Published : 23 Oct 2022 04:25 AM
Last Updated : 23 Oct 2022 04:25 AM
தீபாவளி பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் 1,000 ஸ்பின்னிங் மில்கள் மற்றும் 300 ஓபன் எண்ட் நூற்பாலைகளுக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜவுளித்தொழில் கடந்த சில மாதங்களாக காணப்பட்ட கடுமையான பஞ்சு விலை ஏற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்டது. 356 கிலோ பஞ்சு கொண்ட ஒரு கேண்டி பஞ்சு ஒரு லட்சம் ரூபாயை கடந்தது. இதையடுத்து பஞ்சு இறக்குமதி வரி ரத்து, யூக வணிகத்தை கண்காணித்தல், பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த வல்லுநர்கள் அடங்கிய சிறப்பு கமிட்டி அமைப்பு என்பன உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.
இதன் காரணமாக படிப்படியாக பஞ்சு விலை குறைந்து தற்போது ஒரு கேண்டி ரூ.68 ஆயிரமாக உள்ளது. பஞ்சு விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 2,000 ஸ்பின்னிங் மில்களும் (சுத்தமான பஞ்சு கொண்டு நூல் தயாரிப்பு) 600 ஓபன் எண்ட் நூற்பாலைகளும் (கழிவு பஞ்சு கொண்டு நூல் தயாரிப்பு) செயல்படுகின்றன. பெரும்பாலான நிறுவனங்களில் தீபாவளியை முன்னிட்டு ஒரு வாரத்துக்கு மேல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பருத்தி கூட்டமைப்பு (ஐசிஎப்) தலைவர் துளசிதரன் கூறியதாவது: இன்று சந்தையில் பஞ்சு மற்றும் நூல் விலையை ஒப்பிடுகையில் நூற்பாலைகளை இயக்கினால் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நூல் விலை உயர வேண்டும் அல்லது பஞ்சு விலை ஒரு கேண்டி ரூ. 60 ஆயிரம் வரை குறைய வேண்டும். இதன் காரணமாகவே ஸ்பின்னிங் மில் நிர்வாகங்கள் சிறிது காலம் பொறுத்திருக்க முடிவு செய்து உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி தொழிலாளர்களுக்கு விடுமுறை அளித்துள்ளனர்.
இது தவிர சொந்த ஊர்களுக்கு செல்லும் வடமாநில தொழிலாளர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப பல நாட்களாகும். இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஸ்பின்னிங் மில் தொழில்துறையினர் ஒரு வாரம் மற்றும் அதற்கு மேல் விடுமுறையை அமல்படுத்தியுள்ளனர், என்றார்.
தென்னிந்திய மில்கள் சங்கத்தின் (சைமா) தலைவர் ரவிசாம், இந்திய ஜவுளித்தொழில்கள் கூட்டமைப்பின் தலைவர் ராஜ்குமார் ஆகியோர் கூறியதாவது: பஞ்சு விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒரு கேண்டி ரூ.70 ஆயிரமாக குறைந்த போது பஞ்சு அதிகளவு வாங்க தொழில்முனைவோர் ஆர்வம் காட்டினர். ஆனால் இன்று(நேற்று) பஞ்சு விலை ஒரு கேண்டி ரூ.68 ஆயிரமாக குறைந்துள்ளது.
மேலும் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பஞ்சு வாங்குவதில் தொழில்முனைவோர் மத்தியில் குழப்பமான சூழல் நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் 1,000 ஸ்பின்னிங் மில்கள் மூடப்பட்டுள்ளன. தீபாவளி பண்டிகைக்கு பின் பஞ்சு வாங்கி இருப்பு வைப்பதில் தொழில்முனைவோர் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும், என்றனர்.
தமிழ்நாடு ஓபன் எண்ட் நூற்பாலைகள் சங்க (ஓஸ்மா) தலைவர் அருள்மொழி கூறியதாவது: தமிழகத்தில் 600 ஓபன் எண்ட் நூற்பாலைகள் செயல்படுகின்றன. கழிவு பஞ்சு விலை கணிசமாக அதிகரித்து ஒரு கிலோ ரூ.140 வரை விற்பனை செய்யப்படுகிறது. பஞ்சு விலை தொடர்ந்து குறைந்து வருவதால் எதிர்வரும் நாட்களில் கழிவு பஞ்சு விலையும் கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒரு கிலோ கழிவு பஞ்சு ரூ.100-க்கு கிடைத்தால்தான் ஓபன் எண்ட் நூற்பாலைகள் லாபத்தில் இயக்க முடியும். இதை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு ஒவ்வொரு ஓபன் எண்ட் நூற்பாலைகளிலும் நிலைமைக்கேற்ப ஒரு வாரம், இரண்டு வாரம் என விடுமுறை அளிக்கப்பட்டு 300 ஓபன் எண்ட் நூற்பாலைகள் மூடப்பட்டுள்ளன, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment