Published : 07 Oct 2022 05:35 AM
Last Updated : 07 Oct 2022 05:35 AM
புதுடெல்லி: பெட்ரோலியம் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பு (ஓபெக்) தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியின் அளவை குறைக்க முடிவு செய்துள்ளது. இதையடுத்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் பேரலின் விலை 100 டாலரை எட்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து இத்துறை சார்ந்த ஆய்வாளர்கள் கூறியதாவது:
ஓபெக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ள நாடுகளின் ஆலோசனைக் கூட்டம் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 20 லட்சம் பேரல்கள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்தில் இது 2 சதவீதம் ஆகும்.
வரும் நவம்பர் மாதம் நடைமுறைக்கு வரும் இப்புதிய உற்பத்தி நடைமுறை, 2023 டிசம்பர் வரையில் அமலில் இருக்கும். கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு கச்சா எண்ணெய் உற்பத்தியை இந்த அளவுக்கு குறைக்க ஓபெக் முடிவெடுத்திருப்பது இதுவே முதல் முறை ஆகும். உக்ரைன்-ரஷ்யா போரினால் சர்வதேச சந்தையில் ஏற்கெனவே கச்சா எண்ணெய்க்கு பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த நிலையில் ஓபெக் நாடுகளின் இந்த முடிவால் கச்சா எண்ணெயின் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலரைத் தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது, தற்போதைய சந்தை விலையைக் காட்டிலும் 7.5% அதிகமாகும்.
மேலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் அது ரஷ்யாவுக்கு சாதகமாக அமையும். ஏனெனில் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் அந்த நாட்டுக்கு முக்கிய பங்கு உள்ளது. எரிபொருளின் விலை உயர்வால் கிடைக்கும் கூடுதல் பணத்தை உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்கு ரஷ்யா பயன்படுத்திக் கொள்ளும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. எனவே, ஓபெக் கூட்டமைப்பு கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்பு களையும் மீறி தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தியை ஓபெக் கூட்டமைப்பு குறைக்கும்பட்சத்தில் அது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கணிசமாக உயர்வதற்கும் வழிவகுக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கச்சா எண்ணெய் உற்பத்தியைநாளொன்றுக்கு 20 லட்சம் பேரல்கள் குறைக்க ஓபெக் அமைப்பு முடிவு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT