Published : 22 Sep 2022 04:13 PM
Last Updated : 22 Sep 2022 04:13 PM

போட்டி நிறுவனங்களில் ‘மறைமுக’ பணி: 300 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய விப்ரோ!

பெங்களூரு: போட்டி நிறுவனங்களில் ரகசியமாக பணி செய்து வந்த 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது விப்ரோ நிறுவனம். இதனை அந்நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ரிஷத் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமாக விப்ரோ உள்ளது. கடந்த 1945 வாக்கில் நிறுவப்பட்டது. கடந்த 1970 மற்றும் 80-களின் வாக்கில் ஐடி துறையில் கவனம் செலுத்த தொடங்கியது விப்ரோ. சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“யதார்த்தம் என்னவென்றால் இன்று விப்ரோ நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருப்பவர்களில் சிலர் நேரடியாக போட்டி நிறுவனங்களிலும் ரகசியமாக பணியாற்றி வருகின்றனர். அப்படி வேலை செய்து வருபவர்களில் 300 பேரை அடையாளம் கண்டோம். அவர்கள் மீது நிறுவனம் வைத்த நாணயத்தை மீறும் வகையில் அவர்களது செயல்பாடு அமைந்துள்ளது. அதனால் அவர்களை பணிநீக்கம் செய்துள்ளோம்.

விப்ரோவில் வேலை பார்க்கும் ஊழியர்கள் வேறு நிறுவனங்களில் பணியாற்ற ஒருபோதும் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தொழில்நுட்ப துறையில் நிறைய ஊழியர்கள் இந்த மூன்லலைட்டிங் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதுவும் ஒருவகையிலான மோசடிதான்” என்று அந்நிறுவனத்தின் நிர்வாக தலைவர் ரிஷத் பிரேம்ஜி தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம்தான் ஒரே நேரத்தில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுவது தொடர்பாக ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது விப்ரோ நிர்வாகம். ஊழியர்கள் அந்த மாதிரியான பணிகளில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதிகபட்சம் பணி நீக்கம் வரையில் அந்த நடவடிக்கை இருக்கும் எனவும் விப்ரோ எச்சரித்திருந்தது. இந்நிலையில், 300 ஊழியர்கள் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மூன்லைட்டிங்: ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு டெக் வல்லுநர்கள் பணியாற்றுவதை மூன்லைட்டிங் என சொல்லப்படுகிறது. ஊழியர்கள் ரிமோட்டில் இருந்தபடி வேலை செய்வதுதான் இதற்கு காரணம் எனத் தெரிகிறது. இந்த மூன்லைட்டிங் விவகாரத்தில் நிறுவனங்களின் கொள்கை முடிவுகள் ஒன்றுக்கு ஒன்று மாறுபடுகிறது. சில நிறுவனங்கள் அதற்கு அனுமதி அளிக்கின்றன. சில நிறுவனங்கள் அதனை தடை செய்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x