Published : 26 Dec 2016 01:20 PM
Last Updated : 26 Dec 2016 01:20 PM
பணமதிப்பு நீக்கம், இயற்கைச் சீற்றங்களுக்கிடையே தமிழக வர்த்தகம் 2016 ஒரு பார்வை:
2015 டிசம்பர் கனமழை, வெள்ளம். அதனால் ஏற்பட்ட சேதங்கள் ஏற்படுத்திய கடும் வர்த்தகப் பின்னடைவுகளுக்குப் பிறகே தமிழக தொழில்துறைகள் மூச்சுப் பிடித்து மேலே வந்து கொண்டிருக்கும் நிலையில், அதிர்ச்சி பணமதிப்பு நீக்கம், அதன் பிறகு வார்தா புயல் ஏற்படுத்திய சீரழிவு என்று தொடர் பின்னடைவுகளைச் சந்தித்தது.
சிறு வர்த்தகம் முதல் உற்பத்தி துறை, மோட்டார் வாகன ஆட்டோமொபைல் வர்த்தகம் உட்பட பல துறைகள் பின்னடைவுகளுக்குப் பிறகு மீண்டெழ முயற்சி செய்து வருகிறது.
மாநில வர்த்தகத்தில் பெருமளவு பங்களிப்பு செய்து வரும் சிறிதிலும் சிறு வர்த்தகம், சிறு மற்றும் நடுத்தர வர்த்தகம் 2016-ல் கடுமையாக மந்தமடைந்துள்ளது.
கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் உள்ள யூனிட்கள் மட்டுமல்ல; தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மோட்டார் கார் வாகனத் துறையில் முக்கிய நிறுவனங்களுமே பணமதிப்பு நீக்கத்துக்குப் பிறகு கடும் பின்னடைவுகளை சந்தித்துள்ளன.
பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த பிறகே வங்கித் துறையினர் கடுமையாக சிக்கலுக்கு உள்ளாகினர். பணமில்லாமல் பொதுமக்கள் கோபத்துக்கு வங்கித் துறைதான் இலக்கானது. வங்கிகளில் அனைத்து நடவடிக்கையும் பழைய நோட்டுகளை வாங்குவது புதிய நோட்டுகளை கொடுப்பது என்பதாகவே அமைய, அன்றாட வர்த்தக நடவடிக்கைகள் பெரிய அளவுக்கு பின்னடைவு கண்டன.
மத்திய அரசு கறுப்புப் பண ஒழிப்புக்காகவே பணமதிப்பு நீக்கம் என்று கூறி வந்தது. பிறகு, அது பெரிய அளவுக்கு வெற்றியடையவில்லை என்று தெரிந்தோ என்னவோ ரொக்கமற்ற பொருளாதாரம் என்று பேசத் தொடங்கியது. ஆனால் தமிழ்நாட்டில் இது பெரிய அளவுக்கு வர்த்தகர்களுக்கு உதவவில்லை.
நகை வியாபாரத் துறை ஏற்கெனவே மத்திய நிதியமைச்சர் விதித்த 1% தீர்வையுடன் பணமதிப்பு நீக்கத்தினாலும் கடும் அவதிக்குள்ளாகின. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மட்டுமே சுமார் 36,000 நகை விற்பனை நிலையங்கள் உள்ளன. இந்தத் துறையில் சுமார் 8 முதல் 10 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர்.
மத்திய அரசை எதிர்த்து தங்க வியாபாரிகள் 18 நாட்களுக்கு கடையடைப்பு நடத்தினர். இதனால் சுமார் ரூ.6,300 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நகை - ஆபாரண சில்லறை விற்பனையாளர்களும் சிக்கலுக்குள்ளாகினர். ஏதாவது பண்டிகை, திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளின்போது மட்டுமே இந்தக் காலக்கட்டத்தில் நகை வாங்க வாடிக்கையாளர்கள் வந்தனர், தினசரி நகை சில்லறை வர்த்தகம் பின்னடைவு கண்டது.
பணமதிப்பு நீக்கம் மற்றும் வார்தா புயலினால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின. பணமதிப்பு நீக்கத்தினால் கார் விற்பனை மந்தமடைந்தது. மேலும் வாடிக்கையாளர்கள் காத்திருப்பு அணுகுமுறையை மேற்கொண்டனர். மேலும் வார்தா புயலால் ஆட்டோமொபைல் துறையில் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
சென்னையையும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அமெரிக்காவின் ஃபோர்டு, கொரியாவின் ஹுண்டய், ஜெர்மனியின் பிஎம்டபிள்யூ, வர்த்தக வாகன உற்பத்தியாளர்கள் அசோக் லேலாண்ட் மற்றும் டெய்ம்லர் என்று ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்தத் துறையின் தொழில்கூடாரமாக விளங்கியது. ஆனால் பணமதிப்பு நீக்கம், வார்தா சீற்றம் ஆகியவற்றால் இந்தத் துறை நஷ்டத்தை சந்தித்து வருகிறது.
மென்பொருள் நிறுவனங்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்களான பார்தி ஏர்டெல், ஏர்செல் மற்றும் வோடஃபோன் ஆகியவை வார்தா புயலால் பெரிய அளவில் பாதிப்படைந்தன.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் தங்கள் நடவடிக்கைகளை ஒரு வாரத்துக்கு ரத்து செய்ய நேரிட்டது. சில நிறுவனங்களில் நிலைமைகள் சரியாகும் வரைக்கும் ஊழியர்கள் சிலரை விடுப்பில் அனுப்பியதும் நடந்தது. மின்சாரம், தொலைத் தொடர்பு சாதனங்கள் செயலிழந்ததால் மின்னணு பரிவர்த்தனை தடைபட்டது, பணத்தைப் பயன்படுத்த முடியாத பணத்தட்டுப்பாடு ஆகியவற்றால் டிசம்பர் மாதம் பெட்ரோல் நிலையங்கள் உட்பட பல வர்த்தகங்கள் கடும் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளன.
இந்திய ஏற்றுமதியாளர்கள் அமைப்பு வார்தா புயலினால் ஏற்பட்ட சேதங்களை ரூ.300 கோடி என்று மதிப்பிட்டுள்ளது.
"2015-16-ல் தமிழகத்தின் ஏற்றுமதி 31.25 பில்லியன் டாலர்கள், ஆனால் ஏப்ரல் - செப்டம்பர் 2016-ல் ஏற்றுமதி 13.27 பில்லியன் டாலர்களே. இது எதிர்மறை போக்கைக் காட்டுகிறது" என்று ஏற்றுமதி அமைப்பின் மண்டல தலைவர் தெரிவிக்கிறார்.
கடந்த ஆண்டு வெள்ளம், தற்போதைய புயல் வார்தா மற்றும் பணமதிப்பு நீக்கம் ஆகியவற்றால் ஏற்றுமதித் துறை 15 - 20% வரை பின்னடைவு கண்டுள்ளது.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கூறுவதென்னவெனில், பணமதிப்பு நீக்கத்தால் வர்த்தகமே கடும் கடினமாக அமைந்தது என்று கூறியுள்ளது.
"எங்கள் துறை கடந்த காலங்களில் எவ்வளவோ இன்னல்களை சந்தித்துள்ளன. தற்போது மீண்டுள்ளன. பணமதிப்பு நீக்க நடவடிக்கை எதிர்காலத்துக்கு மிகப் பெரிய நன்மை என்றாலும், வர்த்தக நடவடிக்கைகளில் இப்போது கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது.
புத்தாண்டு, பொங்கல் பண்டிகைகள் நெருங்குகின்றன. பணநெருக்கடி காரணமாக எங்களால் ஆர்டர்களை செய்து முடிப்பதில் கடும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. நவம்பரில் மட்டுமே வர்த்தக இழப்பு ரூ.1000 கோடி என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்" என்று அந்த அமைப்பின் தலைவர் எம்.பி.முத்துரத்தினம் தெரிவித்தார்.
எனவே, மத்திய அரசு திருப்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஊர்களுக்கு விரைவில் புதிய நோட்டுகளை அனுப்பி வைத்தால் மட்டுமே நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என்கின்றனர் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் - உற்பத்தியாளர்கள் சங்கம்.
மொத்தத்தில் கடந்த டிசம்பரில் தொடங்கிய துயரம் இன்றைய டிசம்பர் வரையிலும் தொடர்கிறது. பணமதிப்பு நீக்கத்தின் தாக்கம் இன்னும் நீடிக்குமானால், 2017 முதல் 3 மாதங்கள் வரையிலுமாவது வர்த்தகத் துறையின் சுணக்கம் நீடிக்கும் என்றே இந்தத் துறையைச் சேர்ந்தவர்கள் கருதுகின்றனர்.
தகவல் உறுதுணை: பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT