Published : 07 Jan 2023 09:10 AM
Last Updated : 07 Jan 2023 09:10 AM
புதுடெல்லி: டாலருக்குப் பதிலாக ரூபாயில் ஏற்றுமதி - இறக்குமதி வர்த்தகம் செய்வது தொடர்பாக தெற்காசிய நாடுகளுடன் ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் சக்திகாந்த தாஸ் பேசுகையில், “டாலருக்குப் பதிலாக ரூபாயில் வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்பை இந்தியா உருவாக்கி வருகிறது. இந்தக் கட்டமைப்பு வரும் ஆண்டுகளில் மிகுந்த முக்கியத்துவம் பெறும். ரூபாயில் வர்த்தகம் செய்வது தொடர்பாக தெற்காசிய நாடுகளுடன் ரிசர்வ் வங்கியும் மத்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.
தற்போது இந்தியா அதன் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியை பெரும்பான்மையாக டாலரில் மேற்கொண்டுவருகிறது. இதனால், இறக்குமதி அதிகமாகும் சமயத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்துவிடுகிறது. மேலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைகிறது. இது தவிர்த்து, அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா வர்த்தகத்தில் ஈடுபடுவதும் சிக்கல் நிறைந்ததாக உள்ளது.
இந்தப் போக்கை மாற்றி அமைக்கும் பொருட்டு, ரிசர்வ் வங்கி ஏற்றுமதி - இறக்குமதி தொடர்பான பணப்பரிவர்த்தனையை ரூபாயி லேயே மேற்கொள்வதற்கான கட்ட மைப்பை உருவாக்கும் முயற்சியை கடந்த ஆண்டு ஜூலை மாதம் முன்னெடுத்தது. இந்திய வங்கிகள் வெளிநாடுகளில் வோஸ்ட்ரோ கணக்குகள் திறப்பதன் மூலம் வெளிநாடுகளுடன் ரூபாயில் வர்த்தகம் செய்ய முடியும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
வோஸ்ட்ரோ கணக்கு மூலம் இந்திய இறக்குமதியாளர்கள், டாலருக்குப் பதிலாக ரூபாயில் செலுத்த முடியும். அதேபோல் ஏற்று மதியாளர்கள் அவர்களுக்குரிய தொகையை எதிர்நாட்டிலிருந்து ரூபாயிலேயே பெற்று கொள்ள முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT