Published : 09 Nov 2022 06:57 PM
Last Updated : 09 Nov 2022 06:57 PM
ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா (Meta Platforms Inc) தமது பணியாளர்களில் 11,000-க்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. அதன் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸக்கர்பெர்க் இதையொட்டிய விளக்கத்தையும் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்று தொடக்கத்தில் ஏற்பட்ட இணைய வணிகம், இணைய பயன்பாடு அதிகரிப்பு ஆகியவை நிரந்தரமாக இருக்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், மிகப் பெரிய அளவில் நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சி, அதிகரித்த போட்டி மற்றும் விளம்பரங்கள் மூலமான வருவாய் இழப்பு ஆகியவை எதிர்பார்த்ததை விட குறைவான வருவாயையே அளித்தன. பணி நீக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய கஷ்டத்தை அளிக்கும் என்பதை அறிவேன். பணி நீக்கத்தால் பாதிக்கப்படுவர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கோருகிறேன். இத்தகைய நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் ஏன் ஏற்பட்டதோ அதற்கும், பணி நீக்கத்திற்கும் நான் பொறுப்பேற்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
மெட்டாவின் பொருளாதார நிலை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என்பதை அறிந்து, சிக்கன நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கடந்த செப்டம்பரிலேயே மார்க் ஸக்கர்பெர்க் அறிவுறுத்தி உள்ளார். மேலும், சந்தை நிலைக்கு ஏற்ப பணியாளர் குழுக்களில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
நிறுவனம் தொடங்கப்பட்டு முதல் 18 ஆண்டுகளுக்கு தொடர் வளர்ச்சியை பார்த்து வந்ததாகவும், ஆனால் முதல்முறையாக தற்போது வருவாய் எதிர்பார்த்ததை விட குறைந்திருப்பதாகவும் மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.
பணி நீக்க நடவடிக்கை மூலம் மெட்டா தனது பணியாளர்களில் 13% பணியாளர்களை பணி நீக்கம் செய்கிறது. ஸ்நாப்சேட் நிறுவனம் கடந்த ஆகஸ்ட்டில் 20 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. ட்விட்டர் நிறுவனம் கடந்த வாரம் 50 சதவீத பணியாளர்களை பணி நீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT