Published : 13 Oct 2022 06:54 AM
Last Updated : 13 Oct 2022 06:54 AM
புதுடெல்லி: உலக அளவில் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டு வருகிறது. எனினும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா இந்தத் தேக்க நிலைகால கட்டத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று சர்வதேச செலாவணி நிதியம் தெரிவித்துள்ளது.
கரோனா முதல் அலையின் போது ஊரடங்கு கொண்டு வரப்பட்டதால் தொழிற் செயல்பாடுகள் முடங்கின. இதனால் உலக நாடுகளின் பொருளாதாரம் கடும் தேக்கத்துக்கு உள்ளானது. சென்ற ஆண்டு கரோனா இரண்டாம் அலை தீவிரம் குறைந்த பிறகு, ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் உலக அளவில் தொழிற்செயல்பாடுகள் இயல்புநிலைக்குத் திரும்பின. இதன் தொடர்ச்சியாக, சரிவில் இருந்த பொருளாதாரம் மீளத் தொடங்கியது. இந்நிலையில், இவ்வாண்டு பிப்ரவரி மாதத்தில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியது.
இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது.அதன் தொடர்ச்சியாக பணவீக்கம் உச்சம் தொட்டது. தற்போது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன. சீனா கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்னும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக அதன் பொருளாதார வளர்ச்சி சரியத் தொடங்கியுள்ளது.
இந்தச் சூழலில், உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த கணிப்பை ஐஎம்எஃப் வெளியிட்டுள்ளது. 2022-ம் ஆண்டில் இந்தியாவின்பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாகவும் 2023-ம் ஆண்டில் 6.1 சதவீதமாகவும் குறையும் என்று ஐஎம்எஃப் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் குறித்து ஐஎம்எஃப் ஆசியா மற்றும் பசிபிக் துறையின் இயக்குநர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் கூறுகையில், “உலக அளவில் மூன்றில் ஒருபங்கு நாடுகள் இந்த ஆண்டோ அல்லது அடுத்த ஆண்டோ பொருளாதார தேக்கநிலையை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பல நாடுகளின் வளர்ச்சி குறைந்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்படாமல் இல்லை. ஆனால், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா மேம்பட்ட நிலையில் உள்ளது.
பணவீக்கத்தால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவதை இந்திய அரசு கவனத்தில் கொண்டிப்பது பாராட்டுக்குரிய விஷயம். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உரிய நேரத்தில் சரியான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது. பணவீக்கம் காரணமாக மக்களின் நுகர்வு பாதிக்கப்படும். பண வீக்கத்தை கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தும்போது அது முதலீட்டில் பாதிப்பை ஏற்படுத்தும்.
தற்போதைய சூழலில் எந்தநடவடிக்கை மேற்கொண்டாலும் அது ஏதேனும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாகவே 2022-ல் இந்தியாவின் வளர்ச்சி மதிப்பீட்டைக் குறைத்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT