Published : 14 Dec 2022 04:09 PM
Last Updated : 14 Dec 2022 04:09 PM
புதுடெல்லி: கடந்த நவம்பரில் மொத்த விலை பணவீக்கம் 5.85% ஆக சரிந்துள்ளதாக மத்திய அரசின் புள்ளிவிவர அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த நவம்பர் மாதத்திற்கான மொத்த விலை பணவீக்கம் நிலை குறித்து மத்திய புள்ளிவிவர அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றுக்கான மொத்த விலை பணவீக்கம் 5.85% ஆக சரிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த அக்டோபர் மாதம் 8.39 ஆக இருந்த நிலையில், நவம்பர் மாதம் 2.54% சரிந்து 5.85% ஆக உள்ளது.
இது கடந்த 18 மாதங்களில் இல்லாத சரிவு என அரசு தெரிவித்துள்ளது. மேலும், மொத்த பணவீக்க விகிதம் கடந்த செப்டம்பர் வரை இரட்டை இலக்கத்தில் இருந்த நிலையில், அது தற்போது தொடர்ந்து ஒற்றை இலக்கத்தில் இருந்து வருகிறது. மேலும், தொடர்ந்து சரிந்தும் வருகிறது.
உணவுப் பொருட்கள், அடிப்படை உலோகப் பொருட்கள், துணிவகைகள், ரசாயனங்கள், ரசாயன பொருட்கள், பேப்பர், பேப்பர் பொருட்கள் ஆகியவற்றின் விலை அதற்கு முந்தைய மாதங்களைவிட குறைந்ததே இந்த சரிவுக்கு முக்கிய காரணம் என அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல், சில்லறை பணவீக்க விகிதமும் கடந்த நவம்பரில் 5.88% ஆக சரிந்துள்ளது. இது அதற்கு முந்தைய மாதத்தில் 6.77% ஆக இருந்தது. சில்லறை பணவீக்கத்தைப் பொறுத்தவரை 5.88% என்பது கடந்த 11 மாதத்தில் இல்லாத அளவு குறைவு என புள்ளிவிவர அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT