Published : 14 Oct 2022 06:27 AM
Last Updated : 14 Oct 2022 06:27 AM
புதுடெல்லி: பண்டிகை காலத்தை முன்னிட்டு தேவை அதிகரித்துள்ளதால் கடந்த செப்டம்பர் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை 92% அதிகரித்துள்ளது.
இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கம் (எஸ்ஐஏஎம்) செப்டம்பர்மாத வாகன விற்பனை தொடர்பானபுள்ளிவிவரங்களை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதத்தில் 3 லட்சத்து 7 ஆயிரத்து 389 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டின் செப்டம்பர் மாத விற்பனையைவிட 92% அதிகம் ஆகும். கடந்த ஆண்டு இதே மாதத்தில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 212 வாகனங்கள் விற்பனையானது.
இருசக்கர வாகன விற்பனை 13% அதிகரித்து 17 லட்சத்து 35 ஆயிரத்து 199 ஆகி உள்ளது. இது கடந்த ஆண்டின் செப்டம்பரில் 15 லட்சத்து 37 ஆயிரத்து 604 ஆக இருந்தது. இதில்மோட்டார்சைக்கிள் விற்பனை 18% அதிகரித்து 11 லட்சத்து 14 ஆயிரத்து 667 ஆகி உள்ளது. ஸ்கூட்டர் விற்பனை 9% அதிகரித்து 5 லட்சத்து 72 ஆயிரத்து 919 ஆகி உள்ளது.
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் பயணிகள் வாகன விற்பனை 38% அதிகரித்து 10 லட்சத்து 26 ஆயிரத்து 309 ஆகி உள்ளது. இதுபோல இருசக்கர வாகன விற்பனை 13% அதிகரித்து 46 லட்சத்து 73 ஆயிரத்து 931 ஆகி உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தை முன்னிட்டு வாகனங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதுவே விற்பனை அதிகரிக்க காரணம் என இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT