Published : 12 Dec 2022 02:44 PM
Last Updated : 12 Dec 2022 02:44 PM

இதுவரை ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணம் மீட்பு: மத்திய அரசு தகவல்

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்

புதுடெல்லி: இதுவரை ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மத்திய அரசு மீட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்பது குறித்து மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது: "மத்திய அரசின் திட்டங்களில் ஒரு ரூபாயில் 15 பைசா மட்டுமே மக்களைச் சென்றடைவதாக பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கூறினார். ஆனால், தற்போது நேரடி வங்கி பணப் பரிவர்த்தனை மூலம் 100 சதவீதம் நிதி பயனாளிகளைச் சென்றடைகிறது. இது திடீரென நடந்துவிடவில்லை. இதற்குப் பின்னால் பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குத் திட்டம் இருந்தது.

நல்லாட்சி என்பது பல்வேறு வடிவங்களைக் கொண்டது. அதில் முதலாவது டிஜிட்டல் வடிவம். வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்காக ஜன் தன் திட்டத்தின் மூலம் 45 கோடி இலவச வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டன. 135 கோடி ஆதார் அட்டைகள் விநியோகிக்கப்பட்டன. டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கான ஏற்பாடுகள் நிறைவடைந்ததை அடுத்து, அரசின் பணப் பயன் அனைத்தும் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது. ராஜீவ் காந்தி காலத்தில் மத்திய அரசின் 85% நிதி மக்களுக்குச் சென்றடையவில்லை. ஆனால், இன்று ரூ. 26 லட்சம் கோடி மக்களின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுள்ளது. நேரடி பணப் பரிமாற்றம் காரணமாக ரூ. 2.25 லட்சம் கோடியை அரசு சேமித்துள்ளது.

இதுமட்டுமல்ல, கரோனா தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் பல நாடுகள் சிரமங்களைச் சந்தித்தன. ஆனால், நாம் கோவின் இணையதளத்தின் மூலம் 216 கோடி தடுப்பூசிகளை மக்களுக்கு வெற்றிகரமாக செலுத்தி உள்ளோம். மத்திய அரசின் இ-வர்த்தக தளத்தில் 125 கோடி விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். அவர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை அந்தத் தளத்தின் மூலம் விற்பனை செய்து வருகிறார்கள். இந்தத் தளத்தில் பதிவு செய்துள்ள விவசாயிகளிடம் இருந்து அரசு ரூ. 3.5 லட்சம் கோடிக்கு பொருட்களை வெளிப்படையான முறையில் கொள்முதல் செய்துள்ளது. வருமான வரி கணக்கீடு, வருமான வரித் துறை திருப்பி அளிக்கும் பணம், ஏலம் என அனைத்தும் தற்போது டிஜிட்டல் மயமாகிவிட்டது. ஒருவரின் முகத்தைப் பார்க்காமலேயே இந்தப் பணிகள் எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றன.

கடந்த 2014 முதல் 2022 வரை ரூ.4.5 லட்சம் கோடிக்கு ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையில் ஊழல் நீக்கப்பட்டிருப்பதையே இது காட்டுகிறது. தொகை முழுமையாக அரசுக்கு கிடைத்திருக்கிறது. ரூ.4,300 கோடி மதிப்பிலான பினாமி சொத்துக்களை மத்திய அரசு பறிமுதல் செய்துள்ளது. ரூ.1.25 லட்சம் கோடி கருப்புப் பணத்தை மத்திய அரசு மீட்டுள்ளது. வரி ஏய்ப்புக்காக உருவாக்கப்பட்ட 1.75 லட்சம் ஷெல் கம்பனிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

நாடு வளர்ச்சி காண வேண்டும் என்றால் நல்லாட்சியின் மூலம் மட்டுமே அதனை சாத்தியப்படுத்த முடியும் என்ற உறுதியான நம்பிக்கையை பிரதமர் நரேந்திர மோடி கொண்டிருக்கிறார். நல்லாட்சி இருந்தால்தான் அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுயைாக சென்றடையும். குறுக்கு வழி அரசியல் நாட்டுக்கும், மக்களுக்கும் கேட்டையே அளிக்கும். நல்லாட்சிதான் அனைவருக்கும் நன்மை அளிக்கும். இதன் காரணமாகவே, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்திருக்கிறது" என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x