Published : 04 Nov 2022 05:15 AM
Last Updated : 04 Nov 2022 05:15 AM
மும்பை: சர்வதேச அளவில் மத்திய வங்கிகளின் வட்டி விகித உயர்வு, ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர், சீனாவின் பொருளாதார மந்தநிலை ஆகிய மூன்று காரணிகளால் ஆசிய பசிபிக் பிராந்தியம் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது. இதையடுத்து சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் உணவு பொருள்களின் விலை அதிகரித்தது. பணவீக்கம் உச்சம் தொட்டது. இதனால், உலக நாடுகளின் பொருளாதாரம் தடுமாற்றத்தை எதிர்கொண்டது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உலக அளவில் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தின.
குறிப்பாக அமெரிக்க பெடரல் ரிசர்வ் தொடர்ச்சியாக வட்டி விகிதத்தை உயர்த்தியது. இதனால் டாலருக்கு நிகரான ஆசிய பசிபிக் நாடுகளின் நாணய மதிப்பு சரிந்துள்ளது. இவை தவிர, சீனாவில் நிலவும் பொருளாதார மந்தநிலையும் ஆசிய பசிபிக் நாடுகளுக்கு ஆபத்தாக உள்ளது என்று ஐஎம்எஃப் ஆசிய பசிபிக் பிராந்திய துறைத் தலைவர் ஷனகா ஜெயநாத் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
உலக அளவில் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளபோதிலும், சீனா இன்னும்தீவிரக் கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருகிறது. இதனால், அந்நாட்டில் தொழிற்செயல்பாடுகள் நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கின்றன. இதன் காரணமாக சீனாவுடன் மற்ற நாடுகளின் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஒப்பிட்டளவில் ஆசிய பசிபிக் நாடுகளில் இந்தியாவின் பொருளாதாரம் மட்டுமே வலுவாக உள்ளது என்று ஷனகா ஜெயநாத் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT