Last Updated : 06 Nov, 2016 12:55 PM

 

Published : 06 Nov 2016 12:55 PM
Last Updated : 06 Nov 2016 12:55 PM

`டெர்ம் பிளானில் அதிக கவனம் செலுத்துகிறோம்’

காப்பீட்டுத் துறையில் வழக்கமான மணிபேக், யூலிப் உள்ளிட்ட பாலிசிகளுக்கு கவனம் செலுத்தி வந்த நிலையில் டெர்ம் இன்ஷூரன்ஸில் கவனம் செலுத்துகிறது. ஏகன் லைப் இன்ஷூரன்ஸ் நிறுவனம். டெர்ம் பாலிசிகளில் முதல் முதலில் ஆன்லைனில் கொண்டு வந்ததும் இந்த நிறுவனம்தான். இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கே.எஸ். கோபாலகிருஷ்ணன் சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்திருந்தார். அவருடன் உரையாடியதிலிருந்து…

எல்.ஐ.சியில் தன்னுடைய காப்பீட்டு துறை வாழ்க்கையை தொடங்கினார். 30 வருடங்களுக்கு மேலான அனுபவம் கொண்டவர். பிர்லா சன்லைப், பார்தி ஆக்ஸா உள்ளிட்ட நிறுவனங்களில் பணியாற்றியவர். பிர்லா சன்லைப் நிறுவனத்தின் பணியாற்றிய சமயத்தில் (2001-ம் ஆண்டு) யூலிப் பாலிசியை இந்தியாவில் அறிமுகம் செய்தவர். 2009-ம் ஆண்டு டெர்ம் இன்ஷூரன்ஸை ஆன்லைனில் அறிமுகப்படுத்தியர். ஏகன் நிறுவனத்தில் 9 வருடங்களாக பணிபுரிகிறார்.

எல்.ஐ.சி. பொதுத்துறை நிறுவனம். 20 வருடங்களுக்கு முன்பே வெளியேறினீர்கள். ஏன் வெளியேற வேண்டும். வெளியேற குடும்பத்தினர் அனுமதித்தார்களா?

பணி பாதுகாப்பு குறித்த விவாதங்கள் நடந்தன. ஆனால் என்னுடைய தகுதிக்கு (actuary - ரிஸ்க் மற்றும் நிச்சமற்ற தன்மையை நிர்வாகம் செய்பவர்கள்). சர்வதேச அளவில் வேலை வாய்ப்பு இருப்பு இருந்தது. அதனால் அந்த ரிஸ்க் எடுத்தேன்.

பல காப்பீட்டு நிறுவனங்கள் முகவர்களை கையாளுவதற்கே தலைமை முகவர் அலுவலர்கள் நியமித்திருக்கிறார்கள். ஆனால் நீங்கள் முகவர்கள் மூலமாக காப்பீடு விற்பனை நிறுத்தி, முழுவதுமாக ஆன்லைனுக்கு சென்றுவிட்டீர்கள். காரணம் என்ன?

பொதுவாக காப்பீடு வாங்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் என்ன பாலிசி, எங்கு எடுக்கலாம் என்பது போன்ற விஷயங்களை பெரும்பான்மையானவர்கள் இணையத்தில் தேடுகிறார்கள். அதன் பிறகு தெரிந்தவர்களிடம் கேட்பார்கள், பிறகு ஏதாவது ஒரு முறையில் பாலிசி எடுக்கிறார்கள். ஆனால் நாங்கள் நேரடியாக அவர்களே பாலிசி வாங்குவதற்கு வசதி செய்திருக்கிறோம். நீங்கள் நேரடியாக இணையத்தில் வாங்கலாம். வாடிக்கையாளர் மையத்துடன் தொடர்பு கொண்டால் பாலிசி குறித்து தகவல்கள் எப்படி எடுப்பது என்பது குறித்து உதவி செய்வார்கள். நான் நேரில் சந்தித்த பிறகுதான் வாங்குவேன் என்றால் அதற்கும் வழி இருக்கிறது.

எங்களுக்கு இந்தியா முழுவதும் 30 அலுவல கங்கள் இருக்கிறது. அங்கு இதற்காகவே பிரத் யேக அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் ஏஜென்ட்கள் கிடையாது. அவர்களுக்கு நாங்கள் சம்பளம் கொடுக்கிறோம் என்பதால், வாடிக்கை யாளரின் தேவையை அவர் பூர்த்தி செய்வார்.

முகவர்கள் இல்லாத சூழ்நிலையில் 30 அலுவலகங்கள் போதுமா?

இந்தியா மிகப்பெரிய நாடு. அனைத்து இடங்களிலும் அலுவலகம் அமைப்பது என்பது இப்போதைக்கு கடினமான விஷயம். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, கோவையில் எங்களுக்கு அலுவலகங்கள் உள்ளன. ஒரு நகரத்தில் இயங்கும் காப்பீடு நிறுவனங்களில் முதல் 5 இடத்துக்குள் வந்த பிறகுதான் விரிவாக்கம் குறித்து யோசிக்க முடியும். இங்கு அலுவலகங்கள் அமைப்பதைவிட காப்பீடு குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். எங்களுடைய வாடிக்கையாளர்கள் இணையத்தில் இருப்பவர்கள். அதனால் இணையம் மூலமான விழிப்புணர்வினை தொடர்ந்து செய்துவருகிறோம். தவிர சந்தை யில் 24 நிறுவனங்கள் இருக்கின்றன. இது தான் தனித்துவமான வழி. 35 வயதுக்கு கீழ் இருப்பவர்கள் அதிகமாக இருக் கிறார்கள். 4ஜி வந்துவிட்டது. அதனால் இணையம் மூலம் விற்பதில் கவனம் செலுத்துகிறோம்.

வங்கிகள் மூலம் விற்க ஆரம்பித்துவிட்டீர்களா?

அவர்கள் ஏற்கெனவே ஏதாவது ஒரு நிறுவனத்தின் பாலிசிகளை விற்றுவருகிறார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட பாலிசிகளை வங்கிகள் விற்கலாம் என ஐஆர்டிஏ சில மாதங்களுக்கு முன்புதான் அனுமதி வழங்கியது. இது குறித்து வங்கிகளிடம் பேசி வருகிறோம்.

கிளைம் விகிதம் எப்படி இருக்கிறது? ஆன்லைன் மூலம் கிளைம் பெறுவது எளிதாக இருக்கிறதா?

இதுவரை நாங்கள் ஆன்லைன் மூலம் விற்ற பாலிசிகளின் கிளைம் விகிதம் 100 சதவீதம். பாலிசி குறித்த ஆவணத்தில் நாமினி பெயர், பாலிசி நம்பர், கிளைம் எப்படி வாங்குவது என்பது குறித்த தகவல் இருக்கும். அதன்படி ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யலாம். அலுவலகத்துக்கு தபாலில் அனுப்ப லாம் அல்லது அருகில் இருக்கும் அலுவலகத் துக்கு சென்று ஆவணங்களை கொடுக்கலாம். தவிர ஏஜென்ட் மூலம் விற்கப்பட்டாலும் கிளைம் போது அவர் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இ-காமர்ஸ் நிறுவனங்களில் விற்க முடிவெடுத்திருக்கிறீர்களா?

தற்போது பாலிசி பஜார், பேங்க்பஜார் உள்ளிட்ட நிறுவனங்களில் காப்பீட்டு நிறுவனங்களின் பாலிசி விற்கப்பட்டு வருகின்றன. பிளிப்கார்ட், ஸ்நாப்டீல், அமேசான் ஆகிய நிறுவனங்களில் விற்பதற்கான விதிமுறைகளை ஐஆர்டிஏ வடிவ மைத்துவருகிறது. அவை இறுதி செய்யப்பட்ட பிறகு இ-காமர்ஸ் நிறுவனங்களில் விற்கலாம்.

நீங்கள் அதிகம் விற்கும் பாலிசி எது?

நாங்கள் டெர்ம் பிளானில் அதிக கவனம் செலுத்துகிறோம். நாங்கள் விற்கும் பாலிசிகளில் 40 சதவீதம் டெர்ம் பிளான்கள்தான்.

டெர்ம் பாலிசி விற்பது லாபகரமானதா?

மற்ற பாலிசிகள் விற்பதைவிட டெர்ம் பாலிசிதான் (பாலிசிதாரர் இறந்தால் மட்டுமே காப்பீட்டு தொகை கிடைக்கும், மற்ற பாலிசிகளை போல இங்கு முதிர்வு தொகை கிடையாது) லாபகரமானது.

டெர்ம் பாலிசி விற்பது லாபகரமானது என்றால் மற்ற நிறுவனங்கள் அதில் கவனம் செலுத்தாதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?

பொதுவான பதிலை கூறுகிறேன். இன்ஷூரன்ஸ் இன்னமும் விற்கும் பொருளாகதான் இருக்கிறது. வாங்கும் பொருளாக மாறவில்லை. பொதுவாக வீடுகளுக்கு காலை அல்லது மாலையில் சென்று ஏஜென்ட் பேசுவது வழக்கம். அங்கு சென்று நீங்கள் இறந்துவிட்டால் இவ்வளவு தொகை கிடைக்கும் என்று கூறுவது அசௌகரியமாக இருக்கும். ஆனால் உங்களுக்கு குழந்தை இருக்கிறது. அவர்களின் கல்வி தேவை, எதிர்காலம், ஓய்வு, வரிச்சலுகை, மணிபேக் என்று பேசுவது வசதியாக இருக்கிறது.

ஆனால் டெர்ம் பிளான் குறித்து ஆன்லைனில் எழுத முடியும். படிப்பவர்களும் அதனால் கவலை படுவதை விட யோசிப்பார்கள். இப்போது இது குறித்து விழிப்புணர்வு உயர்ந்து வருகிறது.

வெளிநாடுகளில் பணிபுரிந்து இருக்கிறீர்கள். இந்திய காப்பீட்டு துறைக்கும், வெளிநாட்டு காப்பீட்டு துறைக்கும் என்ன வித்தியாசம்?

இந்தியாவில் யூலிப் பாலிசியில் காப்பீட் டுக்கு எவ்வளவு தொகை செல்கிறது, முத லீட்டு எவ்வளவு தொகை செல்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதேபோல வெளிநாடு களில் பெரும்பாலான பாலிசிகளில் கூட இவ்விதம் பிரிக்கப்பட்டிருக்கும்.

karthikeyan.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x