Published : 14 Oct 2022 06:37 AM
Last Updated : 14 Oct 2022 06:37 AM
புதுடெல்லி: இந்தியாவில் சில்லரை பணவீக்கம் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவில் உச்சம் அடைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் சில்லரை பணவீக்கம் 7 சதவீதமாக இருந்தது. இந்நிலையில் உணவுப் பொருள்களின் விலைவாசி அதிகரித்த நிலையில் செப்டம்பர் மாதத்தில் பணவீக்கம் 7.41 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பணவீக்கத்தை அதிகபட்சம் 6 சதவீதத்துக்குள் வைத்திருக்க ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசுஅறிவுறுத்தி இருக்கிறது. ஆனால்,கடந்த 9 மாதங்களாக பணவீக்கம் 6 சதவீதத்துக்கு மேலாக நீடிக்கிறது.
உணவுப்பொருள்கள் சார்ந்த பணவீக்கம் செப்டம்பரில் 8.60 சதவீதமாக உச்சம் அடைந்துள்ளது. ஆகஸ்டில் அது 7.62 சதவீதமாக இருந்தது. செப்டம்பர் மாதத்தில் காய்கறிகள் 18.05 சதவீதம், மசாலப் பொருள்கள் 16.88 சதவீதம், தானியங்கள் 11.53 சதவீதம், பால் தயாரிப்புகள் 7.13 சதவீதம், பழங்கள் 5.68 சதவீதம் அளவில் அவற்றின் விலை அதிகரித்துள்ளது. எரிபொருள் விலை10.39 சதவீதம், ஆடை, காலணிபோன்றவற்றின் விலை 10.17 சதவீதம் அதிகரித்துள்ளது.
கடந்த பிப்ரவரியில் உக்ரைன்மீது ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து சர்வதேச அளவில் பணவீக்கம் தீவிரமடையத் தொடங்கியது. கச்சா எண்ணெய் விலை, அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை உச்சம் அடைந்தது.
இந்தியாவில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும்,ரிசர்வ் வங்கியும் தீவிரப்படுத்தி உள்ளன. ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டில் மட்டும் நான்கு முறை வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது. இதுவரையில் மொத்தமாக 190 புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளன. எனினும், பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவது பெரும் சவாலாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...