Published : 22 Sep 2022 10:45 AM
Last Updated : 22 Sep 2022 10:45 AM
ஜிஎஸ்டி, மின் கட்டணம், சொத்து வரி, மூலப் பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் கோவையில் உள்ள பல தொழில் நிறுவனங்கள் வாரத்தில் மூன்று நாட்கள் கட்டாய உற்பத்தி நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதுகுறித்து தொழில் அமைப்பினர் சிலர் கூறியதாவது: கரோனா நோய் தொற்று பரவல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து மீண்டு வர தொடங்கியபோது மூலப்பொருட்கள் விலை உயர்வு பிரச்சினை ஏற்பட்டது.
ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் ஸ்டீல், காப்பர், அலுமினியம் உள்ளிட்ட உற்பத்திதுறையில் பயன்படுத்தப்படும் முக்கிய மூலப்பொருட்களின் விலை சற்று குறைந்தது. ஆனால் தற்போது மீண்டும் மூலப்பொருட்களின் விலை உயரத் தொடங்கியுள்ளது.
இவை ஒருபுறம் இருக்க பம்ப்செட், கிரைண்டர்களுக்கான வரி 18 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மறுபுறம் சொத்துவரி மற்றும் மின்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதனால் குறு, சிறு, நடுத்தர பிரிவைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் செயல்பட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதே நிலைமை நீடித்தால் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்படும்.
இப்பிரச்சினை குறித்து மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்படுவதற்காக கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழில் அமைப்புகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தின.
மின்கட்டணத்தை குறைக்க அமைச்சர் உறுதி அளித்துள்ளதால் காத்திருக்கலாம் என்று ஒரு தரப்பும், நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால், போராட்டம் நடத்துவது தான் சிறந்தது என மற்றொரு தரப்பும் கூட்டத்தில் கருத்து தெரிவித்துள்ளனர். இவ்வாறு தொழில் அமைப்பினர் தெரிவித்தனர்.
தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது:
ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சியில் குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. தொழில் நெருக்கடி காரணமாக கோவையில் குறுந்தொழில் நிறுவனங்கள் பல மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.
பல நிறுவனங்களில் போதிய பணி ஆணை இல்லை. மத்திய, மாநில அரசுகள் தொழில்துறையினர் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் விக்னேஷ் கூறும்போது, ‘‘குறையத் தொடங்கிய மூலப்பொருட்கள் விலை தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
பம்ப்செட், கிரைண்டர் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொழில் நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் பல நிறுவனங்கள் வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் உற்பத்தி நிறுத்தம் செய்யத் தொடங்கியுள்ளன,’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT