Published : 18 Nov 2022 07:32 PM
Last Updated : 18 Nov 2022 07:32 PM
சிவகாசி: சிவகாசி பகுதியில் உள்ள காலண்டர் உற்பத்தி ஆலைகளில் தீபவாளிக்கு பின் அதிக அளவு ஆர்டர்கள் வந்துள்ளதால் இறுதிகட்ட காலண்டர் உற்பத்தி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிவகாசி சுற்றுவட்டார பகுதிகளில் பட்டாசு தொழிலுக்கு அடுத்தபடியாக அச்சக தொழில் பிரதானமாக உள்ளது. சிவகாசி பகுதிகளில் உள்ள 150க்கும் மேற்பட்ட அச்சகங்கள் காலண்டர் மற்றும் டைரி தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. தினசரி காலண்டரில் நாள், தேதியுடன் முக்கிய நிகழ்வுகள், பஞ்சாங்க குறிப்புகள் ஆகியவை இடம்பெற்றுள்ளதால் காலண்டர் நமது கலாச்சாரத்தோடு இணைந்த ஒன்றாகிவிட்டது.
காலண்டருக்கு 1996 முதல் 2017-ம் ஆண்டு வரை வரி விலக்கு அளிக்கப்பட்ட பொருட்கள் பட்டியிலில் காலண்டர் இருந்தது. ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட போது காலண்டருக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு அக்டோர் மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் 18 சதவீத வரி பிரிவில் காலண்டர் மற்றும் அச்சு மை ஆகியவை சேர்க்கப்பட்டதால் காலண்டர் விலை உயர்ந்தது. ஆர்ட் பேப்பர் விலை 45 சதவீதம் உயர்வு, மேப் லித்தோ பேப்பர் விலை 55 சதவீதம் உயர்வு, நாட்காட்டி வில்லைகளுக்கான போஸ்டர் பேப்பர் 40 சதவீதம் விலை உயர்வு, அச்சு மை மற்றும் அட்டை விலை உயர்வு காரணமாக காலண்டர் விலை உயர்ந்துள்ளது.
இதனால் ஆடி பெருக்கு அன்று புதிய டிசைன் ஆல்பம் வெளியிடப்பட்ட போது 35 சதவீதமாக இருந்த தினசரி காலண்டர் விலையேற்றம் தற்போது 40 சதவீதமாக அதிகரித்து உள்ளது. மாத காலண்டர் விலை 50 முதல் 55 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. 2023-ம் ஆண்டுக்கான காலண்டர் உற்பத்தி தொடங்கிய பின் பேப்பர் விலை 3 மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் பேப்பர் ஆலைகளில் இருந்து சப்ளை குறைந்துள்ளதால் இந்த ஆண்டு 10 சதவீதம் உற்பத்தி பாதிக்கப்படும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர் சங்க தலைவர் தியாகராஜன், செயலாளர் ஜெயசங்கர் கூறும்போது, "ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு அன்று புதிய டிசைன் வெளியிடப்பட்டு ஆர்டர்கள் பெற்று அச்சடிப்பு பணிகள் தொடங்கும். அதேபோல் இந்த ஆண்டும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு புதிய ஆல்பம் வெளியிடப்பட்டது. ஆனால் பேப்பர், அச்சு மை உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயர்வால் காலண்டர் விலை 49 சதவீதம் வரை உயர்ந்ததால் எதிர்பார்த்த அளவு ஆர்டர்கள் வராததால் காலண்டர் தயாரிப்பு பணியில் சுணக்கம் ஏற்பட்டது.
இந்நிலையில், தீபாவளி முடிந்த பின்னர் அதிக அளவு காலண்டர் ஆர்டர்கள் வந்ததுள்ளதால் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு காலண்டர் துறை வரலாறு காணாத அளவு விலையேற்றத்தை சந்தித்து உள்ளது" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT