Published : 15 Nov 2022 06:46 AM
Last Updated : 15 Nov 2022 06:46 AM
சென்னை: மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் தங்கப் பத்திரங்கள் மூலம் அதிக லாபம் கிடைப்பதுடன், 100 சதவீதம் பாதுகாப்பானது என்பதால் இதில் முதலீடு செய்ய மக்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
அழகு, சேமிப்பு, முதலீடு என பல்வேறு காரணங்களுக்காக மக்கள் விரும்பி வாங்கும் பொருள் தங்கம். சிலர் நகையாக வாங்கி அணிகின்றனர். சிலர் முதலீட்டு நோக்கில் தங்கக் கட்டிகள், தங்கக் காசுகளாக வாங்கி சேமிக்கின்றனர். கல்வி, மருத்துவம், திருமணம் என அவசர காலங்களில் கைகொடுக்கும் என்பதால், விலை போலவே தங்கத்தின் மவுசும் கூடிக்கொண்டே போகிறது. நாளுக்குநாள் தேவை அதிகரிப்பதால், வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால், அந்நியச் செலாவணி குறைந்து, இந்தியப் பொருளாதாரத்தில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் 80% லாபம்
இதற்கு தீர்வு காணும் வகையில் மத்திய அரசு, ‘டிஜிட்டல் கோல்டு’ எனும் மின்னணு தங்கத்தை அறிமுகப்படுத்தி, ஊக்கப்படுத்தி வருகிறது. இதில் ஒருவகை தான் ‘சாவரின் கோல்டு பாண்ட்’ (Sovereign Gold Bond) எனப்படும் தங்கப் பத்திரம். இந்த தங்கப் பத்திரங்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. இதை வாங்கியவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 80 சதவீதம் வரை லாபம் கிடைத்துள்ளது. இதனால், இந்த பத்திரங்களை வாங்க பொதுமக்களிடம் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
தங்கப் பத்திரங்களை எவ்வாறு வாங்குவது மற்றும் இதன் பயன்கள் குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:
அதிகபட்சமாக 4 கிலோ வாங்கலாம்
மத்திய அரசு வெளியிடும் தங்கப் பத்திரங்களை 1, 5, 10, 50, 100 கிராம் என்ற அளவில் வாங்கலாம். நிதி ஆண்டில் ஒருவர் அதிகபட்சமாக 4 கிலோ வரை தங்கம் வாங்க முடியும். வங்கி சேமிப்புக் கணக்கு, பான் எண், ஆதார் எண் இருந்தால் தங்கப் பத்திரங்களை வாங்க முடியும். காகித வடிவிலும், ஆன்லைன் மூலம் எலெக்ட்ரானிக் வடிவிலும் இதை வாங்கலாம். எலெக்ட்ரானிக் வடிவில் வாங்குவதற்கு டீமேட் கணக்கு வைத்திருக்க வேண்டும். வங்கிகள், தபால் நிலையங்கள், பங்குச் சந்தை மூலமாகவும் இந்தப் பத்திரங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
பங்குச் சந்தையில் பட்டியலிடப்படுவதால், இந்த பத்திரங்களை டீமேட் கணக்கு மூலம் எப்போது வேண்டுமானாலும் விற்கலாம். இத்திட்டத்தில், முதலீட்டுக் காலம் முடிந்ததும் தங்கமாக வழங்கப்படாது. மாறாக, பணமாகவே வழங்கப்படும். அந்த பணத்தை பயன்படுத்தி தேவையான நகையை வாங்கிக் கொள்ளலாம்.
பொதுவாக, நம் சேமிப்பைக் கொண்டு தங்க நகை வாங்கும் போது செய்கூலி, சேதாரம் ஆகியவை வசூலிக்கப்படும். ஆனால், தங்கப் பத்திரமாக வாங்குவதால், இதுபோன்ற இழப்புகள் தவிர்க்கப்படுகின்றன. நகை வடிவில் இல்லாமல், பத்திரம் வடிவில் இருப்பதால் திருடு போகும் அபாயம் இல்லை. இதை பாதுகாக்க லாக்கர் செலவும் கிடையாது.
தங்கம் விலை ஏறுவதால் கிடைக்கும் லாபம் தவிர, ஆண்டுக்கு 2.5 சதவீத வட்டியும் முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும். மத்திய அரசின் திட்டம் என்பதால், 100 சதவீதம் உத்தரவாதமானது. மேலும், இப்பத்திரத்தை ஒருவர் பெயரில் இருந்து வேறொருவர் பெயருக்கு மாற்ற முடியும்.
இப்பத்திரத்தின் முதிர்வுக் காலம் 8 ஆண்டுகள். ஆனால், 5 ஆண்டுகள் முடிந்தபிறகு, பத்திரத்தை திருப்பி கொடுத்துவிட்டு, முதலீட்டை எடுத்துக் கொள்ளும் வசதி உள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு ஒரு பத்திரத்தின் விலை ரூ.2,600-க்கு வெளியிடப்பட்டது. தற்போது சுமார் 80 சதவீதத்துக்கும் மேல் லாபத்தில் உள்ளது. இப்பத்திரங்களை ஆண்டுக்கு ஒருசில முறைதான் ரிசர்வ் வங்கி வெளியிடுகிறது. தங்கத்தில் மொத்தமாக முதலீடு செய்பவர்களுக்கு ஏற்ற திட்டம் இது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT