Published : 14 Dec 2022 04:23 AM
Last Updated : 14 Dec 2022 04:23 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆண்டுக்கு 80 ஆயிரம் டன் தக்காளியில் மதிப்புக் கூட்டுப் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இதில், 20 சதவீதம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை, ஓசூர், சூளகிரி, கெலமங்கலம், காவேரிப்பட்டணம், போச்சம்பள்ளி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 12 ஆயிரம் ஹெக்டேரில் தக்காளி சாகுபடி மேற் கொள்ளப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 12 ஆயிரம் செடிகள் நடவு செய்யப்படுகின்றன.
ஏக்கருக்கு 30 டன்: இதன் மூலம் ஏக்கருக்கு சராசரியாக 30 டன் தக்காளி மகசூல் கிடைக்கிறது. அறுவடை செய்யப்படும் தக்காளி, ராயக்கோட்டை, ஓசூர் சந்தைகள் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் தக்காளி மகசூல் அதிகரிக்கும்போது, விலை கிலோவுக்கு ரூ.10-க்கும் கீழ் குறையும். மகசூல் பாதிக்கப்படும் போது கிலோ ரூ.100-ஐ கடந்து விற்பனை செய்யப்படும்.
விலை நிர்ணயம்: எனவே, தக்காளிக்கு அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தக்காளி விலை குறையும்போது, மாவட்டத்தில் உள்ள 6 பழச்சாறு தயாரிக்கும் தொழிற்சாலைகள் தக்காளியை கொள்முதல் செய்து, மதிப்பு கூட்டுப் பொருட்களை (ஜாம், சாஸ்) தயாரித்து உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன.
இது தொடர்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட பழச்சாறு ஆலை உரிமையாளர் சங்க தலைவர் மாதவன் கூறியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக அளவில் மா பழச்சாறு உற்பத்தி செய்யப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மா சீசன் முடிந்த பின்னர் கொய்யா பழச்சாறு தயாரித்து வருகிறோம். அடுத்தபடியாக ஆண்டுக்கு சுமார் 80 ஆயிரம் டன் தக்காளி கொள்முதல் செய்து அவற்றில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து உள்நாட்டில் 80 சதவீதமும், வெளிநாடுகளுக்கு 20 சதவீதமும் ஏற்றுமதி செய்கிறோம்.
இங்கு உற்பத்தியாகும் தக்காளி பழத்தில் பச்சை நிறம் கலந்து வருவதால் தரம் குறைந்து ஏற்றுமதிக்கு உகந்ததாக இல்லை. இருப்பினும் உள்நாட்டில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
தக்காளி சாஸ் தயாரிப்பில் இந்தியாவுக்கு போட்டியாக சீனா உள்ளது. அங்கு விளையும் தக்காளி நல்ல தரத்துடன் சிவப்பு நிறத்தில் கிடைப்பதால் உலக சந்தையில் சீனாவுக்கு வரவேற்பு உள்ளது. இத்தொழில் மூலம் ஆலைகளில் சுமார் 10,000 தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கிறது.
தரமான தக்காளி: தோட்டக்கலைத்துறை மூலமாக விவசாயிகளுக்கு பயிற்சி அளித்து சிவப்பு வண்ணத்தில் தரமான தக்காளி சாகுபடிக்கு வழிகாட்டினால், மதிப்புக் கூட்டுப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்கும். விவசாயிகளுக்கும் நல்ல வருவாய் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பழச்சாறு ஆலை அமைக்க கோரிக்கை - கிருஷ்ணகிரி பகுதியைச் சேர்ந்த தக்காளி விவசாயிகள் கூறியதாவது:.தக்காளி மகசூல் அதிகரிக்கும் போது அதனை பாதுகாக்கும் வகையில் குளிர்பதன கிடங்குகள் கூடுதலாக ஏற்படுத்த வேண்டும். தக்காளி விலை குறைவாக இருக்கும்போது தனியார் ஆலைகள் தக்காளி கொள்முதல் செய்கின்றன. அரசு பழச்சாறு ஆலை அமைத்து தக்காளியை கொள்முதல் செய்தால், விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT