Published : 10 Oct 2022 06:30 PM
Last Updated : 10 Oct 2022 06:30 PM

அமெரிக்காவுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசுமுறைப் பயணம்

நிர்மலா சீதாராமன் | கோப்புப்படம்

புதுடெல்லி: மத்திய நிதி மற்றும் கார்ப்பரேட் விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை (அக்.11) முதல் அமெரிக்காவிற்கு தனது அரசுமுறைப் பயணத்தை தொடங்குகிறார். 16ம் தேதி வரை நடைபெறவிருக்கும் சர்வதேச நிதி ஆணையம், உலக வங்கி ஆண்டுக் கூட்டங்களில் கலந்துகொள்ள இன்றிரவு அவர் அமெரிக்கா செல்கிறார் அவருடைய இந்தப் பயணத்தின்போது சர்வதேச நிதி ஆணையம், உலக வங்கி ஆண்டு கூட்டத்திலும், ஜி-20 நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

ஜப்பான், தென்கொரியா, சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, பூடான், நியூசிலாந்து, எகிப்து, ஜெர்மனி, மொரிஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம், ஈரான் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளுடனான இருதரப்பு பேச்சுவார்த்தையில் மத்திய நிதியமைச்சர் கலந்து கொள்கிறார். மத்திய நிதியமைச்சர் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு, ஐரோப்பிய ஆணையம் மற்றும் ஐ.நா வளர்ச்சித் திட்டம் சேர்ந்த தலைவர்களை தனித்தனியே சந்தித்து பேசுகிறார். அமெரிக்க நிதி அமைச்சர் ஜேனட் ஏலனுடனும், சர்வதேச நிதி ஆணையத்தின் தலைவரான டேவிட் மால்பாஸ் ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேசுகிறார்.

வாஷிங்டன் டிசியில் உள்ள லாபம் நோக்கமில்லாத அமைப்பான ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தில் மத்திய நிதியமைச்சர், “இந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு” என்ற தலைப்பில் பேசுகிறார். மத்திய நிதியமைச்சர் தனது இந்தப் பயணத்தின் போது தொழில்நுட்பம், நிதி ஆதாரம் மற்றும் நிர்வாகம் போன்றவற்றுக்கு இடையே உள்ள தொடர்புகள் குறித்து ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள சர்வதேச உயர்தர கல்வி பள்ளியில், உரை நிகழ்த்துகிறார்.

மத்திய நிதியமைச்சர் அமெரிக்க - இந்திய வர்த்தக கவுன்சில் மற்றும் அமெரிக்க - இந்திய ராணுவ உத்தி கூட்டமைப்புடன் வட்டமேசை கூட்டத்தில் கலந்து கொண்டு, “முதலீட்டை வளப்படுத்துதல் மற்றும் இந்திய - அமெரிக்க கூட்டு நடவடிக்கைகளில் புத்தாக்கம்”, ‘இந்தியாவின் டிஜிட்டல் புரட்சியில் முதலீடு’ போன்ற தலைப்புகளில் பேசுகிறார். இந்தியாவில் முதலீடு செய்வதற்கான நல்ல சூழல் உருவாகியிருப்பதை உலகிற்கு எடுத்துக் காட்டுவதே மத்திய நிதியமைச்சரின் இந்த சந்திப்புகளின் முக்கிய நோக்கமாகும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x