Published : 02 Dec 2016 11:08 AM
Last Updated : 02 Dec 2016 11:08 AM

வணிக நூலகம்: மகிழ்ச்சியைக் கண்டறியும் கலை!

வாழ்க்கைப் பயணத்தில் நாம் எங்கிருக்கிறோம் அல்லது எப்படி இருக்கிறோம் என்பதெல்லாம், மகிழ்ச்சியைப் பெறு வதற்கான ஒரு பொருட்டே அல்ல. சந்தோஷத்திற்கான விதை நம் ஒவ் வொருவருக்குள்ளும் விதைக்கப்பட்டே உள்ளது மற்றும் சந்தோஷத்தை அறுவடை செய்வதற்கான திறனையும் நாம் பெற்றுள்ளோம். மகிழ்ச்சிக்கான அனைத்து விஷயங்களும் நமக்குள்ளேயே இருக்கின்றது என்ற நம்பிக்கை வரிகளோடு தொடங்குகின்றது “ஜாய் ஆன் டிமாண்ட்” என்னும் இந்தப் புத்தகம்.

நமது வெற்றிகளுக்கான ஆற்றலை யும். உத்வேகத்தினையும் கொடுக்கக் கூடிய ஊட்டச்சத்தே மகிழ்ச்சிதான் என்கிறார் ஆசிரியர். மற்றவர்களோடு இணைந்து பணியாற்றவும், மற்றவர் களை நம் பக்கம் ஈர்க்கவும் தேவையான திறனை வலுப்படுத்தும் ஆற்றல் மகிழ்ச்சிக்கு உண்டு. மகிழ்ச்சிக் கனியை ருசிப்பதைக் கற்றுக்கொள்வதே, வெற்றிக்கான அடிப்படை ரகசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார் ஆசிரியர்.

ஏற்றம் தரும் மன அமைதி!

உங்கள் அலுவலகத்தில் அல்லது நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள ஒரு நெருக்கடியை விவாதிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள், உங்கள் சக பணியாளர்கள், உயர் அதிகாரிகள் உட்பட பலரும் அமர்ந்திருக்கிறீர்கள். ஒவ்வொருவரும் தங்களது வெவ்வேறு கருத்துகளை ஒருசேர தெரிவிக்க, இறுதியில் எவ்வித முடிவும் எடுக்கப்படாத நிலையை அடைகிறது ஆலோசனைக் கூட்டம். நீங்கள் மட்டும் அமைதியான மன நிலையில், தீவிர சிந்தனையுடன் அமர்ந்திருக்கிறீர்கள். இப்பொழுது மொத்த கூட்டமும் உங்கள் பக்கம் திரும்புகின்றது. மேலும், உங்களிடமிருந்து தகுந்த ஆலோசனை ஏதாவது கிடைக்கும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

ஆம், இது இயல்பான ஒன்றே என்கிறார் ஆசிரியர். பல சலசலப்பு களுக்கு இடையே அமைதியான ஒரு விஷயத்தை அனைவரும் கவனிப்பது என்பது, தனி கவனம் பெறுகின்றது என்பதையே குறிக்கின்றது. இப்பொழுது உங்களால் தெரிவிக்கப்படும் கருத்து, அதிக மதிப்புடையதாகவும், அனைவரா லும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகவும் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார் ஆசிரியர். மேலும், நெருக்கடி யான சூழ்நிலைகளில் அமைதியுடன் தெளிவான முடிவுகளை எடுக்கும் திறன் தலைமை பண்பிற்கு மிகவும் அவசியமான அடிப்படை விஷயமும் கூட. ஆக, மனதை அமைதிப்படுத்தும் கலையும் மகிழ்ச்சிக்கான வழிமுறையே என்பதே ஆசிரியரின் வாதம்.

அதீத கவனம் தேவை

புகழ்பெற்ற ஜென் கதைகளில் ஒன்று. ஜென் குரு ஒருவர், தனது சீடர்களிடம் “நமது வாழ்க்கையின் கால அளவு என்ன?” என்று ஒருமுறை கேட்டுள்ளார். அதற்கு சீடர்களிடமிருந்து ஐம்பது வருடங்கள், எழுபது வருடங்கள், நூறு வருடங்கள் என பல்வேறு பதில்கள் கிடைக்கின்றன. ஒவ்வொன்றிற்கும் “இல்லை, தவறு” என்பதையே பதிலாக கூறியுள்ளார் குரு. இறுதியாக, “இரண்டு சுவாசங்களுக்கு இடைப்பட்ட காலமே, நமது வாழ்க்கையின் கால அளவு” என்கிறார் குரு. அதாவது. நமது முதல் சுவாசத்திற்கும், இறுதி சுவாசத்திற்கும் இடைப்பட்ட நாட்களே, நமக்கான வாழ்வின் கால அளவு.

இங்கு மற்றும் இப்பொழுது என்பதில் மட்டுமே நாம் அதீத கவனம் செலுத்தவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதே இந்த ஜென் கதை. கடந்தகால முடிவுகளை நினைத்து வருத்தப்படுவதோ அல்லது எதிர் காலத்தை நினைத்து கவலைப் படுவதோ, நிகழ்கால மகிழ்ச்சியை இழந்துவிடும் நிலைக்கு நம்மை அழைத்துச்சென்றுவிடும் என்று எச்சரிக்கிறார் ஆசிரியர்.

துன்பத்திலும் மகிழ்ச்சியுண்டு!

ஒருமுறை மிகுந்த பசியுடன் ஒரு புலி ஒருவனை துரத்திக்கொண்டு வந்தது. உயிரைக் காப்பாற்ற தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தவன் தவறி ஒரு செங்குத்தான பிளவில் விழப்போக, அப்போது அதன் விளிம்பில் உள்ள ஒரு மரத்தின் கிளையைப் பிடித்துக்கொண்டான். பள்ளத்தில் விழாமல் தன்னைப் பாதுகாத்துக்கொண்டானே தவிர, அந்த கிளையை பிடித்து மேலே வர அவனது உடம்பில் சக்தியில்லை. மேலே வர முயற்சித்தால், ஓடிவந்த களைப்பின் காரணமாக பள்ளத்தில் விழுவதற்கான வாய்ப்புகளே அதிகம். அப்பொழுது தனது அருகே, அக்கிளையில் நன்கு பழுத்த பழங்கள் இருப்பதைக் காண்கிறான். உடனே அவற்றை பறித்து சாப்பிட்டு தனது களைப்பைப் போக்கிக்கொள்கிறான்.

துன்பமான வேளைகளில் கூட மகிழ்ச்சிக்கான சாத்தியக்கூறுகள் நம்மைச் சுற்றிலும் உள்ளன என்பதற்காக சொல்லப்பட்டதே இக்கதை. அதாவது, நீங்கள் துன்பத்தில் இருக்கிறீர்கள் என்பதற்காக, உங்களுக்கு மகிழ்ச்சியே கிடைக்காது என்பதல்ல. சந்தோஷங்களும் சங்கடங்களும் பரஸ்பரம் ஒன்றிணைந்தவை. அதிலிருக்கும் மகிழ்ச்சியை எவ்வாறு நம் வசப்படுத்தமுடியும் என்பதை அறிந்துகொள்வதே அவசியம்.

நிலையான செயல்பாடு

இந்த வருடம் உங்கள் பிறந்த நாளிலிருந்து, தினமும் நடைபயிற்சியை தொடங்குவதற்கான தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள் (அடிக்கடி நடப்பதுதானே என்கிறீர்களா?). அதை செயல்படுத்தவும் ஆரம்பிக்கிறீர்கள். முதல் நாள், இரண்டாம் நாள் என தொடங்கி ஒரு வாரம், ஒரு மாதம் என தொடர்ந்து ஆறு மாத காலமாக உங்கள் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேறிக்கொண்டிருக்கிறது. இப்பொழுது, உடல்நிலை மனநிலை என அதன் பலனும் உங்களுக்கு கிடைக்கிறது. இதுவே, தொடங்கிய ஓரிரு நாட்களில் நேரமில்லை, கடினமாக இருக்கிறது, சலிப்பைத் தருகிறது, களைப்படையச் செய்கிறது போன்ற காரணங்களுக்காக நடைபயிற்சியை தவிர்த்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்துப்பாருங்கள். அன்றைய அதிகாலை தூக்கத்திற்கு வேண்டுமானால் இச்செயல் உங்களுக்கு தற்காலிக மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கலாம். ஆனால், நீண்டகால நோக்கில் கண்டிப்பாக உங்களுக்கு மகிழ்ச்சி கிடைத்திருக்காது அல்லவா?. ஆக, நமது செயல்பாடு நிலையானதாக தொடரும்போது மட்டுமே நமக்கான மகிழ்ச்சியும் நிலையாக நம்மைத் தொடரும்.

தேவையான செயல்பாடு

ஏழ்மையான நிலையில் பட்டினியுடன் வாழும் நிலமற்ற விவசாயி ஒருவரை கற்பனை செய்துகொள்ளுங்கள். ஒரு நாள் அரசரிடமிருந்து ஒரு அறி விப்பு வருகின்றது. அதாவது, அரண்மனையிலிருந்து வேண்டிய அளவு பொற்காசுகள் பெற்றுக்கொள்ள லாம் என்றும் ஒருவர் தனிப்பட்ட முறையில் எவ்வளவு பொற்காசுகளை எடுத்துசெல்ல முடியுமோ அவ்வளவு பொற்காசுகளை மட்டும் எடுத்துச்செல்ல லாம் என்று அறிவிக்கப்படுகிறது. இப்பொழுது அந்த விவசாயி, ஒரு பொற்காசை எடுத்துக்கொண்டால், உடனடியாக அவனது குடும்பத்திற்கு சில நாட்களுக்கு உணவளிக்க முடியும். அதுவே, இரண்டு கை நிறைய பொற்காசுகளை எடுத்துக்கொண்டால், சில மாதங்களுக்கு உணவிற்கு பிரச்சனை இல்லை. கைகள் மட்டுமின்றி தனது பாக்கெட்களிலும் நிரப்பிக்கொண்டால், சிறிய விவசாய நிலத்தை விலைக்கு வாங்கி, அதன்மூலம் வாழ்நாள் முழுவதும் அவனது குடும்பத்திற்கு உணவளிக்க முடியும் அல்லவா. அதுவே, அவனால் சுமக்க முடிந்த அளவிற்கு சாக்குப்பைகளில் நிரப்பிக்கொண்டால், வாழ்நாள் முழுவதும் பணக்காரனாக வாழ முடியும். அதைவிட ஒரு படி மேலே போய், இந்த அறிவிப்பை தனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் தெரிவித்தால், இன்னும் அதிகமான நன்மைகளை மற்றவர்களுடன் சேர்ந்து பெற முடியும்.

இங்கு பொற்காசுகள் என்பவை நமக்கான மகிழ்ச்சி போன்றது. நம்மைச்சுற்றிலும் உள்ள மகிழ்ச்சியை எவ்வாறு பெறப்போகிறோம் என்பதே நமக்கான கேள்வி. கிடைத்த சிறிதளவை எடுத்துக்கொள்ளப்போகிறோமா அல்லது திட்டமிட்டு அதிகளவில் பெற்று மற்றவர்களுடன் சேர்ந்து பயனடையப்போகிறோமா என்பதே இதற்கான பதில்.

தொடர்புக்கு: p.krishnakumar@jsb.ac.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x