Published : 28 Dec 2022 09:32 PM
Last Updated : 28 Dec 2022 09:32 PM
புதுடெல்லி: இந்தியாவின் பிரபல தொழிலதிபரான கெளதம் அதானியின் வளர்ச்சிக்கு பின்னால் பிரதமர் மோடி இருப்பதாக விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுவது வழக்கம். இந்தச் சூழலில் அது குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார் அதானி.
துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி மற்றும் ரியல் எஸ்டேட் முதலான தொழில்களில் ஈடுபட்டு வருகிறார் கெளதம் அதானி. 60 வயதான அவர் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர். உலக பணக்காரர்களின் பட்டியலிலும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு 125.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள். இந்தச் சூழலில் இந்தியாவின் பிரபல ஊடகம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்துள்ளார். அதில், தான் கடந்து வந்த பாதையை குறித்து பகிர்ந்துள்ளார் அவர்.
“எனது தொழில் பயணத்தை மொத்தம் நான்கு கட்டங்களாக பிரிக்கலாம். நான் சொல்வது அனைவருக்கும் கொஞ்சம் சர்ப்ரைஸ் ஆக இருக்கலாம். ஆனால், இதுதான் நிஜம். எனது ஏற்றுமதி தொழில் வளர்ச்சிக்கு ராஜீவ் காந்தி ஆட்சியின்போது கொண்டுவரப்பட்ட கொள்கைகள் முக்கிய காரணமாக இருந்தன. இருந்தாலும் அப்போது தொழிலதிபராக எனது பயணம் தொடங்கவில்லை. அதுதான் முதல் கட்டம்.
1991-ல் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் மற்றும் மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் தொழில் சார்ந்தவர்கள் பலன் அடைந்தனர். அதில் நானும் ஒருவன். தொடர்ந்து 1995-ல் மூன்றாவது கட்டத்தை எட்டினேன். அதற்கு முதல் காரணம் அப்போதைய குஜராத் மாநில முதல்வர் கேஷூபாய் படேல். அவர் தொலைநோக்கு பார்வை கொண்ட வளர்ச்சி சார்ந்த கொள்கைகளை கொண்டு வந்தார். அதில் கடலோர வளர்ச்சிகளும் அடங்கும். அதுதான் முதல் துறைமுகத்தை நிறுவ தூண்டியது.
பின்னர் 2001-ல் அடுத்த கட்டத்தை எட்டினேன். அப்போது குஜராத் மாநில முதல்வராக மோடி இருந்தார். முன் எப்போதும் இல்லாத வகையில் மாநிலத்தில் தொழில் வளங்கள் வளர்ச்சி பெற்றன. அதற்கு அவரது ஆட்சியில் கொண்டு வந்த கொள்கைகள் காரணம். இப்போது பிரதமர் மோடி தலைமையிலான அரசு அதே போன்றதொரு வளர்ச்சியை நாடு முழுவதும் மேற்கொண்டு வருவதை காண்கிறோம்.
இப்படியாக மூன்று தசாப்தங்களுக்கு மேல் பல்வேறு தலைவர்கள், அரசு மற்றும் கொள்கைகள் மூலமாக எனது தொழில் வளர்ச்சி என்பது அடங்கியுள்ளது. அது தனியொருவரை சார்ந்தது அல்ல. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் வைக்க காரணம், நானும் பிரதமர் மோடியும் குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் மட்டும்தான்” என அதானி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT