Published : 02 Nov 2022 07:32 AM
Last Updated : 02 Nov 2022 07:32 AM

தங்கத்தின் தேவை 2-ம் காலாண்டில் 14% உயர்வு

புதுடெல்லி: நாட்டில் கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையை தங்கத்தின் தேவை எட்டியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் 14 சதவீதம் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.

2022-ம் ஆண்டின் 3-ம் காலாண்டில் உலகில் தங்கத்தின் தேவை தொடர்பான அறிக்கையை உலக தங்க கவுன்சில் (டபிள்யூஜிசி) வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை:

கடந்த 2021-2022-ம் நிதியாண்டின் 2-வது காலாண்டில் (ஜூலை முதல் செப்டம்பர் வரை) இந்தியாவில் தங்கத்தின் தேவை 168 டன்னாக இருந்தது. நடப்பு நிதியாண்டின் இதே காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 14 சதவீதம் அதிகரித்து 191.7 டன்னாக உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டுடன் இதை ரூபாய் மதிப்பில் ஒப்பிடும்போது இது 19 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது கடந்த நிதியாண்டின் 2-ம் காலாண்டில் இதன் மதிப்பு ரூ.71,630 கோடியாக இருந்தது. தற்போது இது 19 சதவீதம் அதிகரித்து ரூ.85,010 கோடியாக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து உலக தங்க கவுன்சில் பிராந்திய தலைமைச் செயல் அதிகாரி (இந்தியா) பி.ஆர்.சோமசுந்தரம் கூறியதாவது:

2022-ம் ஆண்டின் 2-ம் காலாண்டில் 191.7 டன்னாக உள்ள இந்தியாவின் மொத்த தங்கத் தேவை கடந்தஆண்டை விட 14 சதவீதம் அதிகரித்துள்ளது. இது எதிர்பார்த்ததை விட சிறந்த செயல்திறன், வலுவான நுகர்வோர் ஆர்வம் ஆகியவற்றை பிரதிபலிக்கிறது. கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய காலத்தில் தங்கத்தின் தேவை இருந்ததைப் போல் தற்போதைய நிலை உள்ளது.

அதேபோல் 2-ம் காலாண்டில் நாட்டில் தங்க நகைகளின் தேவை 17 சதவீதம் அதிகரித்து 146.2 டன்னாக உள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் இது 125.1 டன்னாக இருந்தது.

2-ம் காலாண்டு முடிவில் வங்கிக் கடன் வளர்ச்சி ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது, கடன் விரிவாக்கம் ஆகியவை இந்த தேவைக்கு உத்வேகத்தைச் சேர்த்துள்ளது.

தீபாவளிப் பண்டிகை, 4-ம் காலாண்டில் நடைபெறவுள்ள திருமண வைபவங்களால் தங்கத்தின் தேவை மேலும் அதிகரிக்கும். கடந்த ஆண்டைப் போலவே இந்தஆண்டுக்கான தங்கத்தின் தேவை750 முதல் 800 டன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் 2021-ல் 1,003 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் அதே அளவு இறக்குமதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டில் இதுவரை 559 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x