Published : 01 Nov 2016 10:57 AM
Last Updated : 01 Nov 2016 10:57 AM

தொழில் முன்னோடிகள் : மில்டன் ஸ்நேவ்லி ஹெர்ஷி (1857 - 1945)

வாடிக்கையாளர்களுக்கு உயர்தரமான பொருட்களைத் தாருங்கள். உலகத்தின் மிகச் சிறந்த விளம்பரம் தரம்தான்.

-மில்டன் ஹெர்ஷி

ஜாலியான ஒரு ஆளை சந்திக்கவேண்டுமா? வாருங்கள்.

பெயர் - ஹென்றி ஹெர்ஷி

ஊர் - டெர்ரி, பென்சில்வேனியா மாகாணம், அமெரிக்கா

வயது - 35

தோற்றம் - ஆணழகர்

திறமை - சுவாரஸ்யமாகப் பேசுவார்

படிப்பு - மழைக்குக்கூடப் பள்ளிக்கூடத்தில் ஒதுங்கியதில்லை

குடும்பம் மனைவி, மகன் மில்டன் (வயது 7) மகள் ஸெரினா (வயது 2)

பிடித்தது - சும்மா இருப்பது, ஊர் சுற்றுவது, வம்பு பேசுவது

பிடிக்காதது - வேலை பார்ப்பது

ஆசை- எப்படியாவது புகழ் பெற வேண்டும்

மனைவி, உறவினர்கள் மற்றும் ஊரார் கருத்து - பொறுப்பே இல்லாத உதவாக்கரை மனிதர்.

அம்மா ஃபானிதான் குடும்பத்தின் முழுச் சுமையையும் தாங்கினார். மாடு, கோழிகள் வளர்த்தார். முட்டைகள், வெண்ணெய் ஆகியவற்றை விற்றும் கஷ்ட ஜீவனம். அம்மாவும், இரண்டு குழந்தைகளும் பட்டினியோடு இருந்தவை பல நாட்கள். மில்டன் பள்ளிக்கூடம் போகத் தொடங்கினான். ஆனால், அம்மாவுக்குப் படிப்பில் பெரும் நம்பிக்கை கிடையாது. மகன் அப்பாவைப்போல் ஆகிவிடக்கூடாது, உழைப்பால் உயரவேண்டும் என்பது மட்டுமே அவர் ஆசை.

தங்கை ஸெரினா மேல் மில்டன் உயிரையே வைத்திருந்தான். ஸெரினாவின் ஐந்தாம் வயதில் அவளுக்கு ஜூரம் வந்தது, உயிரைப் பறித்தது. பொறுப்பில்லாத அப்பா, வறுமை, தங்கையின் மறைவு ஆகிய பல காரணங்கள். சிறுவயது முதலே, அதிகம் விளையாடமாட்டான். தனியாகச் சும்மா உட்கார்ந்திருப்பான்.

இரண்டரை வருடங்கள் மட்டுமே பள்ளிக்கூடம் போனான். படிப்பை நிறுத்திவிட்டு அம்மாவுக்கு உதவியாக இருந்தான். பதினான்காம் வயதில் அம்மா அவனை உள்ளூர் மிட்டாய்க் கம்பெனியில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். இடுப்பு ஒடியும் வேலை. முழுநேரமும் வேலையில் மட்டுமே கவனம் இருக்கவேண்டும். தண்ணீர், சர்க்கரை, பழ எசென்ஸ் ஆகிய மூன்றையும் பெரிய அண்டாக்களில் போட்டுச் சூடாக்குவார்கள். சரியான பதத்தில் அண்டாவைக் கீழே இறக்கவேண்டும். சில நிமிடங்கள் அதிகமாகிவிட்டால், பாகு கெட்டியாகிவிடும். உடையும்; பதத்துக்கு முன்னால் இறக்கினால் பாகு நீர்ப்பாக இருக்கும். வடிவமே கிடைக்காது. பதம் பார்க்கும் ரகசியத்தில் ஐந்தே வருடங்களில் மில்டன் தேர்ச்சி பெற்றுவிட்டான். தனியாகவே அவனால் மிட்டாய் தயாரிக்க முடியும்.

மிட்டாய் தயாரிக்கும் சொந்தத் தொழிலில் இறங்க மில்டன் விரும்பினார். உள்ளூரில் ஏற்கெனவே பல மிட்டாய்க் கடைகள் இருந்தன. ஆகவே, அருகிலிருந்த பிலடெல்ஃபியா நகரத்தில் கடை திறந்தார். பெரியம்மாவும், மாமாக்களும் முதலீட்டுக்குப் பணம் தந்தார்கள்.

அமோக வியாபாரம். சுவையாக மிட்டாய் தயாரிக்கத் தெரிந்தவர் கணக்கு வழக்கு விஷயங்களில் ஞானசூன்யமாக இருந்தார். தன் வாடிக்கையாளர்களுக்குக் கடன் கொடுத்தார். வசூலிக்கவில்லை. சப்ளையர்கள் பணம் கேட்டபோது கொடுக்கமுடியவில்லை. தலைக்குமேல் கடன் வாங்கினார். ஆறு வருடங்களில் கடையை இழுத்துமூடினார். ஊர் திரும்பினார்.

அப்போது, கொலராடோ மாகாணத்தில் பால் மிட்டாய்கள் தயாரித்துக்கொண்டிருந்தார்கள். மில்டன் அங்கே போனார். பால் மிட்டாய் தயாரிப்பின் எல்லா சூட்சுமங்களையும் சில மாதங்களிலேயே கற்றுக்கொண்டார். தன் தங்கை மகனை எப்படியாவது ஜெயிக்கவைக்க வேண்டும் என்று பெரியம்மாவுக்கு வெறியே இருந்தது. அவரும், மாமாக்களுக்கும் மறுபடியும் பண உதவி தந்தார்கள். நியூயார்க் நகரம் போனார். ஹூவர் என்னும் பிரபல மிட்டாய்க் கடையில் கொஞ்சம் நாட்கள் வேலை பார்த்தார். அடுத்து, சொந்தக் கடை தொடங்கினார்.

மில்டன் கடைக்குப் போகும் வழியில் கறுப்பின மக்கள் வாழும் குடியிருப்பு இருந்தது. வறுமை, மது, போதைப்பொருட்கள் தாண்டவமாடிய இடம். அடிக்கடி குத்துவெட்டுக்கள், கொலைகள் நடக்கும். குழந்தைகள் பள்ளிக்கூடம் போவதே கிடையாது. குப்பை பொறுக்கினார்கள், திருடினார்கள், வயதாக ஆகக் கிரிமினல்களானார்கள். இதைப் பார்த்த மில்டன் ரத்தக் கண்ணீர் விட்டார். “பணக்காரன் ஆனவுடன், ஏழைக் குழந்தைகள் கல்விக்காக ஏதாவது செய்யவேண்டும்” என்று உறுதி கொண்டார்.

மில்டன் தயாரித்த பால் மிட்டாய் தனிச்சுவையோடு இருந்தது. கூட்டம் அலை மோதியது. ஆனால், இப்போதும் மில்டனுக்கு வரவு செலவை நிர்வகிக்கத் தெரியவில்லை. கடை வாடகை, இயந்திரம் சப்ளை செய்தவருக்கு மாதத் தவணை ஆகியவை தர முடியவில்லை. கடையைக் காலி செய்துவிட்டு, ஓட்டாண்டியாகச் சொந்த ஊர் திரும்பினார்.

வயது 29. இரண்டு பிசினஸ் முயற்சிகள், இரண்டிலும் முழு இழப்பு. கையில் கால் காசு இல்லை. ஆனால், மில்டனின் ஜெயிக்கும் ஆசை குறையவில்லை. மிட்டாய் தயாரிப்பது தவிர வேறு ஒன்றும் தெரியாது. சொந்த பிசினஸ் நடத்திய பிறகு இன்னொருவரிடம் கைகட்டி வேலை பார்க்கவும் மனம் சம்மதிக்கவில்லை. ஆனால், இந்தத் தடவை பணம் தர மாமாக்கள் மறுத்துவிட்டார்கள். அம்மாவுக்கும், பெரியம்மாவும் கூட அவரிடம் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். ஆனால், பாசத்தால் அவரைக் கைவிட விரும்பவில்லை. அவர்களிடம் இருந்த கொஞ்சப் பணத்தைத் தந்தார்கள். தொழிலாளிகளுக்குச் சம்பளம் தர வசதியில்லை. ஆகவே, அம்மாவும், பெரியம்மாவும் அவனுக்கு உதவியாட்களாக இருந்தார்கள்.

ஒரு சிறிய அறையில் மில்டனின் மிட்டாய்த் தொழிற்சாலை தொடங்கியது. தன்னை நிரூபித்தேயாகவேண்டும் என்னும் வெறியோடு மில்டன் உழைத்தார். தன் கற்பனைக் குதிரையைத் தட்டிவிட்டார். அன்று எல்லோரும் பால் மிட்டாய்களில் பால் பவுடர் உபயோகப்படுத்தினார்கள். “கறந்த பாலைக் கலந்தால்….” வித்தியாசச் சிந்தனை மில்டன் மனதில் ஓடியது. அப்பப்பா, அற்புதச் சுவை கிடைத்தது. பலவிதப் பழச்சுவைகள், முந்திரி, பாதாம், வேர்க்கடலை போன்ற விதம் விதமான கொட்டைகள் சேர்த்தார். வகை வகையான பால் மிட்டாய்கள். தள்ளுவண்டியில் வைத்துத் தெருத் தெருவாகப் போய் விற்றார். “மிட்டாயில் இத்தனை ரகமா, இத்தனை சுவையா?” என்று மக்கள் அசந்துபோனார்கள்.

அந்த நாட்களில் இங்கிலாந்துதான் பால் மிட்டாய்களுக்குப் பெயர் பெற்ற நாடு. ஒரு இங்கிலாந்துக்காரர் பிலடெல்பியா வந்திருந்தார். தற்செயலாக மில்டனின் மிட்டாயைச் சுவைத்தார். அசந்துபோனார். சுமார் 500 டாலர்களுக்கு ஆர்டர் கொடுத்தார். இது பிரம்மாண்ட ஆர்டர். இந்த அங்கீகாரத்தால், பெரிய கடைக்காரர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கினார்கள். ஐந்தே ஆண்டுகளில், 4,50,000 சதுர அடிப் பரப்பளவு, நவீன இயந்திரங்கள் கொண்ட தொழிற்சாலையாக வளர்ந்தது.

மிட்டாய் தொழிலில் போட்டிகள் அதிகம். புதிதாக தனித்துவமாக எதைத் தயாரிக்கலாம் என்று மில்டன் மனம் அலை பாய்ந்தது. அப்போது, இங்கிலாந்தின் காட்பரீஸ், ஸ்விட்சர்லாந்தின் நெஸ்லே ஆகிய இரு நிறுவனங்கள் மட்டுமே மில்க் சாக்லேட்கள் தயாரித்தார்கள். அமெரிக்காவில் நல்ல பிரான்ட் எதுவுமே இல்லை. மில்டன் பிரம்மாண்டக் கனவுகள் காண்பவர், அதற்கான ரிஸ்க் எடுக்கத் தயங்காதவர். வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்த தன் நிறுவனத்தை போட்டியாளருக்கு விற்றார். அந்தப் பணத்தில், புதிய தொழிற்சாலை தொடங்கினார். விரிந்து பரந்த ஏரியா. பளபளக்கும் நவீன இயந்திரங்கள். ஒரு வருடக் கடும் முயற்சி. ஹெர்ஷி மில்க் சாக்லெட் பிறந்தது. சில வருடங்களில், நெஸ்லே, காட்பரீஸ் போன்ற சாக்லேட் உலகச் சக்கரவர்த்திகளுக்குச் சவால்விடும் சாம்ராஜியமாக வளர்ந்தது.

1903. மில்ட்டன் வயது 48. இருபது வருடங்களுக்கு முன்னால், நியூயார்க் நகரில் ஏழைக் குழந்தைகளுக்காகத் தான் சிந்திய கண்ணீரை மில்டன் மறக்கவில்லை. அவர்களுக்காக, உயர்தரமான இலவசப் பள்ளி தொடங்கினார். பிறகு தன் கோடிக் கணக்கான முழுச் சொத்துகளையும், இந்தப் பள்ளிக்கு எழுதிவைத்துவிட்டார்.

1945 ஆம் ஆண்டு, தன் 88 ஆம் வயதில் ஹெர்ஷி மரணமடைந்தார். ஆனால், ஹெர்ஷி சாக்லேட்களும். அவர் கல்விக் கண்களைத் திறந்துவைத்த பல்லாயிரம் ஏழைக் குழந்தைகளின் குடும்பங்களும், காலமெல்லாம் அவர் புகழை பரப்பிக் கொண்டிருக்கின்றன.

தொடர்புக்கு: slvmoorthy@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x