Published : 17 Dec 2022 07:02 AM
Last Updated : 17 Dec 2022 07:02 AM
புதுடெல்லி: வரும் 2025-க்குள் இந்தியா 5 டிரில்லியன் டாலர் (ரூ.410 லட்சம் கோடி) பொருளாதாரத்தை அடையும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் நிதின் கட்கரி பேசியதாவது: இந்தியா மிக வேகமாக வளர்ந்து வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் டாலர்பொருளாதாரத்தை எட்டும் பயணத்தில் இந்தியா உள்ளது. நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
சரக்குப் போக்குவரத்து சார்ந்த செலவுகள் இந்திய ஜிடிபியில் 16 சதவீதமாக உள்ளது. இது 2024-ம்ஆண்டுக்குள் 9 சதவீதமாக குறையும். இதனால், ஏற்றுமதி செயல்பாடுகள் ஊக்கம் பெறும். நாட்டின் உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படுகிறது. 2024-ல் இந்தியாவின் உள்கட்டமைப்பு அமெரிக்காவின் தரத்துக்கு மாறும்.
கட்டுமான செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. அதேபோல் மாற்று எரிசக்தி கட்டமைப்பில் கூடுதல் கவனம் செலுத்துகிறது. அந்தவகையில் உலக நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்கில் இந்தியாவின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும்.
தற்போது இந்திய வாகனத் துறையின் மதிப்பு ரூ.7.5 லட்சம் கோடியாக உள்ளது. இதை ரூ. 15 லட்சம் கோடியாக உயர்த்த விரும்புகிறோம். இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT