Published : 07 Dec 2022 07:41 AM
Last Updated : 07 Dec 2022 07:41 AM
ஸ்டாக்ஹோம்: உலக அளவில் உள்ள 100 மிகப்பெரிய ராணுவத் தளவாட நிறுவனங்களை சுவீடனைத் தலைமையிடமாகக் கொண்ட ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (எஸ்ஐபிஆர்ஐ) பட்டியலிட்டுள்ளது. அதில் இந்தியாவைச் சேர்ந்த இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் (எச்ஏஎல்), பாரத் எலக்ட்ரானிக்ஸ் (பெல்) ஆகிய 2 பொதுத்துறை நிறுவனங்கள் இடம்பிடித் துள்ளன.
சென்ற ஆண்டில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தின் தளவாட விற்பனை ரூ.27,060 கோடியாக உள்ள நிலையில் இந்தப் பட்டியலில் 42-வது இடத்தைப் பிடித்துள்ளது. பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் 63-வது இடத்தில் உள்ளது. சென்ற ஆண்டில் அதன் விற்பனை ரூ.14,760 கோடி ஆகும்.
இந்தப் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்ந்த 40 நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன. அந்நிறுவனங்களின் விற்பனை ரூ.24.5 லட்சம் கோடி ஆகும். 27 ஐரோப்பிய நிறுவனங்களும் 8 சீன நிறுவனங்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. சீன நிறுவனங்களின் தளவாட விற்பனை ரூ.8.9 லட்சம் கோடி ஆகும்.
விநியோகச் சங்கிலியில் நெருக்கடி ஏற்பட்டிருந்த போதிலும், 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2021-ல் ராணுவ தளவாட விற்பனை அதிகரித்து இருக்கிறது என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள 100 நிறுவனங்களின் விற்பனை 2021-ல் ரூ.48.5 லட்சம் கோடியாக உள்ளது. இது 2020-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.9% அதிகம்.
கரோனா ஊரடங்கு தளர்வையடுத்து 2021-ல் விநியோகச் சங்கிலியில் நெருக்கடி ஏற்பட்டது. இதனால், சரக்குகளை ஏற்றுமதி - இறக்குமதி செய்வது பெரும் சிக்கலுக்கு உள்ளானது. இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் போர், விநியோக நெருக்கடியை தீவிரப்படுத்தியது. விநியோகக் கட்டமைப்பில் நெருக்கடி ஏற்பட்டிருக்காதபட்சத்தில் ராணுவ தளவாட விற்பனை இன்னும் பல மடங்கு உயர்ந்திருக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...