Published : 23 Sep 2022 09:48 AM
Last Updated : 23 Sep 2022 09:48 AM
நடப்பாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 24-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் போனஸ் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.
தீபாவளி பண்டிகை என்றாலே தொழிலாளர்கள் மத்தியில் போனஸ் பெறுவது தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரிப்பது வழக்கம். புத்தாடை, இனிப்பு, பட்டாசு வாங்குவதற்கு மட்டுமின்றி வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவது தொடர்பாகவும் திட்டமிடுவார்கள்.
நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதம் உள்ள நிலையில் தொழில் நிறுவனங்களில் அது தொடர்பான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் திருஞானம் கூறும்போது, “ஜிஎஸ்டி, மூலப்பொருட்கள், சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்டவற்றின் விலை உயர்வால் கோவை மாவட்டத்தில் உள்ள சிறு தொழில்கள் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளன.
இத்தகைய சூழ்நிலையில் நடப்பாண்டு 8.33 சதவீதம் போனஸ் வழங்க பெரும்பாலான சிறு தொழில் நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொள்வார்கள் என நம்புகிறோம். தொழிலாளர்கள் இல்லாமல் தொழில் நிறுவனங்கள் இல்லை.
எனவே, தொழில்முனைவோர் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் தொழிலாளர்கள் நலன் கருதி நியாயமான போனஸ் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” என்றார்.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்கத்தின் (டாக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறும்போது, “குறுந்தொழில்முனைவோர் பல்வேறு நெருக்கடியில் தவிப்பதுடன் பல நிறுவனங்கள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
நாளுக்கு நாள் நெருக்கடி அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடன் பெற்றாவது குறுந்தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ் பட்டுவாடா செய்யப்படும். பெரும்பாலான நிறுவனங்களில் 8.33 சதவீதம் வழங்கப்படும்” என்றார்.
எச்எம்எஸ் தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் ராஜாமணி கூறியதாவது: இன்றைய சூழ்நிலையில் நூற்பாலைகள், விசைத்தறிகூடங்கள், பொறியியல்துறை, உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வழங்கிய போனஸ் தொகையை விட 20 சதவீதம் கூடுதலாக வழங்க வேண்டும்.
அப்போதுதான் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும். சமையல் எரிவாயு, காய்கறிகள், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விலையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையில் போனஸ் பட்டுவாடா நியாயமானமுறையில் இருக்க வேண்டியது அவசியம். ஜிஎஸ்டி, மின் கட்டணம்,மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல காரணங்களை தொழில்முனைவோர் கூறுவார்கள்.
ஆனால் இவற்றுக்கும் தொழிலாளர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மேற்குறிப்பிட்ட பிரச்சினைகள் குறித்து மத்திய, மாநில அரசுகளிடம் தொழில்முனைவோர் கோரிக்கை விடுத்து தீர்வு காண வேண்டும்.
தமிழகத்தில் உள்ள 7 என்டிசி நூற்பாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 2020, 2021-ம் ஆண்டுகளில் போனஸ் வழங்கப்படவில்லை.
என்டிசி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு 8.33 சதவீத போனஸ் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT