Published : 03 Nov 2022 09:28 AM
Last Updated : 03 Nov 2022 09:28 AM
புதுடெல்லி: இந்தியாவின் நுகர்வோர் பொருளாதாரம் மீதான மக்கள் ஆராய்ச்சி (PRICE) என்ற சிந்தனை அமைப்பின் சார்பில், ‘இந்தியாவின் நடுத்தர பிரிவு மக்கள் வளர்ச்சி’ என்ற பெயரில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 1994-95 முதல் 2020-21 வரை இந்தியர்களின் பொருளாதார நிலை எப்படி உயர்ந்துள்ளது என்பது குறித்த புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில், 2021-ல் வருமான அடிப்படையில் மக்கள் 7 குழுக்களாக பிரிக்கப்பட்டனர்.
குறைந்தபட்சமாக குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.25 லட்சத்துக்குக் கீழ் உள்ளவர்கள் மிகவும் வறுமையானவர்கள் என்றும் அதிகபட்சமாக ரூ.2 கோடிக்கு மேல் குடும்ப வருமானம் கொண்டவர்கள் சூப்பர் பணக்காரர்கள் என்றும் வகைப்படுத்தப்பட்டனர். ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரையில் குடும்ப ஆண்டு வருவாய் ஈட்டுவோர் நடுத்தர பிரிவு மக்கள் என பிரிக்கப்பட்டனர்.
இதன்படி, 1994-95-ல் 98 ஆயிரமாக இருந்த சூப்பர் பணக்கார குடும்பங்கள் எண் ணிக்கை, 2021-ல் 18 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் 6.4 லட்சத்துடன் மகாராஷ்டிரா முதலிடம் பிடித்துள்ளது. டெல்லி (1.81 லட்சம்), குஜராத் (1.41லட்சம்), தமிழ்நாடு (1.37 லட்சம்), பஞ்சாப் (1.01 லட்சம்) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
நடுத்தர பிரிவு மக்கள் எண்ணிக்கை 14-லிருந்து 31% ஆக உயர்ந்துள்ளது. அதாவது நாட்டு மக்களில் 3-ல் ஒருவர் நடுத்தர பிரிவில் உள்ளனர்.
மிகவும் வறுமையானவர்கள் கார் வாங்க முடியாத நிலையில் உள்ளனர். ரூ.1.25 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை வருவாய் ஈட்டும் 10-ல் 5 பேர் மோட்டார் வாகனம் வைத்துள்ளனர். ரூ.5 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை வருவாய் ஈட்டும் 10-ல் 3 குடும்பத்தினர் கார் வைத்துள்ளனர். ரூ.30 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டும் பணக்கார குடும்பத்தினர் அனைவரும் கார் வைத்துள்ளனர். இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்த ஆய்வை நடத்தியவரும் ‘பிரைஸ்’ நிர்வாக இயக்குநருமான ராஜேஷ் சுக்லா கூறும்போது, “அரசியல் மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் விரும்பத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினால், 2047-ம் ஆண்டில், ஒட்டுமொத்த மக்கள் தொகையில் நடுத்தர பிரிவு மக்கள் பங்கு 63% ஆக அதிகரிக்கும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT