Published : 17 Nov 2022 04:20 AM
Last Updated : 17 Nov 2022 04:20 AM

பஞ்சு விலை 10 நாட்களில் ஒரு கேண்டிக்கு ரூ.7,000 அதிகரிப்பு

கோவை: பஞ்சு விலை 10 நாட்களில் ஒரு கேண்டிக்கு ரூ.7 ஆயிரம் அதிகரித்துள்ளது.

ஆண்டுதோறும் பருத்தி பருவகாலம் அக்டோபரில் தொடங்கி செப்டம்பரில் நிறைவடையும். கடந்த பருவகாலத்தில் பஞ்சு விலை அபரிமிதமாக உயர்ந்தது. மே மாதத்தில் ஒரு கேண்டி(356 கிலோ) பஞ்சு ரூ.1 லட்சத்தை கடந்து வரலாறு படைத்தது. நவம்பர் 5-ம் தேதி ஒரு கேண்டி ரூ.64,500-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று(நவம்பர் 16) ஒரு கேண்டி ரூ.72 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. பஞ்சு விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது ஜவுளித் தொழில்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக இந்திய ஜவுளித் தொழில்முனைவோர் கூட்டமைப்பின்(ஐடிஎப்) கன்வீனர் பிரபு தாமோதரன் கூறியதாவது: நூல், துணி, வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்கள், ஆயத்த ஆடை ஏற்றுமதி என்ற பல்வேறு ஜவுளி உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி சீராக இருக்க வேண்டும் என்றால் மூலப்பொருளான பஞ்சின் விலை, நியாயமான அளவிலும், உலகச் சந்தையில் காணப்படும் விலையுடன் ஒட்டி இருக்க வேண்டும்.

மதிப்புக் கூட்டப்பட்ட ஜவுளிப் பொருட்களின் ஏற்றுமதி மட்டுமே அந்நியச் செலாவணியையும், வேலைவாய்ப்பையும் நம் நாட்டுக்குப் பெற்றுத் தரும். இந்தியாவில் நடப்பு பருத்தி ஆண்டு நல்ல தரமான அதிக அளவிலான பருத்தி வரத்து இருக்கும் என்றும், அதனால் விலை கட்டுக்குள் வந்து டிசம்பர் மாதம் முதல் பழைய நிலையை நோக்கி நகரத் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில் கடந்த 10 நாட்களில் அதுவும் பருத்தி பருவ கால தொடக்கத்தில் ஒரு கேண்டி ரூ.7 ஆயிரம் அதிகரித்துள்ளது ஜவுளித் தொழில்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நூற்பாலைகளுக்கு நஷ்டம் மேலும் அதிகரிக்கும். நூல் உற்பத்தியும் குறையும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின்(ஆர்டிஎப்) தேசிய தலைவர் ஜெயபால் கூறியதாவது: நூற்றாண்டு கடந்த பெருமைக்குரிய இந்திய ஜவுளித்தொழிலில் பருத்தி சாகுபடி, உள்நாட்டு தேவைக்கு தேவைப்படும் பஞ்சு உள்ளிட்ட அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் மத்திய அரசிடம் இல்லாதது மிகவும் வருந்தத்தக்கது. இன்றுவரை அனைத்து அனுமானத்தின் அடிப்படையில் மட்டுமே தெரிவிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கருத்துக்கணிப்பு வெளியிடுவது மற்றும் ஏப்ரல், மே மாதங்களிலேயே பஞ்சு 40 லட்சம் பேல்கள், 60 லட்சம் பேல்கள் பற்றாக்குறை என அறிவிப்பதும், ஒரு கேண்டிக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விலை உயர்வதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. பருத்தி சாகுபடி குறித்த புள்ளி விவரங்களை அரசு வைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்நாட்டின் தேவைக்குப் போக மட்டுமே பஞ்சு ஏற்றுமதிக்கு அனுமதிக்க வேண்டும். பஞ்சு இறக்குமதிக்கு விதிக்கப்படும் 11 சதவீத வரியை முற்றிலும் நீக்க வேண்டும். எம்சிஎக்ஸ் என்ற முன்பேர வர்த்தக பட்டியலில் இருந்து பஞ்சு நீக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x