Published : 14 Oct 2022 03:43 PM
Last Updated : 14 Oct 2022 03:43 PM
ரியாத்: ரஷ்யாவை சவுதி அரேபியா ஆதரிக்கிறது என்ற அமெரிக்காவின் குற்றச்சாட்டை சவுதி திட்டவட்டமாக மறுத்துள்ளது.
கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் ரஷ்யா, சவுதி போன்ற நாடுகளின் கூட்டமைப்பு ஒபெக்+ என்று அழைக்கப்படுகின்றன. இந்நிலையில், கச்சா எண்ணெய் விலையைக் கட்டுப்படுத்த ஒபெக் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 20 லட்சம் பேரல்கள் குறைத்துள்ளன. இதன் காரணமாக 75 டாலராக இருந்த ஒரு பேரல் தற்போது 90 டாலராக அதிகரித்துள்ளது.
ஓபெக்+ நாடுகளின் இந்த முடிவு பணவீக்கத்தை சந்தித்து வரும் நாடுகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்காவும் சவுதியை கடுமையாக விமர்சித்துள்ளது. இதற்கான விளைவுகளை சவுதி அரேபியா விரைவில் சந்திக்கும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
மேலும், சவுதி அரேபியாவுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை நிறுத்தவும், சவுதி உடனான உறவை மறுஆய்வு செய்யவும் அமெரிக்கா ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி கூறும்போது, “உக்ரைன் போரினால் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனை ஈடுசெய்ய ரஷ்யாவுக்கு சவுதி உதவுகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டை சவுதி முழுமையாக மறுத்துள்ளது. இதுகுறித்து சவுதி வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “ஓபெக்+ நாடுகளின் கச்சா எண்ணெய் சார்ந்த முடிவு முற்றிலும் பொருளாதாரம் சார்ந்தது. உறுப்பு நாடுகள் எடுத்த முடிவு. இதற்கு சவுதி சம்மதிக்கிறது. அமெரிக்காவின் இந்தக் குற்றச்சாட்டு உண்மையின் அடிப்படையில் இல்லை” என்று தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT