Published : 14 Oct 2022 06:32 AM
Last Updated : 14 Oct 2022 06:32 AM
வாஷிங்டன்: இந்தியாவின் நேரடி பணப் பரிமாற்ற திட்டத்துக்கான கட்டமைப்பை அதிசயம் என்று சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) பாராட்டியுள்ளது.
பெண்கள், விவசாயிகள், முதியோர் உள்ளிட்டோருக்கு மத்திய அரசு பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. முன்பு நலத் திட்ட உதவிகள் மக்களின் கைகளில் பணமாக வழங்கப்பட்டு வந்தது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றன.
இந்தச் சூழலில் மத்திய அரசு கடந்த 2013-ம் ஆண்டு நேரடி பணப் பரிமாற்றத் திட்டத்தை தொடங்கியது. அதாவது நலத் திட்டங்களுக்கான ரொக்கம் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் வகையில் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
இதற்காக, வங்கிக் கணக்கு இல்லாத மக்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. இதில் நலத்திட்ட உதவிகள் நேரடியாக வரவு வைக்கப்பட்டன. இதனால் முறைகேடுகள் குறைந்தன.
இதுகுறித்து ஐஎம்எஃப் நிதி விவகாரத் துறையின் துணை இயக்குநர் பாலோ மாவ்ரோ கூறுகையில், “இந்தியாவிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய உள்ளன.மிகப் பெரும் மக்கள்தொகை கொண்ட நாடு இது. பெண்கள், முதியோர், விவசாயிகள் என சமூகத்தின் பல தரப்பட்ட மக்களுக்கு நலத்திட்டங்களை இந்தியா நடைமுறைப்படுத்தி வருகிறது.
இந்த நலத் திட்ட நிதிமக்களின் வங்கிக் கணக்குக்கே வழங்கப்படுகிறது. லட்சக்கணக்கானோருக்கு நிதியை நேரடியாக வழங்க தொழில்நுட்ப ரீதியாகவலுவான கட்டமைப்புத் தேவை.இந்தியா அதை சாத்தியப்படுத்தியுள்ளது. இது ஓர் அதிசயமான கட்டமைப்பு” என்றார்.
நலத் திட்டங்களுக்கான ரொக்கம் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT