Published : 03 Jan 2023 07:09 PM
Last Updated : 03 Jan 2023 07:09 PM

இந்தியாவை விட 6 மடங்கு எரிபொருட்களை ரஷ்யாவிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் வாங்கி உள்ளன: ஜெய்சங்கர்

ஜெய்சங்கர் | கோப்புப் படம்

நியூயார்க்: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வாங்கியதைவிட 6 மடங்கு அதிகமாக ஐரோப்பிய நாடுகள் வாங்கி உள்ளன என்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, 'ரஷ்ய போர் உலகை இந்திய வசமாக்கும்' என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், ''உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரும், கரோனா பாதிப்பின் தாக்கமும் உலக அளவில் நாடுகளின் சர்வதேச செல்வாக்கில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளன. இது இந்தியாவுக்கு சாதகமாக உள்ளது. வரும் காலங்களில் இந்தியா மிக முக்கிய சக்தியாக உருவெடுக்க வாய்ப்புள்ளது'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுரையில், ஜெய்சங்கர் தெரிவித்த கருத்துகள் இடம்பெற்றுள்ளன. உக்ரைன் போரை பயன்படுத்தி ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் அதிக எரிபொருட்களை இந்தியா வாங்குவதாக ஐரோப்பிய நாடுகள் முன்வைதை்து வரும் குற்றச்சாட்டிற்கு அவர் பதில் அளித்துள்ளார். ''கடந்த ஆண்டு பிப்ரவரியில் இருந்து டிசம்பர் வரை, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா வங்கிய எரிபொருட்களைவிட ஐரோப்பிய ஒன்றியம் வாங்கிய எரிபொருட்களின் அளவு 6 மடங்கு அதிகம்.

இந்தியாவில் தனி நபர் வருமானம் ஆண்டுக்கு 2 ஆயிரம் டாலர் மதிப்பு கொண்டது. அதேநேரத்தில், ஐரோப்பாவில் தனி நபர் வருமானம் 60 ஆயிரம் டாலர் மதிப்பு கொண்டது. அப்படி இருக்கும்போது, ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருட்களை வாங்கி இந்தியா லாபம் பார்ப்பதாக அவர்கள் குறைகூறுவது அர்த்தமற்றது'' என தெரிவித்துள்ளார். உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், ''அது குறித்து நான் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன்'' என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “உலக செல்வாக்கு என்பது தற்போது வரை ஐரோப்பாவை சார்ந்தே இருக்கிறது. கரோனா பாதிப்பு, உக்ரைன் போர் ஆகியவற்றுக்குப் பிறகும் அப்படியேதான் இருக்கிறது. அனைத்து நாடுகளும் விதிகளின் அடிப்படையில்தான் முன்னேறுகின்றன. சர்வதேச விதிகள் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். ஆனால், உலக விதிகள் என்னும் பெயரில் ஐரோப்பா மற்ற நாடுகளை அழுத்த நினைத்தால் அதை எதிர்க்கத்தான் வேண்டும். அத்தகைய சூழலில் அந்த விதிகளில் இருந்து வெளியேறவும் நாடுகள் விரும்பத்தான் செய்யும்'' என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x