Published : 13 Dec 2022 04:07 AM
Last Updated : 13 Dec 2022 04:07 AM
உதகை: ஒட்டுமொத்த சிறு தேயிலை விவசாயிகள் மற்றும் தேயிலை தொழிலின் மேம்பாட்டுக்காக, நீலகிரி மாவட்டத்தில் ரூ.1.21 கோடியில் 6 சிறப்பு தேயிலை விற்பனை மையங்கள் திறக்கப்படுகின்றன என்று, தேயிலை வாரிய மேம்பாட்டு அதிகாரி உமா மகேஸ்வரி தெரிவித்தார்.
இயற்கை விவசாய நடவடிக்கைகளை, நீலகிரி மாவட்ட நிர்வாகம் இலக்காக கொண்டிருக்கிறது. வழக்கமான தேயிலையைவிட 3 முதல் 5 மடங்கு அதிக வருவாய் ஈட்டும் இயற்கை வழி வேளாண்மை மூலமாக தயாரிக்கப்பட்ட சிறப்பு தேயிலையின் தேவை அதிகரித்து வருகிறது.
இதை கருத்தில்கொண்டும், சிறு தேயிலை விவசாயிகள் மேம்பாட்டுக்காகவும் ஆர்கானிக் தேயிலை மற்றும் சிறப்பு தேயிலை விற்பனை மையங்கள் அமைப்பதற்கான சிறப்புத் திட்டத்துக்கு, தேயிலை வாரியம் மூலமாக அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, உதகை எட்டின்ஸ் சாலையில் ஆவின் சந்திப்பில் சிறப்பு தேயிலை விற்பனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் டாக்டர் எம்.முத்துக்குமார், மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் ஆகியோர் திறந்து வைத்து, விற்பனையை தொடங்கி வைத்தனர்.
இதுதொடர்பாக தேயிலை வாரிய மேம்பாட்டு அதிகாரி உமா மகேஸ்வரி கூறும்போது, "கோத்தகிரி வட்டத்தைச் சேர்ந்த முற்போக்கு சிறு தேயிலை விவசாயிகளுக்கான சிறப்புத் தொகுப்பை செயல்படுத்தும் விதமாக, இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேயிலை வாரியத்துக்கு, 2021-22-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசிடமிருந்து ரூ.1.21 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியின் கீழ் உதகை, கோத்தகிரியில் 6 சிறப்பு தேயிலை விற்பனை மையங்கள் திறக்கப்படுகின்றன.
உதகை படகு இல்லத்தில் சிறப்பு தேயிலை விற்பனை மையம் திறக்கப்பட்டு, விற்பனையும் நடைபெற்று வருகிறது. இந்த விற்பனை மையத்தில், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தரமான மற்றும் உயர்தர தேநீரை அனுபவித்து வருகின்றனர். உதகையில் மேலும் ஒரு விற்பனை மையம் திறக்கப்பட்டுள்ளது.
சிறு தேயிலை விவசாயிகள் மற்றும் ஒட்டுமொத்த தேயிலைத் தொழிலின் மேம்பாட்டுக்காக, கோத்தகிரி வட்டத்தில் நான்கு சிறப்பு தேயிலை விற்பனை மையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மையங்களில் சிறு தேயிலை விவசாயிகள் உற்பத்தி செய்யும் சிறப்பு தேயிலை விற்பனை செய்யப்படும். இந்த தேயிலை கிலோ ரூ.3000 முதல் ரூ.4000 வரை விற்பனை செய்யப்படுகிறது. சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT