Published : 24 Dec 2016 11:00 AM
Last Updated : 24 Dec 2016 11:00 AM

தொழில் ரகசியம்: அறிவின் சாபம் பிடிக்காமல் இருக்கட்டும்

குவாண்டம் மெக்கானிக்ஸ் பற்றி அரை மணி நேரம் விவரித்த பின்னரும் கேட்டவருக்கு ஒரு எழவும் புரியவில்லை என்றால் ‘இது கூட புரியாதா’ என்று பேசியவருக்கு கோபம் வருகிறது. எக்ஸல் ஷீட்டில் போன மாத விற்பனை டேட்டாவை ஏற்றி கம்பெனி யின் டீலர்கள் செயல்பாட்டை டிசெண் டிங் ஆர்டரில் தயாரிக்கும் விதத்தை எக்சல் தெரியாத ஊழியரிடம் விளக்கி அதை அவர் சரியாய் செய்யாத போது அவரை பெஞ்சில் நிற்க வைத்து பிரம்பால் அடிக்கத் தோன்றுகிறது.

இந்த கோபங்களுக்குக் காரணம் ஒரு சாபம். கேட்டவர்களுக்கு அல்ல. கூறியவர்களுக்கு. பெயர் ‘அறிவின் சாபம்’ (Curse of Knowledge).

நமக்குத் தெரிந்த ஒன்று மற்றவருக்குத் தெரியாமல் இருக்கும் போது அதைப் பற்றி நமக்குத் தெரியாமல் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை மறக்கிறோம் பாருங்கள், அதுதான் அறிவின் சாபம். இந்த வியாதியினால் உங்களுக்கு தெரிந்த ஒன்றைப் பற்றி மற்றவரின் கோணத்திலிருந்து பார்க்க மறுக்கிறீர்கள். அதை அவருக்கு புரியும்படி கூற தவறுகிறீர்கள். அறிவின் சாபத்தால் உங்களுக்குத் தெரிவது மற்றவருக்கும் தெரிந்திருக்கும் என்று கருதி நீங்கள் சொல்வது அவருக்குப் புரியும், புரிந்துவிடும் என்று முடிவு செய்கிறீர்கள். அவருக்குப் புரியாத போது அவர் மீது கோபம் கொண்டு சபிக்கிறீர்கள். சாபம் உங்கள் அறிவைத் தான் பீடித்திருக்கிறது என்பதை மறந்து!

காலின், ஜார்ஜ் மற்றும் மார்டின் என்ற பொருளாதார நிபுணர்கள் தான் ‘Journal of Political Economy’ என்ற ஜர்னலில் ‘The Curse of Knowledge in Economic Settings’ என்ற கட்டுரையில் இக்கோட்பாட்டை முதலில் படைத்தார் கள். தங்கள் பொருளின் அதிக தரத்தை அறிந்திருக்கும் கம்பெனிகள் அதன் தரத்திற்கேற்ப அதிக விலை நிர்ணயிக் கிறார்கள். தங்களுக்குத் தெரிந்திருக்கும் தரம் வாங்குபவர்களுக்கும் தெரியும், சொன்னால் புரியும் என்று நினைக் கிறார்கள். ஆனால் அதை உணராது விலை அதிகம் என்று அப்பொருளை வாடிக்கையாளர்கள் ஒதுக்கும் போது கம்பெனிக்காரர்கள் கோபப்படுவதை அறிவின் சாபம் என்று வர்ணித்தார்கள்.

அதே போல் தரம் குறைந்த பொருளை விற்கும் போது கம்பெனிகள் விலையை குறைத்து விற்பதும் அறிவின் சாபத்தால். பொருள் விலை அதன் தரத்தையும் அதை தெரியாதவர்கள் அறியாமையையும் சார்ந்து அமைகிறது என்கிறார்கள்.

மனதில் ஆழமாய் பதிந்த உண்மை நிகழ்வை உணர்ச்சி பொங்கும் கதை யாக்கி, உணர்வோடு திரைக்கதை எழுதி ஒவ்வொரு சீனையும் செதுக்கி சிலை போல் வடித்து பெரும் எதிர் பார்ப்புடன் திரையிட்ட படத்தை மக்களும் விமர்சகர்களும் ஒதுக்கித் தள்ளும் போது படத்தின் இயக்குனருக்கு ஏற்படும் கோபமும் அறிவின் சாபமே.

ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்ட பின் அது தெரியாமல் இருந்த மன நிலையை மீண்டும் நினைத்துப் பார்க்க முடிவதில்லை. இதுவே அறிவின் சாபத்திற்கு ஆதாரம்!

இதை ஆய்வு மூலம் விளக்கி பிஎச்.டி பெற்றார் ஸ்டான்போர்டு பல் கலைக்கழகத்தின் ‘எலிசபெத் நியூடன்’. ஆய்வில் கலந்துகொண்டவர்களை ‘தட்டுபவர்’, ‘கேட்பவர்’ என்று இரண் டாகப் பிரித்தார். தட்டுபவரிடம் பிரபல பாடல் ஒன்றை மனதிற்குள் பாடிக் கொண்டே டேபிளில் அதற்கேற்ப தாளம் போடச் சொன்னார். கேட்பவரிடம் தட்டப் படும் தாளத்தை கொண்டு அது எந்த பாடல் என்பதை கூறுங்கள் என்றார். பாடல் என்றால் பாடாவதி படத்தில் யாருக்கும் தெரியாத பாடல் அல்ல. ரொம்பவே பாப்புலரான பாடல்கள்.

ஆய்வில் கலந்துகொண்டவர்கள் மொத்தம் 120 பேர். அனைவரும் மனதில் பாடலை பாடிக்கொண்டே டேபிளில் தாளம் போட அது எந்த பாடல் என்று சரியாய் கூறியவர்கள் மூன்று பேர் மட்டுமே! 120க்கு மூன்று. அதாவது 2.5% முறை தான் சரியான விடையளிக்கப்பட்டது.

தாளம் போடும் போது அதற்கான பாடல் தட்டுபவர் மனதில் மட்டுமே ஒலிக்கிறது. கேட்பவருக்குத் தாளம் தான் கேட்குமே ஒழிய பாடல் கேட்பதில்லை. டேபிளில் தட்டும் ஓசை அவருக்கு யாரோ கதவை தட்டுவது போல்தான் இருக்கிறது. மிஞ்சிப் போனால் ‘யாருப்பா வாசல்ல’ என்று கேட்கத் தோன்றுகிறது. ஆனால் மனதில் பாடிக்கொண்டே தட்டுபவருக்கு இத்தனை ஈசியான பாட்டு தெரியாதா என்று கோபம் வருகிறது. ‘செவிட்டுப் பொணமே, நான் தட்ற பாட்டு தெரியல? உன் மூஞ்சியில தொங்கறது காதா, காஞ்சு போன கருவாடா’ என்று கத்தத் தோன்றுகிறது.

இது ரொம்பவே குழந்தைத்தனமான ஆய்வு போல் தெரிகிறதா? யாராவது உங்களிடம் சிக்கினால் நீங்களும் மனதில் பாடிக்கொண்டே தாளம் போட்டு பாருங்கள். கேட்டவர் என்ன பாடல் என்று தெரியாமல் முழிக்கும் போது உங்களுக்கும் அசாத்திய கோபம் வருவதை உணர்வீர்கள்.

பாடலை மனதில் பாடும் நமக்கு அது என்ன பாடல் என்று தெரியவில்லை என்றால் மற்றவருக்கு எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்ப்பதில்லை. நினைத்துப் பார்க்கவும் முடிவதில்லை. நம் அறிவே நமக்கு சாபம் இடுகிறது. நமக்குத் தெரிந்த அறிவை மற்றவருடன் பங்கிட முடிவதில்லை. ஏனெனில் நம் மனநிலையை அவர் மனதில் உருவாக்க நம்மால் முடிவதில்லை.

இந்த தட்டுபவர்-கேட்பவர் கதை தினம் நம் வாழ்க்கையிலும் வியாபாரத் திலும் வெகு விமரிசையாக நடக்கிறது. பள்ளியில் டீச்சர் தட்டும் தாளம் மாண வர்களுக்கு புரிவதில்லை. விளம்பரத் தில் மார்க்கெட்டர் தட்டும் ஒசை வாடிக்கையாளர்களுக்குப் புரிவ தில்லை. அலுவலகத்தில் மேலாளர் தட்டும் ஒலி ஊழியர்களுக்குப் புரிவ தில்லை. இவ்வளவு ஏன், வாராவாரம் இப்பகுதியில் நான் தட்டுகிறேன், உங்களுக்கு ஏதாவது புரிகிறதா!

இக்கோட்பாட்டை இன்னமும் கூட எளிமையாக விளக்குகிறார் உளவி யாளர் ‘டாம் ஸ்ட்ரேஃபோர்ட்’. ‘உங்கள் மனதின் எழும் எண்ணங்களை எழுதி விட்டு அதை சரி பார்க்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் எழுதிய வார்த்தைகளில் தவறு இருந்தால் அது உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை. ஏனெனில் நீங்கள் எழுதியதை படிக்கும் போது அதன் அர்த்தம் மட்டுமே உங்கள் அறிவில் படுகிறதே ஒழிய வார்த்தைகளில் இருக்கும் தவறுகள் கண்ணில் படுவதில்லை.!

வாழ்க்கையிலும் வியாபாரத்திலும் வெறுமனே டேபிளில் தட்டிக்கொண்டே இருந்தால் பத்தாது. கேட்பவரின் காதுகளாக உங்கள் காதுகளை பாவியுங்கள். அறிவின் சாபத்திலிருந்து மீள நம் அறிவை சாபம் பீடித்திருக்கும் என்பதை உணருங்கள்.

போதையில் இருப்பவனை ஸ்டெடியாய் இருக்கிறோம் என்று எப்படி அவன் போதையே அவனை தவறாய் நினைக்க வைத்து வண்டியை ஓட்டிக்கொண்டு வீடு போய் சேரும் அசட்டு தைரியத்தை தந்து அவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கிறதோ அதே போல் நம் அறிவும் அதை பீடித்திருக்கும் சாபமும் நம் கண்களை மறைக்கும் என்பதை உணருங்கள். இதை உணர்ந்தாலே பாதி சாப விமோசனம் கிடைக்கும். மீதிக்கு மட்டுமே கொஞ்சம் மெனெக்கெட வேண்டியிருக்கும்!

தொடர்புக்கு: satheeshkrishnamurthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x