Published : 30 Dec 2022 10:34 AM
Last Updated : 30 Dec 2022 10:34 AM
புதுடெல்லி: இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி, அந்நிறுவனத்தின் வளர்ச்சிக்காக தான் செலவிட்ட நேரம் குறித்தும் செய்த தியாகங்கள் குறித்தும் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்தப்பேட்டியில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
“1981-ல் இன்போசிஸ் நிறுவனத்தைத் தொடங்கியது முதல் 2011-ம் ஆண்டு அதிலிருந்து ஓய்வு பெற்ற வரையில் தினமும் காலை 6.20 மணிக்கே அலுவலகம் சென்றுவிடுவேன். இரவு 9 மணி வரையில் அலுவலகத்தில் இருப்பேன்.
தியாகங்கள் செய்ய வேண்டும்: தொழில்முனைவோராக இருப்பதற்கு தைரியம் வேண்டும்.கடின உழைப்பும் நேரம் தவறாமையும் மிக முக்கியமானவை ஆகும். நிறைய தியாகங்கள் செய்ய வேண்டும். நான் வேலையிலேயே பெரும்பாலான நேரத்தைச் செலவிட்டதால் பாதிக்கப்பட்டது எனது இரு குழந்தைகள்தான். அவர்களுடன் என்னால் நேரம் செலவிட முடியாமல் போனது. மிக அரிதாக நான் அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு சீக்கிரம் வரும்போது, குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வேன். என் மனைவி சுதா மூர்த்திதான் எங்கள் இரண்டு பிள்ளைகளையும் கவனம் கொடுத்து வளர்த்தார். இன்று எங்கள் குழந்தைகள் அடைந்திருக்கும் உயரத்துக்கு முழுக் காரணம் என் மனைவி சுதா மூர்த்திதான்” என்று நாராயண மூர்த்தி கூறினார்.
மனைவியிடமிருந்து கடன்: நாராயண மூர்த்தி 1981-ல் இன்போசிஸ் நிறுவனத்தை அவரது 6 நண்பர்களுடன் இணைந்து தொடங்கினார். அந்த சமயத்தில் அவரிடம் போதிய பணம் இல்லாததால் மனைவி சுதா மூர்த்தியிடம் ரூ.10 ஆயிரம் கடன் பெற்று நிறுவனத்தில் முதலீடு செய்தார். இன்று இன்போசிஸ் நிறுவனத்தின் மதிப்பு ரூ.6.5 லட்சம் கோடி ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT