Published : 20 Oct 2022 04:33 PM
Last Updated : 20 Oct 2022 04:33 PM

ஏற்றத்துடன் பங்குச்சந்தை நிறைவு: சென்செக்ஸ் 96 புள்ளிகள், நிஃப்டி 50 புள்ளிகள் உயர்வு

கோப்புப் படம்

மும்பை: மும்பை பங்குச்சந்தையில் வியாழக்கிழமை மாலை வர்த்தகம் முடிவைடையும்போது சென்செக்ஸ் 96 புள்ளிகள் (0.16 சதவீதம்) உயர்ந்து 59,203 ஆக இருந்தது. அதேநேரத்தில், தேசியப் பங்குச்சந்தையில் நிஃப்டி 50 புள்ளிகள் (0.03 சதவீதம்) உயர்ந்து 17,564 ஆக இருந்தது.

இந்தியப் பங்குச்சந்தையில் இன்று (அக்.20) வர்த்தகம் வீழ்ச்சியுடனே தொடங்கியது. காலை 9.30 மணியளவில் சென்செக்ஸ் 159 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 58,947 ஆக இருந்தது. அதேவேளையில், நிஃப்டி 31 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 17,480 ஆக இருந்தது.

மும்பை பங்குச்சந்தையில் மாலையில் வர்த்தகம் நிறைவடைந்தபோது சென்செக்ஸ் 95.71 புள்ளிகள் உயர்ந்து 59202.90 ஆக நிலைகொண்டிருந்தது. அதேபோல், தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 51.70 புள்ளிகள் ஏற்றம் கண்டு 17563.95 ஆக இருந்தது.

சர்வதேச பங்குச்சந்தையின் நிலவி வந்த பாதகச் சூழலின் எதிரொலியாக காலையில் வர்த்தகம் பின்னடைவை சந்தித்தது. எனினும், பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்களிடம் ஆர்வம் மிகுந்து காணப்பட்டதால் வர்த்தகம் நிறைவடையும்போது பங்குச்சந்தைக் குறியீட்டு எண்கள் மீண்டு ஏற்றம் கண்டன.

இன்றைய வர்த்தகத்தில், ஹெச்சிஎல் டெக், டெக் எம், பவர் க்ரிடு, டிசிஎஸ், பஜார்ஜ் பைனான்ஸ், என்டிபிசி, நெஸ்ட்லே இந்தியா, டிசிஎஸ், என்ஃபோசிஸ், பாரதி ஏர்டெல் பங்குகள் 1 முதல் 2 சதவீதம் உயர்ந்து காணப்பட்டன. இன்டஸ் பேங்க், ஆசியன் பெயிண்ட்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹெச்டிஎஃப்சி, டைட்டன், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், கோட்டாக் பேங்க் பங்குகள் 0.5 முதல் 4.7 சதவீதம் வரையில் சரிவை சந்தித்திருந்தன.

இதற்கிடையில், இந்திய ரூபாயின் மதிப்பு புதிய சரிவைக் கண்டது. காலை வர்த்தக தொடக்கத்தில் ரூபாயின் மதிப்பு மேலும் 6 காசுகள் சரிந்து 83.12 என்றளவிற்கு இறங்கியது. கடந்த 8 நாட்களாக 82 முதல் 82.70 வரை ஊசலாடிக் கொண்டிருந்த இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 83.08 என்றளவிற்கு இறங்கியது. 83-க்கும் கீழ் ரூபாய் மதிப்பு சரிவதே இதுவே முதன்முறை. வர்த்தக நேர முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக 82.75 என இருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x