Published : 09 Dec 2022 06:36 AM
Last Updated : 09 Dec 2022 06:36 AM
சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் போன்பிக்லியொலி டிரான்ஸ்மிஷன் நிறுவனம், புனேயில் ரூ.100 கோடி முதலீட்டில் புதிய அசெம்பிளி ஆலையை அமைக்க உள்ளது. 42,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்த ஆலைக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மேலாளர் கென்னடி வி. கைப்பள்ளி கூறியது: இந்திய உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு தேவையான கியர் பாக்ஸ், கியர் மோட்டார் மற்றும்அவற்றின் இயக்கத்துக்கு தேவையான சாதனங்களைத் தயாரிப்பதில் போன்ஃபிக்லியொலி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், வடக்குப் பிராந்திய சந்தை வளர்ச்சி வாய்ப்புகளை கருத்தில் கொண்டு புனேயில் ரூ.100கோடி முதலீட்டில் புதிய அசெம்பிளி ஆலை அமைக்கப்பட உள்ளது.
புனேயிலும், சென்னையிலும்..: ஏற்கெனவே நிறுவனத்துக்குச் சொந்தமாக 7,500 சதுர மீட்டர் பரப்பளவில் புனேயிலும், சென்னையிலும் என இரண்டு ஆலைகள் உள்ளன. கியர் மோட்டார்ஸ், டிரைவ் சிஸ்டம்ஸ், கியர்பாக்ஸ், இன்வெர்டர்கள் இந்த ஆலைகளில் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
42,500 சதுர மீட்டர் பரப்பளவில்: இந்த நிலையில் வடக்குப் பிராந்தியத்தில் உள்ள ஏராளமான சந்தை வாய்ப்புகளை வசப்படுத்திக் கொள்ளும் வகையில் மற்றொரு புதிய ஆலை புனேயில் தொடங்கப்படவுள்ளது. 42,500 சதுர மீட்டர் பரப்பளவில் அமையவுள்ள இந்த புதிய ஆலையின் மூலம் 20-க்கும் மேற்பட்ட தயாரிப்புகளை அசெம்பிளிங் செய்ய முடியும். ஆலை கட்டுமானப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு 2023-ம் ஆண்டு நவம்பரில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
போன்பிக்லியொலி நிறுவனம் 2021-22-ம் ஆண்டில் ரூ.1,428 கோடி வருமானத்தை பதிவு செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் ரூ.1,120 கோடியாக இருந்தது.
கியர் மோட்டார்ஸ், டிரைவ் சிஸ்டம்ஸ், கியர்பாக்ஸ், இன்வெர்டர்களை போன்பிக்லியொலி நிறுவனம் தயாரிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT