Published : 30 Sep 2022 08:49 AM
Last Updated : 30 Sep 2022 08:49 AM
புதுடெல்லி: மின்னணு பொருட்கள் உற்பத்தியில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவாகிவருவதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
‘பெகட்ரான் டெக்னாலஜி இந்தியா லிமிடெட்’ நிறுவனத்தின் புதிய தொழிற்சாலை செங்கல்பட்டில் இன்று திறக்கப்பட உள்ளது. இந்த விழாவில் இணை அமைச்சர் ராஜீவ் பங்கேற்கிறார். கேரளாவை சேர்ந்தவரான ராஜீவ் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:
இந்தியாவில் டிஜிட்டல் மற்றும் எலெக்ரானிக் துறைகளின் வளர்ச்சி எப்படி உள்ளது?
டிஜிட்டல் மற்றும் எலெக்ட்ரானிக் துறைகள் மிக வேகமான வளர்ச்சியை எட்டும் துறையாகும். கரோனாவுக்குப் பிறகு டிஜிட்டல் மயமாக்கல் நடவடிக்கை சர்வதேச அளவில் தீவிரமடைந்தது. இதனால் இத்துறை வல்லுநர்களுக்கான தேவை அதிகரித்தது. இந்த ஆண்டில் மட்டும் இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை, 8 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. இத்துறை மட்டும் 16 சதவீதத்துக்கும் அதிகமான வளர்ச்சியை எட்டியுள்ளது. 240 பில்லியன் டாலர் (ரூ.19 லட்சம் கோடி) வருவாய் ஈட்டியுள்ளது. மின்னணு துறையைப் பொருத்தமட்டில் 2014-ம் ஆண்டில் இந்தியாவின் தேவையில் 90 சதவீத பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன.
இந்தியாவில் கைப்பேசி உற்பத்தியில் தற்போதைய நிலை என்ன?
இந்தியாவின் தேவையில் 97 சதவீத மொபைல் போன்கள் தற்போது உள்நாட்டில் தயாரிக்கப்படுகின்றன. இத்துடன் ஏற்றுமதியும் செய்யப்படுகின்றன. 2014-ம் ஆண்டில் மொபைல் போன்கள் ஏற்றுமதி செய்யப்படவில்லை. இன்று ரூ. 50 ஆயிரம் கோடி மதிப்பிலான ஸ்மார்ட் போன்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. குறிப்பாக ஐ-போன், சாம்சங் போன்கள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தற்போது 3 சதவீத அளவுக்குத்தான் வெளிநாடுகளில் இருந்து அதிக விலையிலான ப்ரீமியம் ஸ்மார்ட் போன்கள் இறக்குமதியாகின்றன.
மின்னணு துறையில் சீனா செலுத்தும் ஆதிக்கத்தை இந்தியாவால் தகர்க்க முடியாதா?
மின்னணு துறையில் கடந்த 25 ஆண்டுகளாக சீனாவின் ஆதிக்கமே நிலவுகிறது. பெட்ரோலியம் சார்ந்த எரிசக்தி துறைக்கு அடுத்தபடியாக மின்னணு துறைதான் உலக அளவில் மிகப் பெரிய வளர்ச்சி வாய்ப்புள்ள துறையாக உள்ளது. 1.5 டிரில்லியன் டாலர் அளவில் உலகளாவிய சந்தை உள்ளது. இதில் 90 சதவீதம் சீனாவின் பங்களிப்பாக இருந்தது. கரோனாவுக்குப் பிறகு பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது உற்பத்தி ஆலைகளை வேறு நாடுகளுக்கு மாற்றுவதில் தீவிரம் காட்டின. குறிப்பாக சீனாவிலிருந்து வேறு நாடுகளுக்கு மாற்ற தீர்மானித்தன. இதில் வியட்நாம், தாய்லாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகள் சீனாவுக்கு மாற்றாக பிற நாடுகளால் கண்டறியப்பட்டன.
பிரதமர் மோடி அறிவித்த உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டத்தால் (பிஎல்ஐ) பெரும்பாலான நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது உற்பத்தி ஆலைகளை அமைக்க ஆர்வம் காட்டின. இச்சூழலில் மின்னணு பொருட்கள் உற்பத்தியில் சீனாவுக்கு மாற்றாக இந்தியா உருவாகி வருகிறது. சீனாவில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் அனைத்தையும் இங்கு மாற்ற வேண்டும் என்பது நோக்கமல்ல. சீனாவுக்கு மாற்றாக இந்தியாவிலும் ஆலைகளைத் தொடங்கி செயல்படுத்தலாம், அதற்கேற்ற திறமையான வல்லுநர்கள், இட வசதி உள்ளிட்டவை இங்கு உள்ளன என்பதை உணர்த்துவதே நோக்கம். இதன் மூலம் சீனாவுக்கு இணையாக இத்துறையில் இந்தியா வளர விரும்புகிறது.அதை எட்டுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்படுகின்றன.
அக்டோபர் 1-ல் அறிமுகமாகும் 5 ஜி அலைக்கற்றை குறித்து?
இந்த 5-ஜி சேவையில் பெரும்பாலான பகுதிகள் இந்தியாவில் உருவாக்கப்பட்டவை, இந்தியாவுக்கென வடிவமைக்கப்பட்டதாகும். இதன் மீதான பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட்டன.
புதிய தொழிற்சாலைகளால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகுமா?
மின்னணு தொழில்நுட்பம், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் ஸ்டார்ட் அப் ஆகிய மூன்று முக்கிய துறைகளில் கடந்த 7 ஆண்டுகளாக மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இச்சூழலில் அனைத்து மாநில அரசுகளும் விரைவாக இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். இதன் காரணமாக கூடுதல் வேலைவாய்ப்புகள் இளைஞர்களுக்கு கிடைக்கும். ஸ்டார்ட் அப் உருவாக்கம் காரணமாக பலர் தொழில் தொடங்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த வாய்ப்புகள் அடுத்த 3 முதல் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும். அதை இந்தியா சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இப்போது வெளிநாட்டு நிறுவனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக இந்தியாவில் தொழிற்சாலைகளை தொடங்கி வருகின்றன.
புதிய தொழிற்சாலைகளுக்கான வாய்ப்புகளை பயன்படுத்துவதில் முன்னணி வகிக்கும் மாநிலங்கள் எவை?
இந்த ஓட்டத்தில் பெரும்பாலான மாநிலங்கள் ஆர்வம் காட்டுகின்றன. தமிழகம், உ.பி., கர்நாடகா, ஆந்திரா போன்றவை வேகம் காட்டுகின்றன. ஏற்கெனவே தமிழகத்தில் ஐந்து நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் பெகட்ரான் தன் தொழிற்சாலையை தற்போது விரிவாக்குகிறது. அடுத்த 10 ஆண்டுகளில் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும் என்பதுதான் பிரதமரின் இலக்காகும். 2015-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியிருந்த திருப்பதி எலெக்ட்ரானிக் உற்பத்தி மண்டலத்தில் லித்தியம் அயன் பேட்டரி உற்பத்தி ஆலை தனது உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. இத்தகைய லித்தியம் பேட்டரி உற்பத்தி ஆலை நாட்டிலேயே இதுதான் முதலாவதாகும்.
இதுபோன்ற தொழிலை ஊக்குவிக்க மத்திய அரசு செய்வது என்ன?
பிஎல்ஐ எனும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்கச் சலுகை மற்றும் கிளஸ்டர் ஊக்கச் சலுகை உள்ளிட்டவற்றை மத்திய அரசு அளிக்கிறது. அனைத்து மாநில அரசுகளுக்கும் இது தொடர்பாக விரிவான விளக்கமும் அனுப்பியுள்ளது. இதை மாநில அரசுகள் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய நிறுவனங்களை மாநில அரசுகள் அடையாளம்கண்டு அவற்றுக்குத் தேவையான சலுகைகளை அளிக்க வேண்டும். இந்தியாவில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு, இந்தியா மீதான நம்பிக்கையை முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அந்த நிறுவனங்களை தங்கள் மாநிலங்களில் தொழில் தொடங்க ஈர்ப்பது அந்தந்த மாநிலங்களின் கைகளில்தான் உள்ளது. 6 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் மின்னணு உற்பத்தி ஆலையே கிடையாது. ஆனால் இன்று நாட்டிலேயே அதிக மின்னணு உற்பத்தி மாநிலமாக அது உயர்ந்துள்ளது.
செமிகண்டக்டர் எனப்படும் சிப்புகளை இந்தியாவில் தயாரிக்கும் நிலை எப்படி உள்ளது?
செமி கண்டக்டர் துறையை பொருத்தமட்டில் 2021 டிசம்பரில் விரிவான கொள்கையை மத்திய அரசு அறிவித்தது. தமிழகத்தில் இருந்து இந்த உற்பத்தியில் முதலீடு இல்லாதமையால், இதுவரை எந்த கோரிக்கையும் வரவில்லை. குஜராத், கர்நாடகா மற்றும் மகாராஷ்டிர மாநிலங்கள் இதை பயன்படுத்திக் கொண்டுள்ளன. மத்திய அரசின் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த மாநிலங்கள் செமி கண்டக்டர் தொழில் நிறுவனங்களை ஈர்க்கும் நடவடிக்கையில் தீவிரம் காட்டுகின்றன.
தற்போது குஜராத்தில் ஒரு ஆலை உற்பத்தியைத் தொடங்கியுள்ளது. தைவான், அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களுடன் இணைந்தோ அல்லது தனியாகவோ உற்பத்தி ஆலைகளை அமைக்க உள்ளன. மின்னணு தொழில்துறையை பொருத்தமட்டில் அதுதொழில்பேட்டை போல பல நிறுவனங்கள் ஒன்றிணைந்த குழுக்களாகத்தான் உருவாக்கப்பட வேண்டும். அதற்கேற்ப கிளஸ்டர்கள் உருவாக்கப்படுகின்றன.
தமிழகத்தின் நோக்கியா தொழிற்சாலை மூடப்பட்டது குறித்து தங்கள் கருத்து?
இது தான் இந்தியாவின் முதல் பெரிய அளவிலான உற்பத்தி தொழிற்சாலையாக இருந்தது. இது ஒரு அரசியல் கட்சியின் தோல்வியே தவிர வேறு ஒன்றுமில்லை. இதுபோன்ற முதல்படி போன்ற முதலீடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கவனம் செலுத்தியிருக்க வேண்டும். எனவே, இனி அதுபோல் நடைபெறாமல்இருக்க, வெளிநாடுகளில் இருந்துவரும் முதலீட்டாளர்களை வரவேற்று உரிய வசதிகள் செய்து கொடுத்து தமிழக அரசு உற்சாகப்படுத்த வேண்டும். இதற்காக, பிஎல்ஐ சலுகையானது 5 ஆண்டுகளுக்கு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதில் கவனம் செலுத்தாத மாநிலங்களை மத்திய அரசு என்ன செய்யப்போகிறது?
கவனம் செலுத்தாத மாநிலங்களில் இது குறித்த விழிப்புணர்வு அல்லது அவற்றுக்கு இதன் முக்கியத்துவத்தை உணர்த்த முடிவு செய்துள்ளது. அக்டோபர் மாதம் 1-ம் தேதி நடைபெற உள்ள தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT