

புதுடெல்லி: கடந்த ஆண்டு டிசம்பரில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) மூலமாக ரூ.1,49,507 கோடி வசூலாகியுள்ளது.
இது, 2021-ம் ஆண்டு டிசம்பர் மாத ஜிஎஸ்டி வசூலுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் அதிகமாகும்.
தொடர்ந்து 10-வது மாதமாக கடந்த டிசம்பரிலும் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.40 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. 2022 நவம்பரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.46 லட்சம் கோடியாக இருந்தது.
2022 டிசம்பரில் வசூலான ரூ.1.49 லட்சம் கோடியில், மத்திய ஜிஎஸ்டி (சிஜிஎஸ்டி) ரூ.26,711 கோடியாகவும், மாநில ஜிஎஸ்டி (எஸ்ஜிஎஸ்டி) ரூ.33,357 கோடியாகவும், ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி (ஐஜிஎஸ்டி) ரூ.78,434 கோடியாகவும் (இறக்குமதி மீதானவரி வசூல் ரூ.40,263 கோடி உள்பட), செஸ் ரூ.11,005 கோடி யாகவும் (இறக்குமதி பொருள்கள் மீதான வரி வசூல் ரூ.850 கோடி உள்பட) இருந்ததாக மத்திய நிதி அமைச்சகம் புள்ளிவிவரத்தில் தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு நவம்பரில் 7.9 கோடி இ-வே பில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இது, முந்தைய அக்டோபர் மாத எண்ணிக்கையான 7.6 கோடியைக் காட்டிலும் கணிசமாக அதிகம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.