Published : 01 Oct 2022 01:40 PM
Last Updated : 01 Oct 2022 01:40 PM
புதுடெல்லி: இந்தியாவில் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் நடந்த இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வில் தொடங்கிவைத்தார். இதையடுத்து கூடிய விரைவில் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ மற்றும் வோடபோன் - ஐடியா நிறுவனங்கள் 5ஜி திட்டங்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுடெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் இந்திய மொபைல் காங்கிரஸ் நிகழ்வு தொடங்கியுள்ளது. இந்த நிகழ்வு மொத்தம் நான்கு நாட்கள் நடைபெறுகின்றன. இதில் தான் பிரதமர் மோடி 5ஜி சேவையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் ரிலையன்ஸ் ஜியோ சார்பில் முகேஷ் அம்பானி மற்றும் ஏர்டெல் சார்பில் பாரதி மிட்டல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
“2ஜி, 3ஜி மற்றும் 4ஜி போன்றவற்றுக்கு வெளிநாடுகளை நம்பி இந்தியா இருந்தது. ஆனால், 5ஜி மூலம் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது. நாட்டில் டிஜிட்டல் புரட்சியை உருவாக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சாதனங்களின் விலை மற்றும் டேட்டா திட்டங்கள் வரை அந்த கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2014 வாக்கில் வெறும் 2 மொபைல் உற்பத்தி கூடங்கள்தான் இருந்தன. இப்போது அந்த எண்ணிக்கை 200 என அதிகரித்துள்ளது. 1 ஜிபி ரூ.300 என இருந்த விலை இப்போது ரூ.10 என மாறியுள்ளது. உலகிலேயே மிகவும் மலிவான விலையில் டேட்டா கட்டணங்கள் கொண்டுள்ளது இந்தியா” என பிரதமர் மோடி, 5ஜி சேவையை தொடங்கி வைத்து பேசினார்.
ஜியோ, ஏர்டெல் மற்றும் குவால்கம் நிறுவனங்கள் அதிவேக இணைய இணைப்பு வசதியான 5ஜி டெமோவை இந்த நிகழ்வில் நிகழ்த்தி இருந்தன. “ஜியோ நிறுவனம் துல்லியமான தரத்தில் 5ஜி சேவையை உலகின் வழங்கும் நிறுவனமாக இருக்கும். அதே நேரத்தில் அது மலிவான விலையிலும் இருக்கும். 2023 டிசம்பர் இறுதிக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை பயன்பாட்டில் இருக்கும்” என ஜியோ சார்பில் அதனை தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
“ஏர்டெல் நிறுவனம் 8 நகரங்களில் இன்று 5ஜி சேவையை தொடங்குகிறது. வரும் 2024 வாக்கில் இந்த சேவை நாடு முழுவதும் கிடைக்கும்” என ஏர்டெல் தலைவர் பாரதி மிட்டல் தெரிவித்துள்ளார்.
முதற்கட்டமாக டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னையில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனம் 5ஜி சேவையை வழங்கும் எனத் தெரிகிறது. இருந்தாலும் இந்த நகரங்களில் இந்த சேவை முழுவதுமாக கிடைக்காது என்றும். பகுதி அளவில் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இப்போதைக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 5ஜி சேவையை பெறுவதற்கான அனைத்து பணிகளும் முடிந்து தயார் நிலையில் இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. அதனால், இந்தப் பகுதியில் மக்கள் விரைவில் 5ஜி சேவை அனுபவத்தை பெற முடியும்.
தற்போது நாட்டில் உள்ள 4ஜி சேவையை காட்டிலும் 5ஜி சேவையின் வேகம் 10 மடங்கு கூடுதலாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. விரைவில் நாட்டில் உள்ள டெலிகாம் நிறுவனங்கள் 5ஜி சேவைக்கான திட்டங்களை அறிமுகம் செய்யும் எனத் தெரிகிறது.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள்: முதற்கட்டமாக குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி அறிமுகம் செய்யப்படுகிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் நாடு முழுவதும் 5ஜி சேவை கொண்டு சேர்க்கப்படும். 5ஜி சேவையானது இந்தியாவில் புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்கும். இந்திய சமூக மாற்றத்துக்கான விசையாக அது இருக்கும். ‘டிஜிட்டல் இந்தியா’ இலக்கை முன்னெடுத்துச் சென்று இந்தியாவின் வளர்ச்சியை பல மடங்கு உயர்த்தும். 2035-ல் 5ஜி மூலமான பொருளாதார வளர்ச்சி 450 பில்லியன் டாலராக (ரூ.36.45 லட்சம் கோடி) இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4-ஜியை விட பத்து மடங்கு வேகமாக இருக்கும் என்று கூறப்படும் 5ஜியானது இந்தியாவின் தொழில்நுட்பக் கட்டமைப்பில் மிகப்பெரும் பாய்ச்சலை நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இ-காமர்ஸ், கல்வி, மருத்துவம், போக்குவரத்து என பல்வேறு தளங்களில் மிகப்பெரும் மாற்றத்தை 5ஜி கொண்டுவரும் என்றும் மெட்டாவர்ஸ் உருவாக்கத்தில் 5ஜியின் பங்களிப்பு மிக முக்கியமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவில் கடந்த ஜூலை 26-ம் தேதி 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் தொடங்கியது. 7 நாட்கள் நீடித்த ஏலம் ஆகஸ்ட் 1-ம் தேதி முடிவடைந்தது. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா, அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த ஏலத்தில் பங்கேற்றன. மொத்தம் 72 ஆயிரம் மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ஏலத்துக்கு விடப்பட்ட நிலையில் 51,236 மெகாஹெர்ட்ஸ் அளவில் ஏலம் போனது.
மொத்தமாக ரூ.1.5 லட்சம் கோடிக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம் எடுக்கப்பட்டது. அதிகபட்சமாக ஜியோ நிறுவனம் ரூ.88,078 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஏர்டெல் ரூ.43,084 கோடிக்கும், வோடஃபோன் ஐடியா ரூ.18,799 கோடிக்கும், அதானி டேட்டா நெட்வொர்க்ஸ் ரூ.212 கோடிக்கும் 5ஜி அலைக்கற்றையை ஏலம் எடுத்தன. ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பொதுப் பயன்பாட்டுக்கு 5ஜி சேவையை வழங்க உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT