Published : 22 Dec 2022 06:52 AM
Last Updated : 22 Dec 2022 06:52 AM
புதுடெல்லி: வங்கிகளில் கடன் வாங்கி வேண்டுமென்றே திரும்ப செலுத்தாத 50 நிறுவனங்களின் பட்டியலில் மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் முதலிடத்தில் உள்ளது.
நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதித் துறை இணையமைச்சர் பகவத் கரத் இதுகுறித்து மேலும் கூறியுள்ளதாவது: நடப்பு 2022-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதி இறுதி நிலவரப்படி, இந்திய வங்கிகளில் கடன் பெற்றுஅதனை திருப்பிச் செலுத்த மனமில்லாத முதல் 50 நிறுவனங்களின் பட்டியலில் உள்ள ஒட்டுமொத்த கடன் பாக்கியின் அளவு ரூ.92,570 கோடியாக உள்ளது.
இதில்,வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற மெகுல் சோக்சியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் கடனளவு மட்டும் ரூ.7,848 கோடியாக உள்ளது. 50 நிறுவனங்கள் அடங்கிய பட்டியலில் அந்த நிறுவனமே முதலிடத்தில் உள்ளது.
இதையடுத்து, ஈரா இன்ஃப்ரா (ரூ.5,879 கோடி), ரெய்கோ அக்ரோ(ரூ.4,803 கோடி) அப்பட்டியலில் இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களில் உள்ளன.
இவை தவிர, கன்கேஸ்ட் ஸ்டீல்அண்ட் பவர் (ரூ.4,596 கோடி), ஏபிஜி ஷிப்யார்டு (ரூ.3,708 கோடி), ப்ரோஸ்ட் இண்டர்நேஷனல் (ரூ.3,311 கோடி), வின்சம் டயமண்ட் அண்ட் ஜுவல்லரி (ரூ.2,931 கோடி), ரோடோமேக் குளோபல் (ரூ.2,893 கோடி), கோஸ்டல் புராஜெக்ட்ஸ் (ரூ.2,311 கோடி), ஜூம் டெவலப்பர்ஸ் (ரூ.2,147 கோடி) உள்ளிட்ட நிறுவனங்களும் வேண்டுமென்றே கடனை திரும்பச் செலுத்தாத நிறுவனங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
பொதுத் துறை வங்கிகளின் மொத்த வாராக் கடன் ரூ.8.9 லட்சம் கோடியிலிருந்து ரூ.3 லட்சம் கோடியாக சரிவடைந்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் சொத்துகளின் தரம் குறித்து மறுஆய்வில் மொத்தவாராக் கடன் ரூ.5.41 லட்சம் கோடி குறைந்துள்ளது.
வங்கிகள் ரூ.10.1 லட்சம் கோடி மதிப்பிலான கடன்களை செயல்பாடற்ற (ரைட் ஆஃப்)வாராக்கடன் பிரிவில் வகைப்படுத்தியுள்ளன. இப்பட்டியலில், பொதுத் துறையைச் சேர்ந்தஎஸ்பிஐ ரூ.2 லட்சம் கோடியுடன் முதலிடத்திலும், பஞ்சாப் நேஷனல்வங்கி (பிஎன்பி) ரூ.67,214 கோடியுடன் 2-வது இடத்திலும் உள்ளன.
தனியார் வங்கிகளைப் பொருத்தவரை அதிகபட்சமாக ஐசிஐசிஐ வங்கி ரூ.50,514 கோடியையும், எச்டிஎஃப்சி வங்கி ரூ.34,782 கோடியையும் செயல்பா்டற்ற வாராக் கடன் பிரிவில் வகைப்படுத்தியுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT