Published : 02 Nov 2022 05:59 PM
Last Updated : 02 Nov 2022 05:59 PM
மும்பை: ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ள டிஜிட்டல் கரன்சி தொழில் துறையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் இந்திய வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற வருடாந்திர மாநாட்டில் சக்திகாந்த தாஸ் ஆற்றிய உரை: “மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி (CBDC) என்ற பெயரில் ரிசர்வ் வங்கி, பரிசோதனை முறையில் நேற்று டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தி உள்ளது. இது நமது நாட்டின் நாணயம் தொடர்பான வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை. இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணம். நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கையில் இது மிகப் பெரிய சாதனையாக இருக்கப் போகிறது. தொழில் நடைபெறும் வழிமுறையில் இது மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
பரிசோதனை முறையில் சில்லறை வர்த்தகத்திற்கான டிஜிட்டல் கரன்சி, இந்த மாதத்திற்குப் பிறகு அறிமுகப்படுத்தப்படும். அதற்கான தேதி தனியாக அறிவிக்கப்படும். அதேநேரத்தில், டிஜிட்டல் கரன்சியை முழு அளவில் பயன்பாட்டுக்கு விடுவது எப்போது என்ற கேள்விக்கு இப்போது பதில் அளிக்க விரும்பவில்லை. ஏனெனில், இதில் இறுதி கெடு எதுவும் நிர்ணயிக்க நான் விரும்பவில்லை. இதை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், டிஜிட்டல் கரன்சி தற்போதுதான் உலகிற்கு அறிமுகமாகி இருக்கிறது. ஒரு சில நாடுகளே டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்தி உள்ளன. எனவே, நாங்கள் அதிகப்படியான வேகத்தைக் காட்ட விரும்பவில்லை. அனுபவத்தின் மூலம் கற்க வேண்டியது இருக்கிறது.
விவசாயிகளுக்கான கடன் அட்டை 2023-க்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். தற்போது இந்தத் திட்டம் பரிசோதனை முறையில் மத்தியப் பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில மாவட்டங்களில் மட்டுமே அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் விவசாயிகள் கடன் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்தின் நடைமுறையில் இருந்து கிடைக்கும் அனுபவத்தின் அடிப்படையில் இது விரிவுபடுத்தப்படும். அனைத்தும் சரியாக இருப்பது உறுதிப்படுத்தப்படுமானால், இந்த திட்டம் வரும் 2023ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்.
விவசாயிகளுக்கான கடனுக்காக மட்டுமல்லாது, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கும் இதே வகையில் கடன் அட்டை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவை அனைத்துமே வரும் 2023-க்குள் நிறைவடையும் என நம்புகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT