாம். நான்காவதாக, இலக்கு தொடர்பான விஷயங்களை பட்டியலிடுவது. அதாவது நினைத்தது, கற்றுக்கொண்டது, படித்தது, கேட்டது என அனைத்தையும் பட்டியலில் கொண்டுவர வேண்டும்.
ஐந்தாவதாக, பட்டியலில் உள்ளவற்றை முறைப்படி வரிசைப்படுத்த வேண்டும். முதலாவது செயல், இரண்டாவது செயல் என தொடங்கி இலக்கிற்கான இறுதி செயல்பாடு வரை சரியான வரிசைப்படுத்தல் மிகவும் அவசியம். ஆறாவதாக, இலக்கிற்கான முதல் செயல்பாட்டினை தொடங்குவது. அது எதுவாயினும் உடனடியாக செயல்பட ஆரம்பித்துவிட வேண்டும் என்கிறார் ஆசிரியர். ஏழாவதாக, இலக்கை நோக்கிய பயணத்திற்காக தினமும் ஏதாவது ஒரு செயலைச் செய்துக்கொண்டே இருப்பது. வாரத்தின் ஏழு நாட்களும், வருடத்தின் 365 நாட்களும், சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ எதையாவது செய்துகொண்டே இருக்க வேண்டும். அச்செயல்பாடு ஒவ்வொரு படியாக இலக்கினை நோக்கி முன்னேறுவதாக இருக்க வேண்டும்.
இன்றைய இடர்பாடுகள்!
எவ்வளவுதான் திட்டமிட்டு செயல் பட்டாலும், சிக்கல்கள் என்ற ஒன்று அனைத்து செயல்களுக்கும் உண்டல் லவா?. ஆம், அதுவும் இன்றைய நவீன உலகில் அப்படிப்பட்ட இடர்பாடுகளுக்கு பஞ்சமேயில்லை என்கிறார் ஆசிரியர். மேலும் இது செயல்வேகத்தை கட்டுப் படுத்துதல், நம்பிக்கையை சீரழித்தல், கனவுகளை சிதைத்தல் போன்றவற் றிற்கு வழிவகுப்பது வருத்தமான ஒன்று.
இன்றைய இன்டர்நெட் உலகம் பேஸ்புக், யூடியூப், கூகுள், ட்விட்டர், வாட்ஸ்ஆப் என பரந்துவிரிந்ததாக உள்ளது. அதுவும், இந்த 2016-ம் ஆண்டுவரை தோராயமாக 12 லட்சம் செயலிகள் இருப்பதாக சொல்கின்றது ஒரு புள்ளிவிபரம். இவற்றில் பெரும்பாலானவை நேரத்தை வீணடிக்கும் பொழுதுபோக்கிற்கான விஷயங்களே. சராசரியாக இன்றைய இளைஞர் ஒருவர் ஒரு நாளைக்கு சுமார் மூன்றரை மணிநேரத்தை இம்மாதிரி யான விஷயங்களுக்காகப் பயன் படுத்துவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
முடிவில்லா பயணம்!
கற்றல் என்பது முடிவற்ற, ஒரு தொடர்ச்சியான பயணம். உலக மக்களில் சுமார் 20% பேர் தொடர்ந்து கற்பவர்களாக இருக்கிறார்கள். படித்தல், ஆய்வு மற்றும் புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்துதல் என தொடர்ச்சியான செயல்பாட்டினைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். புதிய விஷயங்களைக் கற்கும் திறனும், போட்டியாளர்களைவிட விரைவாக திட்டங்களை செயல்படுத்தும் ஆற்றலும் வெற்றியாளர்களின் அவசியமான குணங்களாக அறியப்படுகின்றது.
நமக்கு நாமே!
நமது தனிப்பட்ட செயல்களுக்கு மட்டுமல்ல, நாம் பணிபுரியும் நிறுவனத் தின் நம்முடைய அனைத்து பணி களுக்கும் நாமே முதலாளி. ஆம், இந்த மனப்பாங்கே நம்மை பொறுப்பான வராக, திறம்பட செயல்படவைக்கின்றது என்கிறார் ஆசிரியர். நமக்கு யார் சம்பளம் தருகிறார்கள் என்பதெல்லாம் முக்கியமில்லை. நமது பணி என்னும் நிறுவனத்திற்கு நாமே தலைவர் மற்றும் நாமே பணியாளர். நமது செயல்பாடே நிறுவனத்தின் உற்பத்திப்பொருள். நிறுவனத்திற்கான நமது பங்களிப்பை பொறுத்தது நமக்கான வெகுமதி.
நேர முதலீடு!
நேரத்தை பயனுள்ளதாக முதலீடு செய்வதன்மூலம் பெரும் வெற்றிகளைப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துக்கொள்ள முடியும் என்கிறார் டிரேசி. ஒரு வாரத்திற்கு நூற்று அறுபத்தெட்டு மணிநேரங்கள். சராசரி மனிதனின் பணி நேரம், ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் (வாரத்திற்கு நாற்பது மணிநேரம்); தூக்கத்திற்கு ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் (வாரத்திற்கு ஐம்பத்தாறு மணிநேரம்); அலங்காரம், உணவு மற்றும் பயணத்திற்கு, ஒரு நாளைக்கு நான்கு மணிநேரம் (வாரத்திற்கு இருபத்தெட்டு மணிநேரம்). இவை அனைத்திற்குமான மொத்த அளவு, வாரத்திற்கு நூற்று இருபத்திநான்கு மணிநேரங்கள். ஆக, மீதமிருக்கும் நாற்பத்து நான்கு மணிநேரங்களே முதலீட்டிற்கான நேரங்கள்.
இந்த உதிரி நேரங்களை தொடர்ச்சியாக புதிய விஷயங்களை கற்றுக்கொள்வதற்கும், திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும் ஏற்ற வகையில் முதலீடு செய்ய வேண்டும். இந்த கூடுதல் திறனும், அறிவும் நமது வெற்றியை அதிகரிப்பதற்கான வாய்ப்பாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
நேரம் குறித்த சிந்தனைகளை வளர்த்துக்கொள்வது, நமது வாழ்க்கையை சீர்படுத்தும் மிக முக்கியமான செயல். சரியான செயல்களுக்கு சரியான முறையில் நேரத்தை பயன்படுத்தி, நேர மேலாண்மையை நம் வசப்படுத்த வேண்டுமானால், இந்தப் புத்தகத்தைப் படிப்பதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குவோம்.
தொடர்புக்கு: p.krishnakumar@jsb.ac.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT