Published : 29 Nov 2016 10:55 AM
Last Updated : 29 Nov 2016 10:55 AM

தொழில் முன்னோடிகள்: ஹார்லன்ட் ஸான்டர்ஸ் (1890 - 1980)

எனக்கு இரண்டே இரண்டு கொள்கைகள்தாம் - ஒன்று, என்னால் முடிந்தவை அனைத்தையும் செய்யவேண்டும்; இரண்டு, ஒவ்வொன்றையும் கனகச்சிதமாகச் செய்யவேண்டும்.

-ஹார்லன்ட் ஸான்டர்ஸ்

வாழ்க்கையில் தோல்விகள் வரும், போகும். ஆனால், தோல்விகளே வாழ்க்கையானால் அந்த மனிதன் என்ன செய்வான்? ஓடுவான், ஓடுவான், வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடுவான். இப்படி ஒருவன். இவன் 62 வயதுவரை, மாவு விற்கப்போனால் காற்றடித்தது, உப்பு விற்கப்போனால் மழை பெய்தது. விழுந்தவன் ஒவ்வொரு முறையும் அதிக உத்வேகத்தோடு எழுந்தான். ஒரு நாள் தோல்வியே இவனிடம் தோற்றுப்போனது. எல்லோரும் ஓய்வெடுக்கும் வயதில் கோடீஸ்வரன் ஆனான். இவனை, இல்லை இல்லை இவரை உங்களுக்குத் தெரியும். நீங்கள் ரசித்துச் சாப்பிடும் ஃப்ரைடு சிக்கன் தரும் கேஎஃப்சி (KFC) கடைகளிலும், விளம்பரங்களிலும், கோட் சூட் போட்டுக்கொண்டு ஒரு தாடிக்காரர் இருப்பாரே? அவரேதான் - ஹார்லன்ட் ஸான்டர்ஸ்.

1890-ம் ஆண்டு. அமெரிக்காவின் இந்தியானா மாகாணம். ஹென்ரிவில் என்னும் நூறு பேரே வசித்த குட்டிக் கிராமம். ஸான்டர்ஸ் இங்கே பிறந்தான். அன்றாடச் சாப்பாட்டுக்கே திண்டாடும் வறுமையான குடும்பம். ஸான்டர்ஸ் மூத்த பிள்ளை. அவனுக்குக் கீழ் ஒரு தம்பி, ஒரு தங்கை.

அவன் ஆறு வயதில் அப்பா திடீரென இறந்தார். அம்மா சம்பாதித்தால்தான், வீட்டில் அடுப்பு எரியும். காய்கறிகள் பதனிடும் தொழிற்சாலையில் வேலைக்குப் போனார். இது முடிந்தவுடன், வீடு வீடாகப்போய்த் துணிகள் தைத்துக் கொடுப்பார். அதிகாலை வேலைக்குப் போனால், இருட்டும்போதுதான் வீடு திரும்புவார். ஸான்டர்ஸ் தலையில் குடும்பப் பாரம் விழுந்தது. பள்ளிக்கூடம் பக்கமே போகவில்லை. ஆறு வயதுமுதல் அவனுக்கு வீட்டில் என்ன கடமைகள் தெரியுமா? தம்பி, தங்கையைக் கவனித்துக்கொள்ளவேண்டும். அப்புறம், வீட்டுச் சமையல்.

ஸான்டர்ஸ் ஆரம்பத்தில் வேண்டா வெறுப்பாகத்தான் சமையல் செய்யத் தொடங்கினான். ஆனால், விரைவில் அவனுக்கு விளையாட்டுகளைவிடச் சமையல் செய்வதில் அதிக ஈடுபாடு வந்தது. அதிலும், பிஸ்கெட், சிக்கன் ஆகிய இரண்டையும் சமைப்பதில் தனி விருப்பம். அம்மா சொல்லிக் கொடுத்தவற்றையும் தாண்டி, தன் கற்பனைகளையும் கலந்து அடிக்கடி சோதனைகள் செய்தான். அம்மாவும் ரசித்துச் சாப்பிடுவார், ஒவ்வொரு ஐட்டத்தையும் இன்னும் எப்படிப் பிரமாதமாக்கலாம் என்று ஆலோசனைகள் சொல்லுவார்.

ஸான்டர்ஸ் வயது 12. அம்மா மறுமணம் செய்துகொண்டார். புது அப்பாவுக்குக் குழந்தைகளைப் பிடிக்கவில்லை. கடைசிப் பெண்குழந்தையை மட்டும் தங்களோடு வாழ அனுமதித்தவர், ஸான்டர்ஸும், தம்பியும் வீட்டைவிட்டு வெளியேறவேண்டும் என்று அடம் பிடித்தார். வேறு வழி தெரியாத அம்மா, இரண்டாம் மகனை அத்தை வீட்டுக்கு அனுப்பினார். ஸான்டர்ஸை வைத்துக்கொள்ள யாரும் தயாராக இல்லை. அவனை ஒரு பண்ணையில் வேலையாளாகச் சேர்த்துவிட்டார். அதிகாலை முதல் அர்த்த ராத்திரிவரை கடும் உடல் உழைப்பு. மாதச் சம்பளம் வெறும் நான்கு டாலர்கள் மட்டுமே. அம்மா எப்போதாவதுதான் பார்க்க வருவார். குடும்பம் இருந்தும் அநாதையாக ஸான்டர்ஸின் இளமைநாட்கள் கழிந்தன.

அடுத்த மூன்று வருடங்கள் பண்ணை வேலை. ராணுவத்தில் சேரக் குறைந்த பட்சம் பதினாறு வயதாகவேண்டும். வயதைப் பொய்யாகக் கூட்டிச்சொல்லி, அங்கே சிப்பாயாகச் சேர்ந்தார். சில மாதங்களில் கண்டுபிடித்துவிட்டார்கள், சீட்டைக் கிழித்தார்கள். இதற்குப் பிறகு, நாற்பது வயதுவரை வீடுகளுக்குப் பெயின்ட் அடிப்பவர், நீராவி ரெயிலில் கரி அள்ளிப் போடுபவர், போட் ஓட்டுபவர், பஸ் கண்டக்டர், இன்ஷூரன்ஸ் ஸேல்ஸ்மேன், பெட்ரோல் பங்க் உதவியாளர் எனப் பல வேலைகள் - எதுவுமே விரும்பி எடுத்த வேலைகள் அல்ல, கிடைத்த வேலைகள். வேலையை ஒழுங்காகச் செய்வார். ஆனால், உயர் அதிகாரி ஏதாவது கடுஞ்சொல் சொன்னால், உடனடிப் பதில். இப்படிப் பல வேலைகளை இழந்தார். இதற்குள், திருமணம், மூன்று குழந்தைகள், “பொறுப்பில்லாத” கணவனை விட்டு ஓடிப்போய், திரும்பிவந்த மனைவி என்று சொந்த வாழ்க்கை சோக அத்தியாயம்.

1930. ஸான்டர்ஸ் இருண்ட வாழ்க்கையில் ஒரு மின்னல். கென்டகி நகரத்தில் ஒரு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வியாபாரம் இல்லாமையால், நொடித்துப்போனார்கள். பங்க்கை மலிவு விலைக்கு விற்க முன்வந்தார்கள். ஸான்டர்ஸ் ரிஸ்க் எடுத்தார். பங்க்கை விலைக்கு வாங்கினார். அந்த வருமானம் போதவில்லை. பங்கின் ஓரமாகச் சிறிய உணவுவிடுதி ஆரம்பித்தார். சிக்கன், பன்றி இறைச்சி, வெண்டைக்காய்க் கறி, பிஸ்கெட் என ஒரு சில ஐட்டங்கள். ஸான்டர்ஸ் கைமணத்தின் பெருமை பரவத் தொடங்கியது. அக்கம் பக்க ஊர்களிலிருந்து ஏராளமானோர் சாப்பிட வரத் தொடங்கினார்கள். பங்க்கை மூடினார். 142 பேர் உட்காரும் உணவகம் தொடங்கினார்.

பதினொரு மூலிகைகள் சேர்த்த பொரித்த சிக்கன் ஸான்டர்ஸின் ஸ்பெஷல் ஐட்டம். எல்லோரும் அதையே கேட்டார்கள், விரும்பிச் சாப்பிட்டார்கள். இந்த வேகத்துக்கு அவரால் தயாரிக்க முடியவில்லை. என்ன செய்யலாம் என்று பல பரிசோதனைகள். பிரஷர் குக்கரில் பொரித்துப் பார்த்தார். சுவை சூப்பராக, தனித்துவமாக வந்தது. இந்தச் சுவைக்காகவே ரசிகர் கூட்டம் உருவானது. அடுத்த பத்து வருடங்கள் அமோக வளர்ச்சி.

யார் கண் பட்டதோ? வாழ்வில் புயல் அடித்தது. இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. பொருளாதார நெருக்கடிகளால், மக்கள் ஹோட்டல்களில் சாப்பிடுவதை நிறுத்தினார்கள். வியாபாரம் சரியத் தொடங்கியது. இன்னொரு பிரச்சினை வந்தது. உணவகம் இருந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கிக் கொண்டிருந்தார்கள். அரசாங்க ஆணைப்படி கடையை மூடினார். ஏகப்பட்ட நஷ்டம்.

வயது 66 ஆகிவிட்டது. இந்தக் “கிழவர்” என்ன செய்வார் என்று எல்லோரும் நினைத்தார்கள். உடலில் தளர்ச்சி இருக்கலாம். ஆனால், ஸான்டர்ஸ் மனதில் உறுதி. தன் சிக்கனுக்குக் கென்டகி ஃப்ரைடு சிக்கன் என்று பெயர் வைத்தார். கம்பெனி பெயரும் அதுவேதான். சொந்தமாகக் கிளைகள் திறக்க அவரிடம் பணம் இல்லை. ஆகவே, கென்டகி ஃப்ரைடு சிக்கன் என்னும் பெயரில் கடைகள் திறக்கவும், தன் தனித்துவ சிக்கனை விற்கவுமான உரிமையை ஃப்ரான்ச்சைஸ் (Franchise) என்னும் தயாரிப்பு உரிமை வழங்கும் புதிய திட்டம் ஆரம்பித்தார். இதன்படி, ஸான்டர்ஸ் தன் தொழில் ரகசியத்தை இவர்களோடு பகிர்ந்துகொள்வார். பதிலாக அவர்கள் தங்கள் விற்பனையில் குறிப்பிட்ட சதவீதத்தை அவருக்குத் தரவேண்டும்.

ஸான்டர்ஸும், அவர் மனைவியும் காரில் ஏறிக்கொண்டு ஊர் ஊராகப் போனார்கள். கண்ணில் பட்ட உணவு விடுதிகளின் கதவுகளைத் தட்டினார்கள். ஏமாற்றம், ஒரு கடையில் அல்ல, 1,099 கடைகளில். சாதாரண மனிதன் மனம் சுக்கு நூறகியிருப்பான். ஆனால், ஸான்டர்ஸ் உட்டா (Utah) நகரில் 1,100 - ஆம் கடையின் கதவைத் தட்டினார். ஒப்பந்தம் கையெழுத்தானது. 1952 - ம் ஆண்டு முதன் முதலாக ஃப்ரான்ச்சைஸ் முறையில் கென்டகி ஃப்ரைடு சிக்கன் விற்பனை தொடங்கியது. விரலைச் சூப்பவைக்கும் சுவை (Finger lickin’ good) என்னும் விளம்பர வாசகம் தேசீய கீதமானது. ரசிகர்கள் கூட்டம் பெருகியது. அடுத்த 12 ஆண்டுகளில் அமெரிக்கா முழுக்க 600 கேஎஃப்சி கடைகள்.

1980 - இல் ஸான்டர்ஸ் மரணமடைந்தார். 90 வருடங்கள் வாழ்க்கை, பல்லாயிரம் கோடி டாலர்கள் சொத்து, உலகத்தின் சுவையான சிக்கன் என மக்கள் மனங்களில் பிடித்திருக்கும் இடம் - நிச்சயமாக, தன் கனவுகளை நிஜமாக்கிவிட்ட பெருமையோடுதான் அவர் உயிர் பிரிந்திருக்கும்.

1986 - இல், பெப்ஸி கம்பெனி கென்டகி ஃப்ரைடு சிக்கன் நிறுவனத்தை வாங்கினார்கள். 1991 - இல், கே. எஃப். சி என்று பெயரைச் சுருக்கினார்கள். உரிமையாளர் மாறினாலும், பெயர் சுருங்கினாலும், ஒவ்வொரு கே. எஃப். சி. கடையிலும் நம்மை வரவேற்பவர் கோட் சூட் போட்ட தாடித் தாத்தாதான். ஏன் தெரியுமா? ஃப்ரைடு சிக்கனின் ஜீவனே அவர்தானே?

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x